தைராய்டு பெண்களை அதிகளவில் தாக்கும் நோய்களில் ஒன்றாகும். இது பெண்களின் தலையாய பிரச்சனையாக மாறி வருகிறது. இது ஆண்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தைராய்டு நோயானது உலகம் முழுவதும் 200 மில்லியன்க்கு அதிகமான அளவில் காணப்படுகிறது. மே மாதம் 25-ஆம் தேதி உலக தைராய்டு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
தைராய்டு நமது கழுத்துப் பகுதியில் பட்டர்பிளை வடிவத்தில் காணப்படும் நாளமில்லா சுரப்பி ஆகும். இந்த ஹார்மோன் சுரக்கும் அளவு அதிகரிப்பதாலும், குறைவதாலும் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. பிரச்சனை உள்ளவர்கள் மருந்து சாப்பிடுவதன் மூலம் ஹார்மோனை கட்டுக்குள் வைக்கலாம். தைராய்டு பிரச்சனையை தவிர்ப்பது பற்றி பார்க்கலாம்.
அறிகுறிகள்
தைராய்டு காரணமாக பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப் போக நேரிடலாம். குறைந்த வயதிலேயே வயதுக்கு வரலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிக தூக்கம், மாதவிலக்கு தொந்தரவுகள், உடல் எடை கூடுதல், கை, கால் வலி, மூட்டு வலி, மலச்சிக்கல் போன்றவை ஏற்படலாம்.
மேலும் நிணநீர் திரளையில் வீக்கம், குரல் கரகரப்பாதல், மூச்சு விடுதலில் சிரமம் ஆகியவை தைராய்டின் பிரதான அறிகுறிகள் ஆகும்.
அயோடின் அளவு குறைந்தால் கழுத்து பகுதியில் வீக்கம், உடல் வளர்ச்சி குறைதல், மனவளர்ச்சிக் குறைபாடு போன்ற பிரச்சனைகள் தோன்றும்.
கருத்தரிப்பதில் தடை ஏற்படலாம். சிலருக்கு கண்கள் பெரிதாக வெளியில் விழுவது போல் தோன்றும். நல்ல பசியிருந்தும் உடல் எடை குறைதல், இதய துடிப்பு அதிகரிப்பு, உயர் இரத்த அழுத்தம், நரம்புத்தளர்ச்சி, அதிக வியர்வை, சோம்பல், வறண்ட சருமம்,
அதிக பாதிப்பு உள்ளவர்களுக்கு முடி உதிர்தல், எப்பொழுதும் டென்ஷனாக ஒரு வித படபடப்புடன் காணப்படுவது. உணவில் நாட்டமின்மை போன்ற அறிகுறிகள் காணப்படும்.
தைராய்டு சுரப்பி அதிகளவில் சுரப்பதால் கழுத்து வீக்கம், உடல் சூடு, படபடப்பு, அதிகமாக வியர்த்தல். நாக்கு வறண்டு போதல், குமட்டல், குறை பிரசவம், கருச்சிதைவு ஆகியவை ஏற்படலாம்.
கர்ப்ப கால பிரச்சனைகள்
குறைப்பிரசவம், குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைபாடு, குழந்தை பிறந்த உடன் இறத்தல், குழந்தை போதுமான வளர்ச்சியின்றி பிறத்தல், காது கேளாமை மற்றும் வாய் பேசாமை போன்ற குறைபாட்டுடன் குழந்தை பிறக்கலாம்.
தாய்க்கு தைராய்டு பிரச்சனை இருப்பின் குழந்தைக்கும் தைராய்டு பிரச்சனை உள்ளதா என்று பரிசோதனை செய்தல் அவசியம்.
தைராய்டு ஏற்பட காரணங்கள்
மலையோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கட்டிகள் அதிகளவில் ஏற்படுகின்றது. இவர்கள் பயன்படுத்தும் உணவு மற்றும் குடிநீரில் அயோடின் குறைவாக இருப்பதே இதற்கு காரணமாகும்.
சில குழந்தைகள் பிறக்கும் போதே இந்தக் குறைபாட்டுடன் பிறப்பதுண்டு. 50 வயதை கடந்தவர்களுக்கு நினைவாற்றல் குறைவு ஹைப்போ தைராய்டு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
முட்டைகோஸ், கேரட் அதிக அளவில் உண்பதால் தைராய்டு பிரச்சனை அதிகரிக்கும்.
போதுமான உடற்பயிற்சியற்ற வாழ்வியல் முறைகள், தைராய்டு நோய்களை ஊக்குவிக்கும் வேதிப்பொருட்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல் போன்றவையும் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை பாதிக்கிறது.
தைராய்டு ஏற்படுவதை தடுக்க
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் உணவில் கல் உப்பு பயன்படுத்துவதன் மூலம் அயோடின் குறைபாட்டைத் தடுக்கலாம். சுடு தண்ணீரில் கல் உப்பு சேர்த்து தொண்டையில் படும்படி கொப்பளிப்பதன் மூலம் தொண்டையில் அயோடின் சேர வாய்ப்புள்ளது. இது போன்ற நடைமுறைகளால் தைராய்டு பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ளலாம்.
மேலும் பெண்கள் பூப்படையும் சமயத்தில் முகப்பரு, முடி கொட்டுதல், மறதி, டென்ஷன், படபடப்பு போன்ற பிரச்சனைகள் காரணமில்லாமல் தோன்றினால் தைராய்டு பிரச்சனை உள்ளதா? என்று சோதிக்க வேண்டும். இதனை ஆரம்பத்திலேயே சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் பெரிய பிரச்சனைகளை சரிசெய்யலாம்.
உண்ண வேண்டியவை
ஜெர்ரிபழம், தக்காளி, குடைமிளகாய், கொய்யா, நெல்லிக்காய், வைட்டமின் இ சத்து நிறைந்த உணவுகள், வெங்காயம், பீன்ஸ், அவரைக்காய், கொத்தவரை, கத்தரி, பிஞ்சு வெண்டைக்காய் மற்றும் பிற பந்தல் வகை காய்கள்.
கொழுப்பு நீக்கிய பால், பாலாடைக்கட்டி, கொதிக்க வைத்த பால், அயோடின் சேர்த்த உப்பு, மீன், நண்டு, இறால், கருவாடு போன்ற கடல் உணவுகள்.
தோல் நீக்கம் செய்த கோழி இறைச்சி, சிறிதளவு கொம்பு மஞ்சள், மிளகு, சீரகம், பூண்டு போன்ற மசாலா பொருட்கள் தோல் நீக்கப்படாத முழு தானியங்கள் ஆகியவற்றை உண்ணலாம்.
தவிர்க்க வேண்டியவை
ஆடு மற்றும் மாட்டு இறைச்சி, ஊக்க மருந்து கொடுக்கப்பட்ட அசைவ உணவுகள், வெண்ணெய், காபி, மூங்கில் உணவுகள், பூச்சி மருந்து பயன்படுத்தப்பட்ட தாவர உணவுகள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகள், கடுகு அதிகம் சேர்த்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை தவிர்க்கவும்.
சிறுதானியங்களை அடிக்கடி உண்பவர்கள் சமைத்த பின் அல்லது ஊற வைத்து முளைகட்டி அதில் இருக்கும் பாலிபினால்கள் பிற எதிர்சத்துக்கள் அழிந்த பிறகு உணவில் சேர்க்கலாம்.
சோயா பீன்ஸ் மற்றும் அது சார்ந்த பொருட்கள், புரோக்கோலி, காலிஃப்ளவர், முட்டைகோஸ், மணிலா பயறு போன்றவற்றை தவிர்க்கவும்.
மூலிகை மருத்துவம்
தைராய்டு பிரச்சனையால் உண்டாகும் குரல்வளை பாதிப்பிற்கு அக்ரகாரம், அதிமதுரம், கரிசலாங்கண்ணி இவற்றை சம அளவு எடுத்து நன்கு அரைத்து தினமும் இரண்டு கிராம் அளவில் காலையில் சாப்பிட்டு வரலாம்.
மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் 20 கிராம் அக்ரூட் பருப்புடன் அரைலிட்டர் பால் குடித்து வர மெலிந்த உடல் பருக்கும்.
உடல் அசதி, களைப்பிற்கு அகில் கட்டையை பொடி செய்து அதை நெருப்பில் தூவி வரும் புகையை முகரலாம்.
சிகிச்சை முறை
தைராக்சின் மாத்திரைகள் மூலம் இந்த நோயை முழுமையாக குணப்படுத்தலாம். தைராய்டு உள்ளவர்கள் தைராக்சின் மாத்திரையை வாழ்நாள் முழுவதும் உட்கொள்ள வேண்டும்.
ஆனால் இதனை ஆயுர்வேத ஹோமியோ சித்தா மருந்தினை கொண்டு 3-6 மாதங்களில் அவரவர்களுக்கு ஏற்பட்ட அளவின் படி மருந்து எடுத்துக் கொண்டால் இந்த நோயை தவிர்க்கலாம். இதில் வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை.
இரத்த பரிசோதனையின் முலம் தைராக்சின் அளவை ஆண்டுக்கு ஒருமுறையாவது அறிந்து கொள்ளவும். அதிகம் இருப்பின் இதயம், எலும்பு சம்மந்தப்பட்ட நோய்கள் உண்டாகும்.
தைராய்டு பிரச்சனைக்கு முறையான மருத்துவ ஆலோசனை மற்றும் உணவு கட்டுப்பாடு சிறந்ததாகும்.