மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்றும் பூமி… ஏன் நம்மால் வேகத்தை உணர முடிவதில்லை?
இந்த உலகத்தில் உள்ள எல்லாக் கோள்களும் ஏதோ ஒரு விசை கொண்டு ஏதோ ஒரு திசையில் பயணித்துக்கொண்டே இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் குறிப்பிட்ட பொருளைச் சுற்றி வந்தால் அதை ஒரு குடும்பம் என்று எடுத்துக் கொள்கிறோம். அப்படிப் பால் வீதியில் உள்ளது நம் சூரியக்குடும்பம். சூரியனைச் சுற்றி 8 கோள்களும் தனக்கான நிறை, விசை, வேகம் கொண்டு தன்னைத் தானே சுற்றிக்கொண்டும் சூரியனைச் சுற்றிக்கொண்டும் இருக்கின்றன.
பூமியின் விட்டம் 12,742 கி.மீ. அதன் சுற்றளவு 40,075 கி.மீ. நிறை 5.9722 x 10 x 24 கிலோகிராம். இந்த அளவு பெரிய பூமியானது தன்னைத் தானே சுற்றிக்கொள்ள 23 மணிநேரம் 56 நிமிடம் 4.09 நொடிகள் எடுத்துக்கொள்கிறது. அப்படியானால் எந்த அளவு வேகமாக அது சுழலும். நினைத்தாலே தலை சுற்றும் நமக்கு.
ஆம், பூமி ஒரு மணி நேரத்துக்குக் கிட்டத்தட்ட 1000 மைல், அதாவது சுமார் 1674 கி.மீ எனும் வேகத்தில் சுழல்கிறது. இது ஒரு நொடிக்கு 30 கி.மீ. வேகம். வண்டியில் 80 கி.மீ வேகத்தில் சென்றாலே பறப்பது போல் உணரும் நாம் எப்படி இந்த வேகத்தை உணர முடியவில்லை என்று சிந்தித்துள்ளீரா? காரணம், இதுதான். Frames of reference என்று சொல்லப்படும் குறியீட்டுச்சட்டகம். கண்ணோட்டம் என்று கூட புரிந்து கொள்ளலாம்.
எளிமையாகப் புரியவேண்டுமானால் ஓர் எடுத்துக்காட்டை பார்ப்போம். ஒரு இரயில் பயணத்தை எடுத்துக் கொள்வோம். இரயிலில் பயணிக்கும் போது நாம் எவ்வளவு வேகமாகப் பயணிக்கிறோம் என்பதை உணரமாட்டோம். நகர்வதைக் கூட வெளியில் எட்டிப்பார்த்துத் தெரிந்துகொள்வோம். இதில் இரண்டு கண்ணோட்டம் இருக்கும். ஒன்று இரயிலின் உள்ளே இருப்பவரின் கண்ணோட்டம். அவரைப் பொறுத்தவரை, அவர் அப்படியே நிற்பது போலவும், அவரைச் சுற்றி உள்ள நடைமேடை, சுற்றம் எல்லாம் நகர்வது போலவும் தோன்றும். ஏனெனில் இதில் ஃபிரேம் ஆப் ரெஃபரென்ஸ் இரயிலுடன் இருக்கும்.
மற்றொரு கண்ணோட்டம், நடைமேடையில் இருப்பவருடையது. அதில் சுற்றம் எல்லாம் நிலையாய் நிற்க இரயில் நகர்வதாய் அமையும். இதில் ஃபிரேம் ஆப் ரெஃபரென்ஸ் நடைமேடையில் நிலைத்து வைக்கப்பட்டிருக்கும். உண்மையில் இரயில்தான் நகரும்.
இதன் பெரிய அளவீடே பூமியின் சுழற்சி. அந்த நகரும் இரயில், நம் பூமி. நடைமேடை இங்கு அண்ட வெளி. பூமியிலிருந்து பார்க்கும் போது பூமி நகர்வது போல் தெரியாது. வானம் நகர்வதாய்த் தெரியும். இதில் பூமி ஃபிரேம் ஆப் ரெஃபரென்ஸ். வெளியிலிருந்து பார்த்தால், பூமி நகர்வதாய்த் தெரியும். அப்போது வானம் ஃபிரேம் ஆப் ரெஃபரென்ஸ். அங்கு இரயிலைப்போல் இங்குப் பூமிதான் சுழலும். அதுதான் சரியானது.
அது போல இரயிலின் உள்ளே உள்ள காற்றும் வேகத்தை காட்டாது. இரயிலுக்குள் இருக்கும் காற்றும் இரயிலின் வேகத்துக்கு பயணிக்கும். அதேபோல தான் வளிமண்டலமும் பூமியோடு சேர்ந்து அதன் வேகத்துக்கு நகர்வதால் காற்றின் வேகத்திலும் பூமியின் வேகம் வெளிப்படாது.
ஆனால் இந்த இரண்டிலும் ஒரு வித்தியாசம், இரயிலின் வேகம் அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ அந்த விசையை நாம் உணர முடியும். ஆனால், பூமியின் வேகம் அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ வாய்ப்பில்லை. ஆண்டுக்கு நானோ நொடிகள் தாமதமாக சுழன்று கொண்டிருந்தாலும் இது நிகழ நூற்றாண்டுகள் ஆகும். அதனால் தான் நம்மால் உணர முடிவதில்லை.
To Buy Our Herbal Products >>>