குளிர்காலத்தில் அவசியம் சாப்பிட வேண்டிய பழம்

Spread the love

குளிர்காலத்தில் செரிமானம் மற்றும் உடலியக்கங்களின் செயல்பாடுகள் சிறிது மந்தமாக இருக்கும். அதனை துரிதப்படுத்துவதில் ஆரஞ்சுபழம் மிகுந்த பங்களிக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் குளிர்காலத்தில் தவறாமல் ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டும். அதில் இருக்கும் நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்தும். ஆரஞ்சு பழத்தை சாறாக பருக விரும்புபவர்கள் தோலையும் சேர்த்து சாறெடுத்து சாப்பிடவேண்டும் அதில்தான் அதிக நார்ச்சத்து இருக்கிறது. குளிர்காலத்தில் ஏற்படும் சளி மற்றும் சுவாசக் கோளாறுகளை தற்காத்துக் கொள்ள ஆரஞ்சுப்பழம் உதவும்.  மேலும் இரத்த நாளங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும். ஆரஞ்சு பழச்சாறு பருகுவதன் மூலம் சிறுநீரகக் கல் படிவதை கட்டுப்படுத்தலாம். சிறுநீரக கல் பிரச்சினையால் அவதிப்படுபவர்களும் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் ஆரஞ்சுச்சாறு பருகி வரலாம்.

நோயை குறைக்க உணவு

நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் வைட்டமின்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. காலத்திற்கேற்ற உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலம் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தலாம்.

* வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு இரத்தத்தில் இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். இவை நோய் பாதிப்பின்போதும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்யும். எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை பழம், ஸ்ட்ராபெர்ரி, ப்ராக்கோலி, கீரை, தக்காளி போன்றவற்றில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. அத்தகைய உணவுகளை முறையாக சாப்பிட்டு வருவதன் மூலம் ஆரோக்கிய வாழ்க்கையை தொடரலாம்.

* வைட்டமின் H 6, H 12 ஆகியவைகளும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உகந்தவை வைட்டமின் H 12 அசைவ உணவுகளில் அதிகமாக இருக்கும். அசைவ பிரியர்கள் முட்டை, இறைச்சி, மீன் வகைகளை ருசிக்கலாம். பால் மற்றும் பால் பொருட்களிலும் H 12 சத்து இருக்கிறது. அவை நோய் தடுப்பு ஊக்க மருந்தாக செயல்படும். தானிய வகைகள், பச்சைக்காய்கறிகளில் H 6 சத்து உள்ளது.

* வைட்டமின் ஈ, நோய்த் தொற்றுக்களை எதிர்த்து போராட உதவுகிறது. பல்வேறு பாக்டீரியாக்கள் மற்றும்  வைரஸ்களை எதிர்த்து போராடி வலிமையான நோய் எதிர்ப்பை உருவாக்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இரத்த சிவப்பு அணுக்கள் உருவாகவும் உதவுகிறது. பாதாம், வேர்க்கடலை, சோயா எண்ணை, கோதுமை எண்ணை, சூரியகாந்தி எண்ணை போன்றவற்றிலும் வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்திருக்கிறது.

* ஆப்பிள் மற்றும் வினிகரையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு,  இரத்த அழுத்தம் போன்றவற்றை சீராக்குகிறது.

* உடலில் இருந்து நச்சுத்தன்மையை நீக்குவதற்கு சீரான இடைவெளியில் தண்ணீர் பருகி வருவது அவசியமானது. இதுவும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

* இஞ்சி மற்றும் பூண்டை சமையலில் சேர்த்து வருவதும் நோய் தொற்றை எதிர்க்க உதவும்.

* முறையாக, தினசரி ஆறு முதல் எட்டு மணி நேரம் தூங்கும் வழக்கத்தை கடைபிடித்து வருவதும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

ராஜகோபாலன்


Spread the love