யோகம் பெற யோகப் பயிற்சி

Spread the love

நம் வாழ்க்கை நம் கையில்

நகரவாசிகளுக்கு ‘ஏர்லி மார்னிங்’ 8 மணிதான் என்பார்கள். இது ஆண்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். பெண்களுக்கு பொருந்தாது. காலையில் 6 மணிக்கே அவள் கண் விழிக்க வேண்டியிருக்கும். ஃபிரிட்ஜில் இருக்கும் பாலை எடுத்து காபி போட்டுவிட்டு, கணவனை எழுப்பி கொடுக்க வேண்டியிருக்கும். நர்சரி வகுப்பு படிக்கும் தன்னுடைய குழந்தையை எழுப்பி, தயார்படுத்த வேண்டும். காலை டிபனுக்கும், மதிய சாப்பாட்டுக்கும் சமையல் செய்ய வேண்டும். குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு, கணவனுடனோ அல்லது தனியாகவோ அலுவலகத்துக்கு செல்ல வேண்டும். அங்கே காலையில் ஆரம்பித்து இடுப்பொடிய வேலை. உடலுக்கும், மனதுக்கும் அசதி. மாலையில் வீடு திரும்பினால், மீண்டும் சமையல், குழந்தைக்கு சொல்லித் தருதல் என வேலை நீளும்.. இரவில் தூங்கும்போதுதான் அவர்களுக்கு ஓய்வு. பல குடும்பங்களில் ஆணும் பெண்ணும் இருவருமே இந்த வேலைகளை பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதால் மேலே சொன்ன விஷயங்கள் இருபாலருக்கும் பொருந்தும்.

கையில் காசில்லாதவன் கடவுளே ஆனாலும் கதவை சாத்து என்பார்கள். பணம் வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவை. பணமின்றி ஓர் அணுவும் அசையாது. வாழ்க்கை நடத்த.. குழந்தைகள் படிப்புக்கு செலவழிக்க.. வருங்காலத்துக்கு சேமிக்க.. பண்டிகைகளுக்கு துணி மணி எடுக்க.. திருமணத்திற்கு நகை நட்டு வாங்க.. மருத்துவ செலவுகளுக்கு என்று ‘காசு, பணம், துட்டு, மனி, மனி.. என்று இன்றைய வாழ்க்கை ஆகிவிட்டது. ஐ.டி. துறைகளில், பி.பி.ஓ.க்களில் தூக்கத்தையும், உடல் நலத்தையும், மன நலத்தையும் தொலைத்துவிட்டு ஆண், பெண் இருபாலாரும் உழைக்கிறார்கள்.. உழைக்கிறார்கள்.. உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். சமைக்க கூட நேரமில்லை.. சாப்பிடக் கூட நேரமில்லை. செயற்கை உணவுகளை சாப்பிட்டு செரிமானத்துக் சேதத்தை விளைவித்துக் கொள்கிறார்கள்.

 நவீன இயந்திர கதியான வாழ்க்கையில் இயந்திரங்களைப் போல இயங்கிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு நல்லது நடக்காதா? நடக்கும் இதற்கான தீர்வு யோகாவில் இருக்கிறது. யோகாவை பன்முக நிவாரணி என்று சொல்லலாம்.

உடல், மூச்சு, உள்ளம், ஆளுமை, மனம் என்று பல தளங்களில் யோகா வேலை செய்யும். உங்களுக்கு பரம சந்தோஷம் கிடைக்கும்.

நம்மில் பலர் தினமும் உடற்பயிற்சி செய்வதில்லை. கேட்டால் அதற்கான நேரம் இல்லை என்போம். இது பலருக்கு பொய் காரணமாகவும், சிலருக்கு உண்மை காரணமாகவும் இருக்கலாம். ஆனால், உடற்பயிற்சி செய்வதற்கான நேரத்தை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஏதாவது சாக்குபோக்கு சொல்லி தட்டிக் கழிக்க கூடாது. சர்க்கரை நோயாளிகள் மட்டும்தான்.. வேறு வழியின்றி தினமும் காலை மாலை வேளைகளில் பூங்கா, கடற்கரை என்று நடைநடையாய் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

தினமும் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. உடலுக்கு எந்த விதமான பயிற்சியும் தராவிட்டால் தசைகள் இறுகிப் போயிருக்கும். பிடிப்பு அதிகம் இருக்கும். பல வலிகள் இருக்கும், இதனால் மூச்சின் உள்-வெளி அளவு பெரும்பாலும் குறைவாகவே இருக்கும். இதனால், மனம் ஒரு நிலையில் இருக்காது. மனம் குரங்கைப் போல் மாறிவிடும். ஒரே நேரத்தில் பல எண்ணங்கள் மனதில் சுழலும். மனம் அலை பாயும். எரிச்சல், கோபம், மன அழுத்தம் எல்லாம் வந்து சேரும். இதனால், பல உறுப்புகள் சரிவர வேலை செய்யாது. சரியாக செரிமானம் ஆகாது. தூக்கம் பிடிக்காது. அமைதி கெடும். உடலுக்கு தேவைப்படும் சக்தி கிடைக்காது. ஆரோக்கியம் கெடும். அவநம்பிக்கை கூடும். எந்த விஷயத்திலும் சரியாக கவனம் செலுத்த முடியாது. இவர்களுக்கான ஒரே தீர்வு யோகாதான்.

நடைப்பயிற்சி செய்யும்போது, உடல் அசைவினால் ரத்த ஓட்டம் சீராகும். மூட்டுகள் நெகிழ்வுத்தன்மை பெறும், இதயம் நன்கு வேலை செய்யும். புத்துணர்ச்சி கிடைக்கும். ஜிம்முக்கு போகிறவர்கள் பெரும்பாலும் உடலை வலிமையாக்கப் போகிறார்கள்; ‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டுக்காக போகிறார்கள்; எடையைக் குறைக்கப் போகிறார்கள். கராத்தேயால் உடலுக்கு வலிமை, மனதுக்கு வலிமை கிடைக்கும். இப்படி உடற்பயிற்சிகளின் நன்மைகளைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால், இந்தப் பயிற்சிகளால் உடல் அளவில்தான் மாற்றங்கள் நடக்கின்றன. மனதளவில் தேவையான மாற்றங்கள் நடப்பதில்லை. அதனால் அதுவே ஒரு பழக்கமாகி, இயந்திரத்தனமாக மாறிவிடுகிறது. பலன்களும் குறைந்துவிடுகின்றன. யோகாவை அவ்வாறு செய்யக்கூடாது. மனதை அலையவிட்டு, உடற்பயிற்சி போல் அதையும் மாற்றிவிட்டால் அதிக பலன் கிடைக்காது. மனதை ஒருமுகப்படுத்தி யோகா செய்யும்போது, நாம் எதிர்பார்த்த பலனைப் பெறலாம். மன அமைதியைப் பெறலாம்.

மூச்சு குறித்த கவனத்தோடு ஒவ்வொரு ஆசனத்தையும் செய்வதே சிறந்த முறை. ஆசனத்துடன் மூச்சுப் பயிற்சி இல்லாமல் இருப்பதால், மனம் பெரும்பாலும் பயிற்சியின் மீது கவனமாக இருப்பதில்லை. கடினமான ஆசனங்களை முதலில் செய்ய ஆரம்பிக்கும்போது மனம் பயிற்சியுடன் இருக்கும், அதுவே நீண்ட நாட்கள் செய்யும்போது, நன்கு பழகிப்போகும்போது, மனம் வெளியில் பறந்துவிடுகிறது.

பயிற்சி செய்பவர்களின் இயல்பு, எண்ணங்கள், பயிற்சி, ஈடுபாடு, யோகாவைப் பற்றிய புரிதல், அறிவு முதலானவை நிறைவாக அமையும்போது, அந்த யோகா வகுப்பு மிகச் சிறப்பாக – பலன் தருவதாக அமையும். அதற்கேற்றாற்போல் ஒரு யோக முறையை, ஒரு யோகா ஆசிரியரை நமக்கு ஏற்ப நாம் தேட வேண்டும்.

பயிற்சியைச் செய்கிறபோது, மகிழ்ச்சியாய் செய்ய வேண்டும். ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். ஆபீஸ் டென்ஷன், வீட்டு தொல்லை போன்றவற்றை மனதில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். தொடக்கத்தில் இது சிரமமாக இருக்கலாம். நாம் மனது வைத்தால் இந்த நிலை போகப்போக மாறிவிடும்.

உடல் வலி, ஆஸ்துமா, மூச்சு பிரச்சினை, தூக்கம் இன்மை, வயிறு சரியில்லை, முட்டி வலி, மனம் ஒரு நிலைப்படவில்லை, மனஅழுத்தம் என்று பலர் யோகா பயிற்சிக்கு வருவார்கள். அந்தப் பிரச்சினை சரியானதும் பயிற்சியை நிறுத்தி விடுவார்கள். பிறகு வேறு பிரச்சினை வரும்போது, திரும்பவும் வருவார்கள். இது கூடாது. தொடர்ந்து பயிற்சிகளை செய்ய வேண்டும்.

யோகா செய்யத் தொடங்கிய ஒரு சில நாட்களில் மனம் அமைதியடையும், எண்ணங்கள் சீர்படும். ஆகவே எரிச்சல் குறையும், தூக்கம் சுகமாகும், நாள் முழுதும் சக்தி கிடைக்கும், மகிழ்ச்சி அதிகமாகும். நாள்தோறும் பயிற்சியைத் தொடங்கும்போது அவர்களுக்குள் அமைதி ஏற்படும். விஷயங்களை அழகாக, சரியாக யோசிக்க அந்த அமைதி துணை செய்யும். உள் உறுப்புகளின் ஆரோக்கியம், மகிழ்ச்சி, உடலில் ஓர் அழகு, முகத்தில் தெளிவு என்று உங்களில் மலர்வீர்கள்.

யோகா உடலின், மனதின் தொடப்படாத இடங்களைத் தொடும். அந்தப் பகுதிகள் தொடப்படும்போது, புதிய பரிமாணங்கள் நம்மிடம் வெளிப்பட வாய்ப்பு உண்டு. அது உடல் அளவில், மூச்சு அளவில், மன அளவில், ஆளுமை அளவில் எனப் பல நிலைகளில் ஏற்படலாம்.

யோகா நமக்கு நிறைவான நல்ல பலன்களைத் தரும். அப்படி தரவில்லை என்றால் நாம் சரியான முறையை தேர்ந்தெடுத்திருக்க மாட்டோம். அல்லது சரியான ஆசிரியர் கிடைத்திருக்க மாட்டார். அல்லது நாம் தொடர்ச்சியாக, சரியாகப் பயிற்சியைச் செய்திருக்க மாட்டோம். நமக்கு சரியான யோக முறையையும், நல்ல ஆசிரியரையும் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து யோகப் பயிற்சி செய்வோம். வாழ்வில் அனைத்து யோகங்களையும் பெறுவோம்!


Spread the love