மகளிர் நலம்

Spread the love

“மங்கையராக பிறப்பதற்கே, நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” என்றார் பாரதியார்.

“பெறுமவற்றுள் யாமறிவது இல்லை, அறிவறிந்த மக்கட் பேறு அல்ல பிற” என்றார் திருவள்ளுவர்.

இல்வாழ்வான் பெறும் பேறுகளில் அறிய வேண்டுவற்றை அறியவல்ல நன்மக்களை பெறுவது அல்லாமல் வேறு எந்த பேற்றினையும் யாம் மதித்துப் போற்றுவதில்லை என்பது இந்த குறளின் உரை.

பெண்களின் பெரும் பொறுப்பு குழந்தைப் பேறு, உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பெண்கள் சமாளிக்க வேண்டிய பெரும் பொறுப்பு இது தான். இதனால், பெண்கள் ஆண்களைவிட அதிக காலம் வாழ்ந்தாலும், பல பிரச்சனைகள், வேதனை, சங்கடங்களை சந்திக்க நேரிடுகிறது. இதனால் தான் மென்மையான பெண்களுக்கு மன உறுதியையும், பொறுமையையும், தாங்கும் சக்தியையும் இறைவன் அளித்திருக்கிறார் போலும்.

பூப்பு:-

பூப்பு என்பது சிறுமிகள் பெண்களாகும் காலகட்டம். இது பொதுவாக 10-16 வயதுக்குள் ஏற்படும். எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பெண்ணுக்கு பெண் மாறுபடும். எனவே, பூப்பு காலம் தொடங்கும் வயதைப் பற்றி கவலை வேண்டாம். பெண்ணின் உடல் வாகு, ஆரோக்கியம் இதை முடிவு செய்யும்.

பூப்பு காலத்தின் உடல்நிலை மாற்றங்கள்:

பூப்பு ஏற்படுவது ‘பிட்யூடரி’ (Pituitary) சுரப்பி, சுரக்கும் இரண்டு ஹார்மோன்களால் தான். ஒன்று  Luteinizing  ஹார்மோன் (சினை முட்டை உற்பத்தியை ஊக்குவிக்கும் ஹார்மோன்) மற்றொன்று Follicle Stimulating ஹார்மோன் (‘ஓவரியின்’ Follicles களை ஊக்குவிக்கும் ஹார்மோன்கள்) இவற்றால் மார்பகம், Ovaries, யோனி, கர்பப்பை ((Uterus) இவைகள் பெரிதாகி வளர்ச்சி அடைகின்றன. முதலில் மார்பக வளர்ச்சி ஆரம்பமாகும். மார்பக வளர்ச்சிக்கும், மாதவிடாய் ஏற்படும் காலத்துக்கும் நடுவில் சாதாரணமாக 21/2 வருடங்கள் ஆகலாம். பெண்கள் உடல் எடை கூடும்.

மாதவிடாய்

மாதவிடாய் என்பது உடலானது கொஞ்சம் திரவத்தை (ரத்தம் உட்பட) யோனியின் மூலம் வெளியேற்றுவது. ஒவ்வொரு மாதமும் ஒரு மென்மையான படலம் (Soft lining) பெண்ணின் கருப்பைக்குள் தடிமனாகும். கர்ப்பமடைந்தால் வளரும் கருப்பைக்கு ஊட்டமளித்து பாதுகாக்க இது தேவைப்படும். கர்ப்பமடையாவிட்டால் தேவையில்லை. எல்லாம் யோனி வழியாக வெளியேறிவிடும்.

இது தான் மாதவிடாய் என்பது. இது குறைவில்லாத, ஆரோக்கியமான உடலுக்கு அடையாளம். மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் இயற்கையாக நடைபெறும் நிகழ்ச்சிகளில் ஒன்று. அதில் கவலைப்படவோ இல்லை கூச்சப்படவோ ஒன்றுமில்லை.


Spread the love