குளிர் காலத்தில் தோலில் எண்ணைப் பசை குறைந்து தோலுக்கு வறண்ட தன்மை ஏற்படும். இதனால் தோல் சுருங்குதல், சருமத்தில் வெள்ளைப் புள்ளிகள், கொடுகள் தோன்றும். நம் சருமம் எப்படி இருந்தால் அழகாக இருக்கும் என நாம் நினைப்போமோ அதற்கு எதிராக மாறி மனதை வாட்டும்.
குளிர்காலத்தில் தொடக்கத்திலிருந்தே சருமத்துக்கு பாதுகாப்பு கொடுப்பது தான் இதற்கான தீர்வு. குளிர் காலத்தில் நம் தோலில் ஒரு கதகதப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை உடம்பை முழுவதும் மூடுவது போல் ஆடை அணிதல் நல்லது, சுடிதார் அல்லது குர்தி என்றால் முழுக்கை வருவது போலப் போடலாம். அதிகம் பாதிப்பு இருப்பவர்கள் இரவு நேரங்களில் கை கால்களில் சாக்ஸ் அணிவது நல்லது. சாக்ஸ் அணிவதால் பாதங்கள், உள்ளங்கை போன்றவை வறண்டு போகாது பாதுகாக்கப்படும்.
இந்த வறண்ட தன்மையைப் போக்குவதற்கு என்ணைத் தன்மையுள்ள எல்லாப் பொருள்களையும் உபயோகிக்கலாம். நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் எள், ஓமம், கடுகு, கசகசா, பாதாம் பருப்பு, வெள்ளரிவிதை, தேங்காய் போன்ற பொருள்களில் எண்ணைத் தன்மை உள்ளது. இவற்றின் அதனதன் பயன்பாட்டிற்கேற்ப சாப்பிடவும், சிலவற்றை வெளியில் தடவவும் உபயோகித்தால் சருமத்தின் வறட்சி நீங்கி பளபளப்பு கிடைக்கும்.
இந்தப் பட்டியலில் பெரிய அளவில் கை கொடுக்கவல்லது எள்! கிராமப்புறங்களில் எள் பயிரிடும் விவசாயிகள் எள்ளுக்காயை உலர்த்தும்போது அதில் வீணாகிப் போன காய்களை அப்படியே கை, கால் உடம்புக்குத் தேய்த்துக் குளிப்பார்கள் நம்மைவிட அதிகமாகப் பனியிலும், குளிரிலும் திரியும் அவர்களுக்கு இந்த வறட்சிப் பிரச்சனை வருவதே இல்லை. காரணம் அவர்கள் உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கும் அந்த எள்ளில் இருக்கும் எண்ணைப் பசை.
நம்மில் பலர் எள் உடம்புக்கு சூடு என்று நினைத்து அதை சாப்பிடமாட்டார்கள். எள்ளை சாப்பிட்டால் சீக்கிரம் மாதவிலக்கு வந்துவிடும் என்று நினைத்து இதைத் தவிர்க்கும் பெண்களுமுண்டு ஆனால் அது உண்மையல்ல. எள்ளில் வெள்ளை எள், கருப்பு எள் என்று இரண்டு வகை உள்ளது. கருப்பு எள்ளை சுத்தம் செய்து அப்படியே அரைத்து கணுக்கால், முழங்கை, முழங்கால், உள்ளங்கால், உள்ளங்கைகளில் தடவி பின்னர் குளிர்ந்த தண்ணீரில் கழுவுங்கள் எள்ளை அலசிய தண்ணீரைக் கீழே ஊற்றாமல் அதில் முகம் கழுவலாம் உடம்புக்கும் குளிக்கலாம் பளபளப்பு கொடுக்கும்.
எள்ளை வெறும் வாணலியில் வறுத்து ஏலக்காய் சேர்த்து தேவையான வெல்லமும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து உருண்டை பிடித்தோ, அப்படியேயோ சாப்பிடலாம். இதுவும் உடலின் வறட்சித் தன்மையை விரட்டியடிக்கும் வழிதான்.
இது தவிர மேலே சொல்லியிருக்கும் எண்ணைப் பசையுள்ள உணவுப் பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் போதும். குளிர்காலத்தில் உங்கள் சருமம் நார்மலாகவே இருக்கும் அதிசயத்தைக் காண்பீர்கள்.