குளிர் காலத்தில் சருமத்தினை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம்?
கோடை காலத்தில் தான் சருமப் பாதுகாப்பு அவசியம், குளிர் காலத்தில் தேவையில்லை என்று பெரும்பாலானோர் கருதுகின்றனர். அது தவறானது. வெயில் காலத்தில் அனல் மற்றும் காற்றினால் உங்கள் சருமம் உச்சி முதல் உள்ளங்கால் வரை மிகவும் பாதிப்படைந்திருக்கும். குளிர் காலத்தில் அந்த பிரச்சனை இருக்காது. குளிர் காலத்தில் போதுமான அளவு ஓய்வும்சருமத்தில் ஒரு புத்துணர்வும் இருக்கும் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள். அதுவும் தவறு. குளிர் காலத்தில் ஏற்படும் சீதோஷ்ண நிலையும், குளிர் காற்றும் உங்கள் சருமத்திற்கு பாதிப்பைத் தரும். தோலின் மேற்புற அடுக்கான எபிதெலியல் சுற்றுச் சூழல் ( வெயில், குளிரினால் ) பாதிப்பின் காரணமாக கீழ் அடுக்கு வரை பாதிப்பைத் தருகிறது. மேல் தோல் பகுதி உரிந்து உலர்ந்து விடும். இதன் காரணமாக இயற்கையாகவே காணப்படும் பளபளப்புத் தன்மையினை சருமம் இழந்து விடும். குளிர் காலத்தில் மேற்கூறிய செயல்பாடுகள் அதிகம் காணப்படும்.
ஹேமந்த ருது என்று கூறப்படும் குளிர்காலம், நவம்பர் 2-வது வாரம் துவங்குகிறது. குளிர்காலத்தில் அக்னி ( உடல் உஷ்ணமானது ) பாதத்தின் துணையால் அதிகரிக்கிறது. உடல் சூட்டின் காரணமாக கனமான உணவுகள் கூட எளிதாகவும், வேகமாகவும் செரிமானம் அடைகிறது. உடல் உஷ்ணத்தற்கு ஏற்ற அளவு உணவு கிடைக்காத போது உடலில் திரவ வடிவில் உள்ள சத்துக்கள் பாதிக்கப்பட்டு வாதம் வலுவிலக்கிறது. சீர் குலைந்த வாதத்தினால், சருமத்திலுள்ள குளிர்ச்சி, உலர் தன்மை மற்றும் கடினத் தன்மையில் மாற்றமும் பாதிப்பும் ஏற்படுகிறது. ஆகவே குளிர் காலங்களில் சருமப் பாதுகாப்பிற்கு அதிகக் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதற்காக நாம் நமது வாழ்க்கை முறை மாற்றங்களிலும், உணவுக் கட்டுப்பாடுகளிலும் கவனம் செலுத்துதல் அவசியமாகும்.
குளிர்கால சரும பாதுகாப்பிற்கு ஏற்ற உணவுகள்:
தோலின் மேல் பகுதியில் தைலம், எண்ணெய், க்ரீம் பயன்படுத்தினால் போதுமான பாதுகாப்பு சருமத்திற்கு கிடைத்து விடுமா? மேல் தோல் பாதுகாப்பு என்பது மட்டும்தான் அதுவும் தற்காலிகமானதாகத் தான் அமையும். ஆரோக்கியம் தரும் சத்துள்ள உணவுகளும் நல்ல மனநிலையும் சருமப் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமானதாகும்.
குளிர் காலத்தில் உங்கள் உடலில் தேவையான அளவு நீர்ச்சத்து இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு தினசரி அதிக அளவு தண்ணீர் அருந்துங்கள். வாதத்தின் காரணமாக ஏற்படும் நோய்களிலிருந்து தப்பிக்க வெதுவெதுப்பான நீரினை அருந்த வேண்டும். தண்ணீர் அருந்துவதனால் உடலில் உள்ள சருமமானது தனக்கு வேண்டிய அவசியமான எண்ணெய்ச் சத்துக்களை தக்க வைத்துப் கொள்கிறது. இதன் காரணமாக தோல் உலராமல் இயற்கையாகவே பாதுகாப்பு கிடைக்கிறது. அனைத்துச் சுவை வகைகளையும் சரியான விகிதத்தில் சேர்த்துக் கொண்ட உணவை உட்;கொள்ளவும். உப்பு, புளிப்பு, இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு என்ற ஆறு சுவைகளில் புளிப்பு, இனிப்பு சுவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. சப்பாத்தி, ரொட்டி, அரிசி மற்றும் பால் போன்றவைகள் பொதுவாக இனிப்பு உணவுகள் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. ஆகையால் அதிக கலோரிகள் உள்ள இனிப்புப் பொருட்களைச் சேர்க்காமலேயே இனிப்புச் சுவையை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். சூப்புகளுக்கு உப்பும், புளிப்பும் கலந்து கொள்ளும் பொழுது வாதம் சமநிலைப்படுத்தப்படுகிறது.
உணவில் தேனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்:
அதிக அளவு இனிப்புச் சேர்த்துள்ள மற்றும் எண்ணெய்ச் சேர்த்துள்ள உணவுகளையும் தவிர்க்கவும். மேற்கூறிய உணவுகள் உண்பதால் உடல் பருமன் தான் அதிகரிக்கும். குளிர் காலத்தில் பழ ரசங்கள், பால் மற்றும் வெண்ணெய் போன்றவைகளை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமானது.
குளிர்ச்சியான, பிரிட்ஜில் வைத்துக் குளிரூட்டப்பட்ட ஐஸ்கிரிம் மற்றும் மில்க் ஷேக் போன்றவைகளை அறவே ஒதுக்கி விடுங்கள். குளிர் காலத்தில் அதிகரிக்கும் உடல் உஷ்ணத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் வண்ணம் சூடான மற்றும் கனமான உணவுகளை உடகொள்ளவும். உணவுக் கட்டுப்பாட்டின் காரணமாக வைட்டமின் சத்துக்கள் குறைந்து விடாமலும் பார்த்துக் கொள்வது அவசியம். குறிப்பாக வைட்டமின் சி மற்றும் இ தேவையான அளவு உணவில் இருத்தல் வேண்டும். மேற்கூறிய இரண்டு வைட்டமின்கள் உடல் சருமத்தினை மிருதுவாகவும், இரப்பர் போல் வளையக் கூடிய தன்மையினையும் அளிக்கிறது. மேற்கூறிய இரண்டு வைட்டமின்களும் பால், பச்சைக் காய்கறிள் மற்றும் பழங்களில் அதிகமாக உள்ளது என்பதுடன் தினசரி நமது உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்வது அவசியம். கிராம்பு, ஏலக்காய், சீரகம் போன்ற வாசனை தரும் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் சருமத்திற்கு அழகும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். உதாரணத்திற்கு சீரகத்தினை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலிலுள்ள நச்சுக்கள் வெளியேறி விடும். இதன் காரணமாக சருமம் பளபளப்புடன் மின்னும்.
வாழ்க்கைச் சூழல் மாற்றங்களும் சருமத்தைப் பாதிக்கின்றன:
குளிரிலிருந்து, குளிர் காற்றிலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாத்துக் கொள்வது அவசியம். குளிர்காலங்களில் வீசும் காற்றானது கடுமையாக இருப்பதுடன் ஒரு சில சரும வகைகளுக்கு உலர்தன்மைக்கு காரணமாக இருக்கும். இதன் காரணமாக குளிர் காலத்தில் நமது உடலைப் பாதுகாக்க பருத்தி, பட்டு, கம்பளி போன்ற இயற்கை இழைகளினால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை மட்டும் பயன்படுத்தவும். உடைகள் அணிவதில் நீங்கள் கவனம் செலுத்தும் போது,உங்கள் உடலில் தோல் அலர்ஜி வராமலிருக்க பருத்தியினால் ஆன ஆடைகள் அணிவது தான் நல்லது. பருத்தி ஆடைகள் உங்கள் உடலில் தோன்றும் வேர்வையினை உறிஞ்சி எடுத்து விடும். பாலியஸ்டர், டெரிகாட்டன், ரேயான் போன்ற செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட ஆடைகள் வியர்வையினை உறிஞ்சாது என்பதுடன் செயற்கை இழை ஆடைகள் அணிவதன் காரணமாக உருவாகும் மைக்ரோ ஆர்கானிசம் தோல் வியாதிகள் உருவாக காரணமாகிறது.
உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் அமைய 20 அல்லது 30 நிமிடங்கள் என்று வாரத்திற்கு குறைந்தது3 முறை எளிமையான உடற்பயிற்சியினை செய்து வாருங்கள். அடிக்கடி முகம் கழுவுவதை நிறுத்துங்கள். இவ்வாறு அடிக்கடி முகத்தினைக் கழுவுவதன் காரணமாக சருமத்தில் இயற்கையாகவே உள்ள எண்ணெய்ப்பசை நீங்கி விடும் என்பதுடன் சருமமானது உலர்ந்து, காய்ந்து, சுருங்கிப் போய் விடும். முகத்தைக் கழுவிக் கொள்ள சூடான நீரைப் பயன்படுத்தாமல் மிதமான சூடுள்ள நீரினைப் பயன்படுத்தவும்.
ஒவ்வொரு நாளும் காலையில் நீங்கள் விழிக்கும் பொழுது முதல் அன்றைய நாள் முழுவதும் அழகுடன் தோன்றுவதற்கு அருமையான தூக்கமும் அவசியம். இதற்கு இரவு மிக விரைவில் படுக்கச் சென்று அதிகாலையில் எழுந்து விடுவது மிகுந்த நன்மை தரும். சரியான தூக்கத்தினை அமைத்துக் கொள்ளவில்லையெனில் ( சரியான நேரத்தில் தூங்காமல் இருத்தல் : நேரங்கெட்ட நேரத்தில் தூங்குதல் ) உங்கள் கண்களுக்கு கருவளையங்களைத் தோன்றச் செய்வதுடன் சருமத்தின் பளபளப்புத் தன்மையையும் இழந்து விடுகிறீர்கள்.சருமத்தினை மசாஜ் செய்வதும் ஆரோக்கியத்தில் முக்கிய இடம் பெறுகிறது. காலைக் குளியலுக்கு முன்பு உடல் முமுவதும் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் அன்றைய நாள் முழுவதும் புதிய உற்சாகத்தினையும், பொலிவையும் பெறுகிறீர்கள். மசாஜ் எண்ணெயாக விளக்கெண்ணெய், எள் எண்ணெய் வகைகளைப் பயன்படுத்தலாம்.
என்னடா மாப்பிள்ளை.. உன்னை நான் எப்ப பாக்க வந்தாலும் மிக அழகாகவும், சுறுசுறுப்பாகவும், சந்தோஷமாகவும் தெரிகிறாய்? என்று உங்கள் நண்பர் கூறுமளவுக்கு உண்மையான அழகு, ஆரோக்கியமான உடல் நலத்தினாலும், சந்தோஷமான மன நிலையினாலும் அமைந்துள்ளது என்பதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். தேவையற்ற கவலைகள், பிரச்சனைகளை ஒழித்து விடுங்கள். சரியான, சத்துள்ள உணவுகளை வேளை தவறாமல் சாப்பிடுவதுடன் போதிய உடற்பயிற்சி, தூக்கமும், தெளிவான மன நிலையும் உங்களை அழகு படுத்திவிடும்.