கஸ்தூரி மஞ்சள் பொடி பயன்கள்
கஸ்தூரி மஞ்சள் முக அழகு சாதன பொருட்களில் ஒன்றாகும். இது அனைத்து வகை சருமத்திற்கும் கேடு விளைவிக்காத அலர்ஜி எதிர்ப்பு தன்மை கொண்ட அழகு சாதனப் பொருளாகும். இது சூரிய ஒளி பாதிப்பினால் ஏற்படும் சரும நோய்கள். தூசி. அழுக்கு போன்றவற்றில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க பெரிதும் உதவுகிறது.
கஸ்தூரி மஞ்சள் பயன்படுத்தும் முன் நம் சருமத்திற்கு ஏற்றதா? என ஆராய்ந்து பின் தொடர்ந்து பயன்படுத்தவும். இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால் கரும்புள்ளிகள், பருக்கள் நீங்கும். காயங்கள், சூடு கட்டி போன்றவை குணமாகும். கஸ்தூரி மஞ்சள் சருமத்தில் உள்ள எண்ணெயின் அளவை சமநிலைப்படுத்தும் தன்மை உடையது. இதனால் சரும பிரச்சனைகள் நீங்கி சரும அழகு பாதுகாக்கப்படுகிறது.
இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை எதிர்த்துப் போராடி சருமத்துளைகளை சுத்தம் செய்கிறது. இதனால் ஆரோக்கியமான, பொலிவான சருமத்தை பெறலாம். சருமத்திற்கு ஆண்டி-ஆக்ஸிடென்டாக செயல்படும் கஸ்தூரி மஞ்சளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்க்கலாம்.
கஸ்தூரி மஞ்சள் உபயோகிக்கும் முறை
சரும வறட்சி நீங்க
ஒரு டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல், வைட்டமின் ஈ மாத்திரை இரண்டு ஆகியவற்றை பேஸ்ட் பதத்தில் ஒன்றாக கலந்து கொள்ளவும். இக்கலவையை முகத்தில் தடவி 10 – 15 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்து பின் குளிர்ந்த நீரில் கழுவவும்.
இது சருமத்தில் உள்ள செல்களை புத்துணர்வடையச் செய்து, முகப்பருக்களினால் ஏற்படும் கரும்புள்ளிகள், கருந்திட்டுகள் போன்றவற்றை மறையச் செய்கிறது. மேலும் சரும வறட்சி நீங்கி சருமம் மென்மையாக உதவுகிறது.
சருமம் மென்மையாக
கஸ்தூரி மஞ்சள் கொண்டு ஸ்க்ரப்பிங் செய்யலாம். அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், 2 டீஸ்பூன் வெள்ளை சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி ஸ்கரப் செய்யவும். இவை காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவவும்.
இவற்றில் உள்ள சர்க்கரை சருமத்தில் உள்ள இறந்த செல்களுக்கு புத்துயிர் அளித்து அழுக்குகளை வெளியேற்றுகிறது. தேங்காய் எண்ணெய் மற்றும் கஸ்தூரி மஞ்சள் சருமத்தை மென்மையாக பொலிவுடன் வைக்க உதவுகிறது.
காய்ச்சாத குளிர்ந்த பால், கஸ்தூரி மஞ்சள் தூள், முல்தானி மட்டி ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி வரவும். இதனை தொடர்ந்து செய்வதால் சருமம் மென்மையாகும். பால் சருமத்தில் உள்ள ஒவ்வொரு துளைகளையும் மென்மையாக ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது.
கஸ்தூரி மஞ்சள் அரை டீஸ்பூன், கடலை மாவு 2 டீஸ்பூன், தயிர் 2 டீஸ்பூன், தேன் ஒரு டீஸ்பூன் இவற்றை ஒன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதி முழுவதும் தடவவும். இதனை 30 நிமிடங்கள் ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவவும். இதனை தொடர்ந்து செய்வதினால் முக நிறம் மாறி முகம் மென்மையாக, பொலிவுடன் காணப்படும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்து வரலாம்.
குழந்தைகளின் சரும ஆரோக்கியத்திற்கு
காய்ச்சாத பாலுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து குழந்தையின் உடல் முழுவதும் தேய்த்து குளிக்க வைக்கலாம். இதனை தொடர்ந்து பயன்படுத்து வதால் உடலில் உள்ள தேவையற்ற முடிகள் உதிர்ந்து குழந்தையின் சருமம் மிருதுவாகும். மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் ஒவ்வாமை, சிவப்பு தடிப்புகள் போன்றவை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
முகம் பளபளப்பாக
கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு இவற்றை சம அளவு எடுத்து அரைத்து பொடியாக்கவும். இதனை முகத்தில் தடவி உலர விட்டு முகம் கழுவி வர சருமம் பளபளப்பாகும்.
இயற்கை அழகை பாதுகாக்க
கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன், கடலை மாவு ஒரு டீஸ்பூன், பச்சைப்பயிறு மாவு ஒரு டீஸ்பூன், பாலாடை சிறிதளவு ஆகியவற்றை சம அளவு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் சென்ற பின் குளிர்ந்த நீரில் கழுவவும். இதனை தினமும் அல்லது வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம். இது இயற்கை அழகை தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது.