உங்களுக்கு வழிகாட்டி நீங்களே!

Spread the love

வாழ்க்கையின் ஏதோவொரு தருணத்தில், தோல்வியை சந்தித்து, துவண்டுபோய் ‘இனிமேல் அவ்வளவுதான்’ என்று அவநம்பிக்கை மேலெழும்போது, விவேகானந்தர் சொன்ன வார்த்தைகளை நினைவுபடுத்தினால் இதென்ன தோல்வி? இதையெல்லாம் தூசுபோல தட்டி விடுவேன் என்று எண்ணத்தில் தைரியம் பிறக்கும்.

இதோ அந்த பிரபலமான வாசகம்

“உனக்குத் தேவையான அனைத்தும் உனக்குள்ளேயே இருக்கிறது” என்ன ஒரு தீர்க்கதரிசனம். இந்தச் சொற்களுக்குள் சுடர்விடும் நம்பிக்கை நம் வாழ்வில் வெற்றியொளியை ஏற்றியே வைக்கும். நீங்கள் இந்த வாசகத்தை நம்புபவராக இருந்தால்? சில நேரங்களில் நமது யோசனைகளைப் பிறரைக் கேட்கச் சொல்லி வற்புறுத்து கிறோம். கேட்காவிட்டால் அவர்கள் மீது ஆத்திரம் வருகிறது.

ஒரு நாள் கூட நமது யோசனையை நாம் கேட்டதே இல்லை என்பதை சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? நாம் எப்படி பிறருக்கு யோசனை சொல்கிறோமா அதைப் போலவே நாமும் பிறரின் யோசனைகளைக் கேட்பதற்கே விரும்புகிறோம். நமது பிரச்சனைகளுக்குத் தீர்வை பல்வேறு மதகுருமார்கள், புத்தகங்கள், நண்பர்கள் என எல்லா இடத்திலும் தேடுகிறோம். ஆனால் அது நம்மிடமே இருக்கிறது என்பதை நாம் ஒருபோதும் அறிவதில்லை.

உங்களுடைய பிரச்சனைகளை, விருப்பங்களை அதை நிறைவேற்றும் வழிமுறைகளை, அதில் வரும் இடையூறுகளை, அவைகளை சமாளிக்கும் விதத்தை உங்களைத் தவிர தெளிவாகவும் துல்லியமாகவும் அறிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா? நீங்கள்தான் அதைத் துல்லியமாக அறிவீர்கள். எனவே, அனைத்துப் பிரச்சனைகளுக்கும் உங்களால் தீர்வு காண முடியும்.

ஒரு மிகப் பெரிய வர்த்தகத்தை துவங்க விரும்புகிறீர்கள். உங்களிடம் பணம் இல்லை. எனன செய்வீர்கள்? உங்களுக்குத் தெரிந்த பணக்கார நண்பர்களிடம் பணம் கடன் கேட்பீர்கள். அவர்கள் கொடுத்து உதவினால், தொழிலைத் துவங்குவீர்கள். அல்லது வங்கிக் கடனுக்கு முயற்சிப்பீர்கள். கடன் கிடைத்தால் தொழில் துவங்குவீர்கள்.

இங்கே யார் உங்களுக்கு வழிகாட்டி?

உங்களுக்குப் பணம் கொடுத்து உதவிய நண்பர்கள் என்று சொல்வீர்கள் அல்லது கடன் கொடுத்து உதவிய வங்கி என்பீர்கள். இரண்டுமே இல்லை. நீங்கள் தேர்வு செய்திருக்கும் வர்த்தகம் லாபகரமாக நடக்கும் என்ற நம்பிக்கை இருந்ததனால்தான் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு பணம் கொடுத்திருக்கின்றனர். அதனால் தான் வங்கி கடன் கொடுத்திருக்கிறது.

எனவே, உங்களுக்கு லாபம் தரக் கூடிய ஒரு தொழிலைத் தேர்வு செய்தது நீங்கள்தானே. அதுதான் உங்களது தகுதி. உதவி பெறுவதற்கும் தகுதி வேண்டும்.

எனவே, நீங்களே உங்களுக்கு சிறந்த வழிகாட்டி.

உங்களை வழி நடத்த, உங்களை வளர்க்கத் தேவையான அனைத்து சக்திகளும் உங்களிடம் இருக்கிறது. உங்களுக்குள் புதைந்து கிடக்கும் அபூர்வமான யோசனைகளை, அற்புதமான செயலாற்றலை வெளியே கொண்டு வருவது மட்டும்தான் உங்களது வேலை. சமூகமும், நீங்கள் படித்த புத்தகங்களும், உங்களைச் சுற்றியுள்ள போதனையாளர்களும், நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? உங்களுக்குள் இருக்கும் ஆற்றல் என்ன? என்பதைத் தெரிய விடாமல் தூசியைப் போல மூடி மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அவற்றையெல்லாம் தூசி தட்டிப் பாருங்கள். உங்களுக்குத் தேவையான அனைத்தும் உங்களிடமிருந்தே கிடைக்கும்


Spread the love