வழுக்கை ஏற்படுவது ஏன்?

Spread the love

முடி உதிர்தல், வழுக்கையை ஆங்கிலத்தில் ‘அலோபேசியா’ (Alopecia) என்பார்கள். இவற்றை விளக்கமாக பார்க்கலாம்.

1. ஆண்ட்ரோஜெனடிக் அலோபேசியா

உலகின் பாதி ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை, பெண்களுக்கு 10-20 சதவிகிதம் வரை பாதிக்கும். பெண்களுக்கு ஆண்களை போல் வழுக்கை ஏற்படுவது அபூர்வம். முன்பே சொன்னபடி ஆண் ஹார்மோனான “டை-ஹைட்ரோ டெஸ்டோஸ் டிரான்” சிறிது அதிகமாக வேலை செய்தால், மற்ற பிறவி காரணங்களும் சேர்ந்து, முடிக்கால்களை சிதைத்து, மீண்டும் முடி வளரவிடாமல் தடுத்து, வழுக்கையை உண்டாக்கலாம். இது போன்ற முடி உதிர்தல் எந்த வயதிலும் ஏற்படலாம். முதலில் முன்நெற்றியிலிருந்து வழுக்கை ஆரம்பிக்கும். தலையின் நடு உச்சியிலிருந்தும். வழுக்கை ஆரம்பிக்கலாம். முடிவில் தலையின் பின்புறத்திலும், பக்கவாட்டிலும் சிறிது முடி மிஞ்சலாம்.

2. டாக்ஸிக் (விஷ, நச்சு) அலோபேசியா (Toxic Alopecia)

இந்த வகை முடி இழப்பு பெரும்பாலும், தீவிரமான ஜுரம், திடீர் உடல் எடை இழப்பு, சில மருந்துகளாலும் ஏற்படும். புற்றுநோய்க்கு கொடுக்கப்படும் மருந்து சிகிச்சை (Chemotherapy), உயர் இரத்த அழுத்தம், பெண்களுக்கான குடும்பக்கட்டுப்பாடு மாத்திரைகள், அதிக விட்டமின் ‘ஏ’, மனநோய்க்கான மாத்திரைகள், இவைகளும் இந்த வழுக்கையை உண்டாக்கும். தைராய்டு சுரப்பிகள் அல்லது பிட்யூடரி சுரப்பிகள் குறைவாக சுரந்தாலும் ஏற்படும். பிரசவத்திற்கு பிறகும் இந்த முடி இழப்பு உண்டாகும். இந்த வகை வழுக்கை தற்காலிகமானது. இந்தப்பிரச்சனைகள் தீர்ந்தவுடன் முடி திரும்பவும் முளைக்கும்.

3. அலோபேசியா அரியாடா (Alopecia areata)

இதை நாம் புழுவெட்டு என்கிறோம். இதில் துணியில் ‘ஒட்டு’  போட்டது போல், திட்டு திட்டாக, ஆங்காங்கு முடி உதிரும். இதன் காரணம் சரிவர தெரியவில்லை. “ஆடோ-இம்யூன்” (Auto immune) (எதிர்வினைநோய்) என்ற வியாதி காரணமாகலாம். நமது உடலின் ஆன்டி-பாடிகள் (நோய் கிருமிகளை எதிர்ப்பவை) தவறுதலாக நமது முடி உறைகளை (Follicle) அழிப்பது தான் இந்த வியாதி. வேலியே பயிரை மேய்ந்த கதை. தலை (மண்டை) மற்றும் புருவம், கண் இமை, தாடி முளைக்கும் இடங்களில் இந்த புழுவெட்டு ஏற்படும். புழுவெட்டு, இரு பாலினரையும் தாக்கும். எந்த வயதில் வேண்டுமானாலும் வரும். குறிப்பாக சிறுவர் மற்றும் இளைஞர்களை தாக்கும். புழுவெட்டு இருக்கும் சிலருக்கு, தைராய்டு சுரப்பி பாதிக்கப்பட்டிருக்கும். இந்த திட்டு திட்டாக முடி உதிர்ந்த பின், பலமாதங்களில் திரும்பி முடிவளரும். ஆனால் தலை முழுவதும் பாதிக்கப்பட்டிருந்தால், மறுபடியும் முடி வளருவது கடினம். இதை ‘அலோபேசியா டோடாலிஸ்’ (Alopecia totalis) என்பார்கள். அபூர்வமாக உடல் முழுவதும் (தலை உட்பட) முடி கொட்டிவிடும். இதை அலோபேசியா யூனிவர்சாலிஸ் (Alopecia Universalis) என்பார்கள்.

4. ஸ்காரிங் அலோபேசியா (Scarring alopecia)

உடலில் முடிவளரும் பிரதேசங்களில், காயம்பட்டபின் ஏற்படும் தழும்பு, வழு போன்ற இடங்களில் மயிர் உதிர்ந்து விடும். தீப்புண், எக்ஸ்ரே (X ray) பட்ட இடம், அடிபடுதல் இவைகளால் தோலில் தழும்புகள் ஏற்படும். இந்த இடங்களில் முடி திரும்ப வளராது. தோல் புற்றுநோயும் காயங்களை உண்டாக்கும்.

5. முடியை பிடித்து இழுக்கும் பழக்கம் (Trichotillomania)

நல்ல முடியை “வெடிக்கென்று” பிரித்து எறிவது சிலருடைய பழக்கம் – குறிப்பாக இளைஞர், இளைஞிகளில் தோன்றும் பழக்கம் இது. இதனால் முடி இழப்பு மட்டுமில்ல, முடிவேறுகாரணங்களில் உதிருகிறது என்று டாக்டர் தவறுதலாக எண்ணக்கூடும். இந்த முடியிழுக்கும் பழக்கம் மனோ ரீதியாக, டென்ஷன், கவலையால் ஏற்படலாம். இந்த பழக்கம் தனக்கு இருக்கிறது என்பதே அவருக்கு தெரியாமல் போகும். இது ஒரு தற்காலிக பிரச்சனை.

முடி உதிர்வுக்கு சிகிச்சை முறைகள்

அலோபதி முறையில், தலைமுடி, மைக்ரோஸ் கோப்பினால் பார்க்கப்படும். இதன் மூலம் அல்லது சரும பயாப்சி (Biopsy) மூலம் முடி உறைகள் (Follicles) நார்மலாக இருக்கின்றனவாக என்று தெரியவரும். இரத்த நாளங்களை விரிவாக்கும் மருந்தான மினோக்ஸிடில் (Minoxidle), மற்றும் பினாஸ்டிரெய்ட் போன்ற மருந்துகள் தரப்படும். இந்த மருந்துகளை பல நாட்கள் எடுத்து கொண்டபின் பலன் தெரியும். மருந்துகளை உபயோகிக்கும் வரை தான் பலன் இருக்கும்.

முழுத்தீர்வு – நாற்று நடுவது போல், வேறிடத்திலிருந்து முடியை எடுத்து வழக்கையான இடங்களில் நடுவது. (Hair Transplant)

டாக்ஸீக் அலோபேசியா, அதற்கு காரணமான விஷப்பொருளை நீக்கினாலே சரியாகிவிடும். கார்டிகோ-ஸ்டிராய்ட் மருந்துகள் புழுவெட்டை குணமாக்க பயன்படுத்தப்படுகின்றன.

ஆயுர்வேதம் சொல்லும் வழிகள்

முடிஉதிர்தல், முடி இழப்பு (வழுக்கை) இவைகளை ஆயுர்வேதம் ‘கலித்யா’ என்கிறது. சுஸ்ருதர் – முடிஉதிர்தல், பொடுகு இவ்விரண்டையும் சேர்த்து, முடி இழப்பை “இந்திரலுப்தா” என்றார். மற்றொரு வார்த்தையான “ருய்யா” வும் முடி இழப்பை குறிக்கிறது. கலித்யா, இந்திரலுப்தா, ருய்யா – மூன்றும் ஒன்று தான். வாகபட்டர் ‘திடீர்’ முடிஇழப்பு, இந்திரலுப்தா என்றும், நிதான முடி இழப்பை ‘கலித்யா’ என்றும் சொல்கிறார்.

ஆயுர்வேதத்தின்படி, பித்தமும் வாதமும் முடிக்கால்களில் (Follicles) புகுந்து, முடியை உதிர வைக்கின்றன. கபம் ரத்தத்துடன் சேர்ந்து முடிஉறைகளில் தடையை உண்டாக்கி, மீண்டும் முடிவளராமல் செய்கின்றன.

முடி இழப்புக்கு பொதுவான ஆயுர்வேதசிகிச்சை

·         ஸ்நேஹம்

·         ஸ்வேதனம்

·         ரக்தமோக்ஷம்

ஸ்நேஹம்

தலைக்கு, குறிப்பாக முடிகளுக்கு, எண்ணெய் பதமிடுவது ஸ்நேஹம் கேசங்களுக்கு எண்ணெய் பதமிடுதல் மிகவும் பயன் தரும். உடலின் உள்ளும் புறமும் நெய்ப்பை, வழவழப்பை ஏற்படுத்துவது ஸ்நேஹம் ஆகும்.

அடிப்படையாக “மஹாபிருங்க ராஜ்” தைலம் பயன்படுத்தப்படும். பிறகு மூலிகை ஷாம்பு உபயோகப்படுத்தப்படும். இந்த சிகிச்சை, வறண்ட சருமம், தலை முடி போன்றவற்றிக்கும் தேவையான போஷாக்கை தைலம் மூலம் கொடுக்கும்.

ஸ்வேதனம்

உடல் அழுக்குகளை போக்க, சூடு ஒத்தடம் கொடுப்பதே ஸ்வேதனம் ஆகும்.’ஸ்நேஹத்தால்’ நெகிழ்ந்த உடலின் உள்ளழுக்குகளை, சூட்டு ஒத்தடம் மூலம் லேசாக்கி, ரத்தத்தில் கலக்கச் செய்து வெளியேற்றுவது ஸ்வேதத்தின் செயலாகும்.

ரக்தமோக்ஷம்

கிசிச்சை ஸ்நேஹாவும், ஸ்வேதனமும் முடிந்த பின், ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. இதற்கு “அட்டைகளை” (ரத்தத்தை உறிஞ்சுபவை) ஆயுர்வேதம் பயன்படுகிறது.

இந்த சிகிச்சைகளைத் தவிர, சிரோதாரா, நஸ்யம், சிரோவஸ்தி, ரசாயன சிகிச்சைகளும் தேவைப்பட்டால் செய்யப்படும். முடிஇழப்பிற்கு ஆயுர்வேதம் வெகுவாக சிபாரிசு செய்யும் கூந்தல் தைலம் “நீலிபிருங்காதி தைலம்”.

முடிஉதிர்வதை தவிர்க்க சில வழிமுறைகள்

 · தினசரி காலை எழுந்தவுடன் 15 நிமிடங்களுக்கு விரல் நுனிகளால் தலையில் நன்றாக மசாஜ் செய்யவும். இது வேர்க்கால்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும்; வேர்க்கால் பலஹீனத்தைப் போக்கும்.

· நெல்லிக்காய் சேர்ந்த தேங்காய் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட கேச தைலத்தை உபயோகப்படுத்தவும். இது முடி உதிர்வதை தடுக்கும். முடிக்கு தேவையான வைட்டமின் ‘சி’ சத்துக்களை அளிக்கும்.

· தினசரி காலையும், இரவும் ஒரு தேக்கரண்டி அளவு நெல்லிக்காய் பவுடரையும், கரிசலாங்கண்ணி பவுடரையும் தண்ணீர் அல்லது பாலில் கலந்து குடித்து வர நல்ல பலன் தெரியும். இது முடியை கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரச் செய்யும்.

· சம அளவு பச்சை நெல்லிக்காயையும், மாங்காயையும் சேர்த்து கூழ் போல், அரைத்து காலை குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக தடவி, பின்னர் எப்பொழுதும் போல குளிக்கவும். இது முடிக்கு பலத்தையும் கிருமி நாசினி தன்மையையும் அளித்திடும்.

· பிரிஞ்சி இலையுடன் வேப்பிலை மற்றும் 25 கிராம் துளசி இலையையும்     சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதில் ஐந்து டீஸ்பூன் எடுத்து ஐம்பது மி.லி. தண்ணீரில் குழைத்துத் தலையில் தடவிக் குளிக்க, முடி உதிர்வது நிற்கும்.

· தினமும் 10-15 நிமிடம், பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்யவும்.

· வேப்ப இலைகளை தண்ணீரில் கொதிக்கவைத்து, குளிர்வித்து, கூந்தலை அலசவும்.

· தேங்காய் பால், தேங்காய் எண்ணெய் போல, முடிக்கு நல்லது. தேங்காய் பாலை நேரடியாகவே தலையில் தடவி அலசலாம். தேங்காய் பாலுடன் எலுமிச்சை விதைகளை அரைத்து சேர்த்துக் கொள்ளலாம். கற்பூரவில்லையின் பச்சை இலைகளையும் சேர்க்கலாம். ரோஜா இதழ்களை நன்கு அரைத்து, தேங்காய் பாலுடன் கலந்து, அரை மணி கழித்து அலசலாம். தேங்காய் பால், மருதோன்றி இலை, இவற்றை அரைத்து, சில துளி எலுமிச்சை சாறு சேர்த்து, ஷாம்பு போட்டு குளித்தபின், தலையில் தடவி வரலாம். தேங்காய் பாலுடன், காயவைத்த வெட்டிவேர், வெள்ளைமிளகு போட்டு கலந்து தலையில் தேய்த்துவந்தால் முடி கொட்டாது. நெல்லிக்காய்பொடி, வேப்பிலைப் பொடி இரண்டையும் தேங்காய் பாலில் கலந்து தலையில் தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்.

· வெந்தயத்தை தனியாக அரைத்து தேய்த்துக் குளிக்கலாம். கால் மணி நேரத்திற்கு மேல் தலையில் வைக்க வேண்டாம். குளிர்ச்சி அதிகமாகிவிடும். ஆஸ்துமா, சைனஸ் நோயாளிகள் தவிர்க்கவும். வெந்தயத்தை பொடி செய்து காலையில் வெறும் வயிற்றில் மோருடன் குடித்துவர, உடல் சூடுகுறையும். இல்லை இரவு படுக்குமுன்பு ஒரு டீஸ்பூன் வெந்தய பொடியை, வெந்நீருடன் சேர்த்து சாப்பிடலாம். உடல் சூடு குறைந்து முடி நன்கு வளரும்.

· எலுமிச்சை விதை, மிளகு இரண்டையும் விழுதாக அரைத்து தடவலாம்.

· தலைக்கு குளித்து வந்தவுடன் மரிக்கொழுந்தை வைத்து அல்லது திருநீற்றுபச்சிலையை தேய்த்துவிட்டு, கொண்டை போட்டுக் கொண்டால் சூடு குறைந்து முடி வளரும்.

·  மிளகு, வெந்தயம், நெல்லி முள்ளி இவை மூன்றையும் அரைத்து தலையில் தேய்த்து கொண்டால் முடி வளர நல்லது.

·  கொத்தமல்லி விதையுடன் (தனியா) இஞ்சியை துருவி சேர்த்து அரைத்து தேங்காய் எண்ணெய் சேர்த்துக் குளித்தால் பித்தம் போகும். முடி உதிர்தல் நிற்கும்.

· செம்பருத்திப்பூ – இதை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்; முடி உதிர்தல் குறையும். செம்பருத்தி இலை, பூ இவற்றை சீயக்காய் தூளுடன் கலந்து அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வருதல் மிகவும் நல்லது. கெமிக்கல்கள் கலந்த ஷாம்புவை உபயோகித்தபின், செம்பருத்தி இலையை வெந்நீரில் வேக வைத்து தலையில் தேய்த்து குளித்துவந்தால் ஷாம்புவினால் ஏற்படும் கெடுதிகள் உண்டாகாது.

· பச்சை கறிவேப்பிலையை பால் விட்டு அரைத்து, தலையில் தடவி, 1 மணிநேரம் கழித்து குளித்தால் முடி உதிர்வதை தவிர்க்கலாம்.

· தினமும் 1 டீஸ்பூன் திரிபால சூரணம், படுக்குமுன், தண்ணீர் அல்லது பால் சேர்த்து குடிக்கவும். முடி வளர்ச்சிக்கு உதவும்.

· நீலிபிருங்காதி தைலம், பிருங்காமலாதி தைலம், பிருங்கராஜ் தைலம், தூர்வாதி தைலம், கருசிலாங்கண்ணி தைலம், பொன்னாங்கண்ணி தைலம் ஆகிய தைலங்கள், முடி இழப்பை நிறுத்தி முடி வளர உதவும் ஆயுர்வேத தைலங்கள். தொன்றுதொட்டு பயன்பட்டுவருபவை.

· அதிமதுரத்தை (LIquorice) இடித்து பொடி செய்து, எருமைப்பால் சேர்த்து நன்றாக அரைத்து, எருமைப்பாலிலேயே குழைத்து, தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், வழுக்கை விழுந்த இடங்களில் முடிவளரும்.

· உடலின் தற்காப்பு சக்தியை மேம்படுத்த பயன்படும் நரசிம்மரசாயனம், குமாரயஸ்வசவம், பிருங்கராஜஸவம் போன்ற உள்ளுக்குள் கொடுக்கப்படும் மருந்துகளால் முடி வளர்ச்சி பெருகும்.

· தலைக்கு குளித்தபின், கூந்தலுக்கு “புகைபோட”, வெந்தயம், துளசி, வேப்ப இலைகள், இவைகளை பயன்படுத்தினால் கூந்தல் வளர்ச்சி பெருகும் என்கிறது ஆயுர்வேதம்.

· கீழ்கண்ட மூலிகைகளை அரைத்து பாலுடன் / தேனுடன் சேர்த்து தலைக்கு தேய்த்து வந்தால் கூந்தல் உதிர்வது நின்று, முடி செழித்து வளரும், ஜடமான்சி, குஷ்டா (கோட்டம் – Saussurea Lappa), கறுப்புஎள், நன்னாரி, நீல வண்ண அல்லி (Nymphaea stellata). செம்பருத்தி, பிருங்கராஜ் (கரிசிலாங்கண்ணி – Eclipta Alba), நீர்பிரம்மி, (Bacopa Monnieri) அதிமதுரம், குந்துமணி, குடூச்சி, இவைகளின் களிம்பை தலையில் தடவி வந்தால் முடி செழித்து, கருமையாக வளரும்.

· கடுக்காய் பொடி, நெல்லிக்காய் பொடி, இவற்றை பாலில் ஊற வைத்துக் குளித்தால், முடிஉதிர்வது நிச்சயமாக நிற்கும்.

· முடி உதிராமல் இருக்க அடிக்கடி தண்ணீர் குடிக்கவும்.

· சோற்றுக் கற்றாழையின் உள்ளிருக்கும் சோற்றை எடுத்து தலையில் தேய்த்து வர வழுக்கை குறையலாம்.

· உணவு ஜீரணம் சரிவர நடக்க வேண்டும்.  மலச்சிக்கலை தவிர்க்கவும்.

· கபத் தொல்லைகள் சைனஸ் தொல்லைகள் இருந்தால் அவற்றை போக்க சிகிச்சை மேற்கொள்ளவும்.

· யோகாசனங்கள் பலனளிக்கும்.

ஆயுர்வேதம் டாக்டர் எஸ். செந்தில் குமார் எழுதிய முடி கொட்டுவதை தடுக்க என்ற புத்தகத்திலிருந்து.


Spread the love