‘மாதராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்’, ‘பெண்மை வாழ்க வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்றான் மகாகவி பாரதி. உடல் முழுக்க நகையணிந்து, நள்ளிரவில் ஒரு பெண் நடமாடினால்தான் நாம் சுதந்திரம் அடைந்ததாக அர்த்தம் என்றார் மகாத்மா காந்தி. மகாத்தமாக்கள் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். வெறும் ஆத்மாக்களான மனிதர்கள் நாம் அதை மறந்து விட்டோம். நதிக்கரையில் பிறந்தது நாகரீகம் என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால், அதில் இன்னும் எவ்வளவு அழுக்கு.
டெல்லியில் நிர்பயாவில் ஆரம்பித்து பெண்கள் மீதான வன்கொடுமை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் வீடுகள், கல்வி நிலையங்கள், பொது இடங்கள், பணி செய்யும் இடங்கள் என அனைத்து இடங்களிலும் உள்ளன. பெண் சிசுக் கொலைகள், கருக்கொலைகள், பெண் குழந்தைகள் கடத்தல், குழந்தைத் திருமணங்கள், பெண் கல்வி மறுப்பு, காதலித்தால் கவுரவக் கொலைகள், காதலிக்க மறுத்தால் ஆசிட் வீச்சு, பணியிடங்களில் பாலியல் வன்முறைகள், அதை எதிர்த்து நின்றால் பணி நெருக்கடிகள், வரதட்சணைக் கொடுமைகள், குடும்ப வன்முறைகள் என அடுக்கடுக்காய் அதிர வைக்கும் கொடுமைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
கடந்த 2013ம் ஆண்டு மட்டும் 923 பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி உள்ளனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது 2012ம் ஆண்டு நடந்த பாலியல் பலாத்கார வழக்குகளை விட 19 சதவீதம் அதிகம். குறிப்பாக ஒருநாளைக்கு 3 பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகின்றனர். இவை காவல்துறையின் கவனத்திற்கு வந்து காவல்துறை பதிவு செய்த வழக்குகளாகும். காவல் துறையின் கவனத்திற்கு வராமலும், வந்தும் வழக்கு பதிவு செய்யப்படாமலும் உள்ள வன்முறைச் சம்பவங்கள் ஏராளம் உண்டு.
உலகம் உள்ளங்கையில் சுருங்கி விட்டது. நம் கையடக்க ஸ்மார்ட் போனில் எல்லா வசதிகளும் வந்து விட்டன. அறிவியல் தொழில் நுட்பங்கள் அந்த அளவுக்கு வளர்ந்து விட்டன. அதேபோல், சைபர் கிரைம்களும் சத்தமில்லாமல் பெருகி விட்டன. அதிகரித்து வரும் போதைப் பழக்கமும், ஊடக சித்தரிப்பும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும், குடும்ப வன்முறைகளும் அதிகரிப்பதற்கு காரணங்களாக உள்ளன. கடலூர், அரியலூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 900ஐ விடக் குறைவாகவே பெண் குழந்தைகளின் எண்ணிக்கை உள்ளன. இதன் மூலம் ஆண் குழந்தைகளை விரும்பும் சமூகமாகவே நம் சமூகம் உள்ளது என்பதை தெளிவாக உணர முடிகின்றது.
பெண்கள் மீதான பாலியல் வன்முறை வழக்குகளில் 26 சதவீதம் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள். பெரும்பாலான வழக்குகளில் தீர்ப்புக்காக 10, 15 ஆண்டுகள் பாதிக்கப்பட்ட பெண்கள் காத்துக் கிடக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பெண்களை பாதுகாக்கும் சட்டங்கள் இல்லாமல் இல்லை. ஆனால், அவை நடைமுறையில் இல்லை. ஏட்டளவிலேயே இருக்கின்றன. பெண்கள் மீதான வன்முறைகளை விசாரித்திட மகளிர் சிறப்பு நீதிமன்றங்களும் மாவட்டங்கள் தோறும் அமைக்கப்பட வேண்டும்.
பாலியல் தொல்லையால் பள்ளி மாணவிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. அனைத்து கல்வி நிலையங்களிலும் பாலியல் புகார் கமிட்டி அமைத்திட வேண்டும். பெண்கள் பள்ளியில் ஆண்களை ஆசிரியர்களாக பணியாற்ற அனுமதிக்க கூடாது.
சாதி பாகுபாடு காரணமாக இந்தியாவில் கவுரவக் கொலைகள் பெருகி வருகின்றன. 2010ம் ஆண்டில் இந்தியாவில் 1000 கவுரவக்கொலைகள் நடந்ததாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது. வட இந்தியாவில் ஆரம்பித்த கவுரவக் கொலைகள் தமிழகத்திலும் பெருகி விட்டது. ‘காதலினால் மானுடர்க்கு வாழ்வுண்டாம்.. ஆதலினால் காதல் செய்வீர் ஜெகத்தீரே!’ என்று பாடிய மகாகவி பாரதி வாழ்ந்த மண்ணில் கவுரவக் கொலைகள் நடப்பது நல்லதா? நாகரீகமா? சிந்தித்துப் பார்க்க வேண்டும். கவுரவக் கொலைகளுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் தனிச்சட்டம் இயற்றி உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அனைவருக்கும் கல்வி அவசியம். அதிலும் பெண்களுக்கு கல்வி மிகவும் அவசியம். ஒரு பெண் கல்வி கற்பதால் ஒரு தலைமுறையையே முன்னேறச் செய்ய முடியும். பெண் கல்வியை பேணுதல் என்பது காலத்தின் கட்டாயம். சென்னை போன்ற பெருநகரங்களில் பெண் கல்வியை பேணுகிறார்கள். மற்ற பகுதிகளிலோ பெண் கல்வி இன்னமும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். எல்லா பெண்களுக்கும் உயர் கல்வி படிப்பை உத்திரவாதம் செய்ய வேண்டும்.
மக்கள் தொகையில் சரி பாதி பெண்கள். ஆனால், அனைத்து இடங்களிலும் அவர்களுக்கு சமத்துவம் மறுக்கப்படுகிறது. பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் இன்னும் நொண்டியடித்துக் கொண்டே இருக்கிறது. இவை அனைத்தையும் நிறைவேற்றி முடிக்க வேண்டும். அதன் பிறகு பெண்மை வாழ்க வாழ்கவென்று கூத்தாடுவோம். அதுவரை பெண்களை வாழ வைக்க முயற்சி எடுப்போம்.