எந்த ஒரு விசேஷமாக இருந்தாலும், இனிப்போடுதான் ஆரம்பிப்பார்கள். வாழ்க்கை இனிப்பாக இருக்க வேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புவர். இந்த இனிப்பு கிடைப்பது சர்க்கரையில் இருந்து. சொன்னால் ஆச்சர்யமாக இருக்கும். சர்க்கரை ஒரு காலத்தில் ஆடம்பர பொருளாக இருந்தது. அப்போது, ஏழைகளுக்கு எட்டாக்கனி அது.
கரும்பில் இருந்துதான் சர்க்கரை அதிகமாக எடுக்கப்படுகிறது. அடுத்து பீட்ரூட்டில் (Sugar-beet) இருந்தும், சோர்கம் (Sorghum) எனப்படும் இனிப்பு சோளத்தில் இருந்தும் சர்க்கரை தயாரிக்கப்படுகிறது.
கரும்பு சாற்றை காய்ச்சி, சர்க்கரை எடுக்கும் முறை, கி.மு. 500&ல் இந்தியாவில் உருவானது. கரும்பை கற்களால் ஆன அரவை இயந்திரங்களில் நசுக்கி, வெயிலில் காயவைத்து அல்லது நெருப்பினால் காய்ச்சி, அதில் இருந்து சர்க்கரை எடுக்கப்பட்டது. இந்த சர்க்கரை படிமங்களாக (Crystals), சின்ன கூழாங்கல் அளவில் இருந்தது. இதனால், சமஸ்கிருதத்தில் ‘சக்கர்’ என அழைக்கப்பட்டது. சமஸ்கிருதத்தில் சக்கர் என்றால் கூழாங்கல். ‘சக்கர்’ பின்னாளில் சர்க்கரையாகி விட்டது.
தென் ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், சீனா போன்ற நாடுகளில் சர்க்கரையை உணவிலும் இனிப்பிலும் உபயோகப்படுத்துவது தொடங்கியது. இந்தியாவில் இருந்து சர்க்கரை உற்பத்தி செய்யும் முறைகள் அரேபியர்களால் பின்பற்றப்பட்டது. பின்னர் இதை மேம்படுத்தி, பெரிய அளவில் முதன்முதலாக சர்க்கரை ஆலைகள், தொழிற் சாலைகள் அரேபியர்களால் உருவாக்கப் பட்டன.
அரேபியர்களால் ‘சர்க்கரை’ ஐரோப்பாவிற்கும் பரவியது. 12ம் நூற்றாண்டை சேர்ந்த வரலாற்று நிபுணர் வில்லியம், ‘மனிதர்களின் ஆரோக்கியத் திற்கும், உபயோகத்திற்கும் சர்க்கரை மிகவும் அவசியம்’ என்று குறிப்பிட்டுள்ளார். 1390ல் சர்க்கரை தயாரிப்பில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டது. கனேரி (Canary) தீவுகளுக்கு சர்க்கரை உற்பத்தி பரவியது.
1492ல் கிறிஸ்டோபர் கொலம்பஸ் கனேரி தீவுகளில் நான்கு நாட்கள் மட்டும் தங்க முடிவு செய்து அங்கு இறங்கினார். அந்த தீவின் பெண் கவர்னரான பீயட்ரிஸ்-டி-போபாடில்லா (Beatrice-de-Bobadilla) வை கண்ட கொலம்பஸ், அவர் மீது காதல் வயப்பட்டார். ‘நான்கு நாள் தங்குவது’ ஒரு மாதமாக நீண்டது. கொலம்பஸ் விடைபெறும் போது, பெண் கவர்னர் அவருக்கு காதல் பரிசாக கரும்புகளை அளித்தார். இப்படித்தான் கரும்பு அமெரிக்காவில் காலடி எடுத்து வைத்தது.
தென் அமெரிக்க நாடான பிரேஸிலுக்கு, கரும்பை போர்ச்சுகீசியர்கள் அறிமுகப்படுத்தினர். பிரேஸிலின் வடகடற்கரை பிரதேசங்கள் மற்றும் சான்டா-காடலினா (Santa Ctalina) தீவுகளில் மட்டும் கிட்டதட்ட 2800 சர்க்கரை ஆலைகள் இருந்ததாக 1540ம் ஆண்டின் சரித்திர குறிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் அமெரிக்கா, ஐரோப்பாவில் ஒரு தொழிற்புரட்சியே ஏற்பட்டது. 1625-1750ம் ஆண்டுகளில் சர்க்கரை, தங்கத்திற்கு சமமாக மதிக்கப்பட்டது.
முத்து, புனுகு, வாசனை திரவியங்களுக்கு சமமாக சர்க்கரை ஒரு அரும்பொருளாக ஆனது. ஆங்கிலேய காலனிகளால் சர்க்கரை உற்பத்தி மிகவும் அதிகமானது. அதனால் மெல்ல மெல்ல சர்க்கரையின் விலை இறங்கி, ஏழைகளும் வாங்கும் நிலை ஏற்பட்டது. கியூபா, பிரேஸிலில் சர்க்கரை உற்பத்தி அமோகமாக நடந்தது.
ஆனால், இந்த இனிப்பின் பின்னால் ஆறாத ரணம் உள்ளது. கரும்பு தோட்டங்களில் வேலை செய்ய அடிமைகள் தேவைப்பட்டார்கள். இதனால், அடிமை வியாபாரம் ஜரூராக நடந்தது. ஆப்ரிக்க கருப்பினத்தவரும், இந்தியர்களும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் அடிமைகளாக்கப் பட்டனர். பிரிட்டிஷ் காலனியாக இருந்த மேற்கு இந்திய தீவுகளில் 40 லட்சம் அடிமைகள், ‘இறக்குமதி’ செய்யப்பட்டனர். அடிமை தொழில் முடிந்து போன 1838ம் ஆண்டில், 40 லட்சம் அடிமைகளில் உயிரோடு இருந்தவர்கள் 4 லட்சம் பேர்தான்.
மேற்கிந்திய தீவுகளில் உலகிலேயே அதிக சர்க்கரை உற்பத்தி நடந்தது இந்த அடிமைகளால்தான். இவர்கள் உழைத்து கொட்டிய சர்க்கரையை மிக குறைந்த விலையில் விற்றதின் காரணமாக இந்த தீவுகள் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைந்தன. 18ம் நூற்றாண்டில், சிறிய தீவுகளான ஹைதி (Haiti) மற்றும் ஜமைக்கா ஆகியவை சர்க்கரை உற்பத்தியில் உலகில் முதலிடம் வகித்தன.
1710ல் இருந்து 1810 வரை, ஒரு நூற்றாண்டு காலம் பத்து லட்சம் அடிமைகள் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஜமைக்கா, பார்படோஸ் தீவுகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இப்போது கூட மேற்கிந்திய தீவுகளில் இந்திய வம்சாவளியினர் உள்ளனர். பிரபல கிரிக்கெட் வீரர்கள் கன்ஹாய், ஆல்வின் காளிச்சரண், சந்திரபால் ஆகியோர் இந்திய வம்சாவளி யினர்தான்.
18ம் நூற்றாண்டில் சர்க்கரை எல்லோரும் வாங்க கூடிய பொருளாக மாறியது. 1813ல் எட்வர்டு சார்லஸ் ஹோவர்டு என்ற விஞ்ஞானி, மூடிய பாத்திரங்களில் கரும்பு சாற்றை நீராவியில் சூடாக்கி, பொதி வெற்றிடத்தை உருவாக்கி, அதில் கரும்பு சாறு கரைசலை வைத்து, சர்க்கரை தயாரிக்கும் முறையை கண்டுபிடித்தார். மேலும், நார்பெர்ட் ரில்லினெக்ஸ் என்ற விஞ்ஞானி புதிய கருவிகளை உருவாக்கி, சர்க்கரை தயாரிப்பதில் புதிய மாற்றங்களை கொண்டு வந்தார்.
சர்க்கரை பீட் (Sugar-beet)
1747ம் ஆண்டில், ஜெர்மன் விஞ்ஞானி ஆண்டியாஸ் மார்கிராஃப், பீட்ரூட்டில் (வெள்ளை) சுக்ரோஸ் (Sucrose) இருப்பதை கண்டுபிடித்தார். இவரது மாணவர் பிரான்ஸ் அச்சார்ட், 1801ல், பீட்ரூட்டில் இருந்து சர்க்கரை தயாரிக்கும் ஆலையை உண்டாக்கினார். 1813ல் நெப்போலியன், பிரான்சில் சர்க்கரை இறக்குமதி செய்வதை தடை செய்ததால், பீட்ரூட்டில் இருந்து சர்க்கரை எடுப்பது தேவையானதாக ஆயிற்று.
சர்க்கரை இறக்குமதிக்கு நெப்போலியன் தடை விதித்ததற்கு காரணம், சர்க்கரை தயாரிப்பில், அப்போதைய பிரிட்டிஷ் காலனிகள்தான் அதிக அளவில் ஈடுபட்டிருந்ததுதான். இங்கிலாந்துடன் நிரந்தர பகைமை கொண்டிருந்ததால், அவர்களிடம் இருந்து சர்க்கரை வாங்க நெப்போலியன் தயாராக இல்லை.
இதனால் பயனடைந்தது, பீட்ரூட்டில் இருந்து சர்க்கரை தயாரிக்கும் தொழில். உலக உற்பத்தியில் 30% சர்க்கரை பீட்ரூட்டில் இருந்து தயாரிக்கப்படுகிறது.