யோகா என்றால் என்ன?
யோகா என்பது ஒழுக்கம் என்ற பொருளைக் குறிக்கும். நாம் நமது மனதைக் கட்டுப்படுத்தி நம் உள்ளே இருக்கின்ற ‘இறை சக்தி’யை அல்லது ‘இறை தன்மை’யை அறிய உதவும் பயிற்சி தான் யோகாப் பயிற்சியாகும்.
முறையாகத் தொடர்ந்து செய்யப்படும் யோகா மூளைக்கு சீரான இரத்த ஒட்டத்தையும் மூளைக்கு புத்துணர்ச்சியையும் தரக் கூடியது. இதனால் மூளையில் செயல் திறன் அதிகரிக்கின்றது. உடலின் செயல்பாடுகள் சீராகுகின்றன. இதன் மூலம் ஞாபக சக்தி அதிகரிக்கின்றது.
தூக்கமின்மை, ஒய்வின்மை கவனக் குறைவு குழப்பமான மனநிலை தேவையற்ற பயம் ஆகியவை மூளையின் செயல்பாட்டிற்கு இடையூறு தரக் கூடியவை. யோகா இவற்றை போக்கி இத்தகைய பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான மனநிலையையும் நல்ல மூளைச் செயல்பாட்டையும் ஞாபக சக்தியையும் தருகின்றது.
உலகளவில் கிட்டத்தட்ட எல்லா வெளிநாடுகளிலும் யோகாவின் நன்மைகளைப் புரிந்து கொண்டு செயல்பட ஆரம்பித்துள்ளனர். ஜெர்மானியில் எட்டுப் பேரில் ஒருவர் யோகாப் பயிற்சி செய்பவராக இருக்கின்றார். நார்வே ஸ்வீடன் போன்ற நாடுகளிலும் மக்கள் அதிகமாக யோகாப் பயிற்சி மேற்கொள்கின்றனர். அங்குள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உடற்பயிற்சி போல யோகாப் பயிற்சி அளிக்கப்படுகின்றது.
உலகம் முழுவதும் பரவி இன்று உலக மக்கள் அனைவரின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள யோகக் கலையின் பிறப்பிடம் நம் இந்தியா என்பதில் அனைத்து இந்தியர்களும் பெருமைப்படலாம். நம் நாட்டில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ரிஷிகளும், முனிவர்களும் தொடர்ந்து மேற்கொண்ட தவத்தில் கிடைத்த பொக்கிஷம் தான் யோகக் கலை.
யோகக் கலையின் நோக்கம் மனிதனுக்கு உடல், பிராண சக்தி, மனம், புத்தி ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படச் செய்து ஆரோக்கியம், நிம்மதி மற்றும் சந்தோஷத்தைக் கொடுப்பதே ஆகும்.
யோகக் கலையின் முக்கியத்துவமே மூச்சுப் பயிற்சியில் தான் அடங்குகின்றது. மூச்சுப் பயிற்சி சீராக சீராக உடலின் இயக்கங்கள் சீராகும். இதனால் உடலின் அனைத்து உறுப்புகளும் வலுப் பெறும்.
உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நமது மனம் ஆரோக்கியமாக இருக்கும். நமது மனம் ஆரோக்கியமாக இருந்தால் தான் நமது செயல்பாடுகள் ஆரோக்கியமாக நன்மையைத் தரும் விதமாக அமையும். யோகா என்பது நமது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான ஒர் ஒப்பற்ற பயிற்சியே ஆகும்.
யோகா என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வுலகில் மதங்கள் தோன்றுவதற்கு முன்னர் தோன்றியது. எனவே இதனை எல்லா மதத்தினரும் செய்யலாம். இவ்வுலகில் உள்ள அனைத்து மனிதர்களும் ஆரோக்கியமாகவும், நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருப்பதற்காகவே தோன்றியது தான் இந்த யோகக்கலை.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகக் கலையை இன்று நம்மிடம் உருக் குலையாமல் கொண்டு வந்து சேர்ந்துள்ள பெருமை இருவரையே சாரும். அவர்கள் ஸ்ரீராமரின் குருவான வசிஷ்ட மகரிஷியும் ஸ்ரீ பதஞ்சலி முனிவருமாவர். இதற்கான ஆதாரங்கள் பழங்கால நூல்களிலும் ஏட்டுச் சுவடிகளிலும் காணப்படுகின்றன. “யோக சூத்திரம்” என்ற நூலை அருளியவன் ஸ்ரீ பதஞ்சலி முனிவர். இதில் யோகா பற்றிய பல சூட்சமங்கள் விளக்கப்பட்டுள்ளன.
இவர்களைத் தவிர ஸ்ரீ கிருஷ்ணர் தனது பகவத் கீதையில் பக்தி யோகம், இராஜ யோகம், ஞான யோகம், கர்ம யோகம் என்று நான்கு விதமான வழிகளை விளக்கியுள்ளார். மற்றும் திருமூலர் அருளிய ‘திருமந்திரம்’ போன்றவையும் யோகாவின் பெருமையை விளக்கியுள்ளன.
சமீப காலத்தில் தோன்றிய சுவாமி விவேகானந்தரும் அரவிந்தரும் யோகாவை உலக நாடுகளில் பரவிடச் செய்த மகான்களாவர். இத்தகைய பெருமை வாய்ந்த யோகக் கலையை நம் வருங்கால சந்ததியினருக்குக் கொண்டு செல்ல வேண்டிய பெரிய பொறுப்பு நம்மிடையே உள்ளது. அப்பொழுது தான் இப்பயனை நம் சந்ததியினரும் பெற முடியும்.
யோகா எப்போது செய்யலாம்?
குளித்து விட்டுச் செய்யலாமா? குளிப்பதற்கு முன்பு செய்யலாமா? என்ற சந்தேகம் எழுகின்றது. யோகா குளித்து விட்டும் செய்யலாம், குளிப்பதற்கு முன்பும் செய்யலாம் அது அவரவர்கள் வசதியைப் பொறுத்தது. யோகா செய்யும் பொழுது உடலின் உஷ்ண நிலை சீராக அதிகரிக்கின்றது. அதே சமயம் குளிக்கும் பொழுது உடலின் உஷ்ண நிலை குறைகின்றது. எனவே குளிப்பதற்கும் யோகா செய்வதற்கும் இடையே போதுமான இடைவெளி இருத்தல் அவசியம். எனவே குளிப்பதற்கு முன்னர் யோகா செய்தால் அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். குளித்த பின் யோகா செய்வதாக இருந்தால் அரைமணி நேரம் கழித்து யோகா செய்ய வேண்டும். அப்பொழுது தான் உடலின் உஷ்ண நிலை சீராக இருக்கும்.
யோகா எவ்வளவு நேரம் செய்யலாம்?
ஒவ்வொருவருக்கும் வரும் சந்தேகம் இது. எந்த ஆசனத்தை எவ்வளவு நிமிடம் செய்ய வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் எவ்வளவு நேரம் இருக்க வேண்டும்- என்பன. யோகாவின் போது அவ்வாறு எந்தக் கணக்கும் இல்லை ஒவ்வொரு நிலையிலும் சில நிமிடங்கள் இருக்க வேண்டும் என்ற கணக்கு எதுவும் கிடையாது.
உச்சநிலையை அடைந்தவுடன் எத்தனை முறை மூச்சை உள்வாங்கி வெளி விடுகிறோம் என்பது மட்டும் தான் கணக்கு. ஒவ்வொரு ஆசனத்தின் உச்சநிலையிலும் குறைந்தது 10 &- 12 முறையாவது மூச்சை உள்வாங்கி வெளி விடுவது அவசியம். முன் புறம் குனிந்த நிலையில் உச்சநிலையில் ஒரிரு எண்ணிக்கைகளை வேண்டுமானால் குறைத்துக் கொள்ளலாம்.