வெப்பத்துக்குப் பழக்கப்பட்ட நமது உடல் குளிரைச் சமாளிக்கத் தடுமாறும். காலநிலை மாறுவதால், சுவாசப் பிரச்சனைகள், காய்ச்சல், தோல் வறட்சி போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். பனிக்காலத்தில் நமது உடலை நோயின்றி பாதுகாப்பதற்கான வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்.
- குளிர்காலத்தில் உடலுக்குக் கதகதப்பு அளிக்கும் சில உடற்பயிற்சிகள், நிமிர்வது, குனிவது போன்ற அசைவுகளைச் செய்துகொண்டே இருக்க வேண்டும். இதனால், குளிரினால் ஏற்படும் உடல் மற்றும் தசை வலிகள் நீங்கும்.
- குளிர் காலத்தில் உணவை மிதமான சூட்டில் உண்ண வேண்டும். நேரம் தவறாமல் சாப்பிடுவது உடல் ஆற்றல் அதிகரிக்க உதவும். எளிதில் செரிக்கக் கூடிய பச்சைக் காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து மிகுந்த பீன்ஸ், முருங்கைக்காய் அதிக அளவில் சாப்பிடலாம். அசைவ உணவுகள் எளிதில் ஜீரணமாகாது என்பதால் அதனைக் குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது.
- குளிக்கச் செல்லும்முன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை உடலில் தேய்த்து மசாஜ் செய்தால், சருமம் வறண்டு போகாமல் ஆரோக்கியமாக இருக்கும். கற்றாழைக் கூழை முகம் மற்றும் உடலில் தேய்த்தாலும் சருமம் மிருதுவாக இருக்கும். ஒவ்வாமை மற்றும் சுவாசப் பிரச்சனை உடையவர்கள் கற்றாழைப் பசையை உபயோகப்படுத்தலாம்.
- குளிர்காலத்தில் வெந்நீர் குளியல் நல்லது. அதிக சூடான தண்ணீரில், அதிக நேரம் குளிப்பது சருமத்தில் அதிக வறட்சி ஏற்படும். அதனால் வெதுவெதுப்பான சூட்டில் குளிக்கலாம்.
- பனிக்காலத்தில் தாகம் குறைவாக ஏற்படும். அதனால் தண்ணீர் குடிப்பதைத் தவிர்ப்பதால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து, வேறு பிரச்சனைகளை உருவாக்கும். எனவே, ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு லிட்டர் வரை தண்ணீர் அவசியம் குடிக்கவேண்டும்.
- அதிகமாக குளிரும் நேரத்தில் உடலுக்குக் கதகதப்பு தரும் கம்பளி ஆடைகளை உடுத்த வேண்டும். இவை குளிர்காலத்தில் வரும் நடுக்கத்தைக் குறைக்கும். கை, கால்கள், மூக்கு, காது பகுதியையும் கதகதப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- ஆஸ்துமா, மூச்சுத் திணறல் மற்றும் சுவாச நோய்களால் அவதிப்படுபவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தங்களுக்கான மாத்திரை மருந்துகளை எப்போதும் உடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
சத்யா