தானிய உணவே, தகுதியான உணவு.

Spread the love

உணவு முறையில் புதுசு புதுசாக கண்டுபிடித்தாலும், தானிய உணவுக்கு இருக்கும் மவுசே தனி. என்ன தான் வெரைட்டி ரைஸ் சாப்பிட்டாலும், தானிய வகை உணவுகளே முழு சக்தியைத் தருகின்றன. இதை நாம் சொல்லவில்லை. டாக்டர்கள் சொல்கிறார்கள்.

தானிய உணவை தள்ளி வைக்கும் வித்தியாசமானவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். இதோ பின்வரும் தானியங்கள் பற்றிய லிஸ்டில் அவற்றின் நன்மைகளைப் படித்தீர்களானால், தானிய உணவுக்கு ‘நோ’ சொல்ல மாட்டீர்கள். ‘யெஸ்’ மட்டுமே சொல்வீர்கள்.

கேழ்வரகு

கேழ்வரகுக்கு ராகி என்ற இன்னொரு பெயரும் உண்டு. ராகி எளிய முறையில் பயிர் செய்யக் கூடிய ஒரு தானியம். அதை யாரும் விரும்ப உண்ணாததினால் இந்த தானியம் கடையில் கிடைப்பது கூட மிகவும் அரிதாகி விட்டது. இதில் நிறைய கலோரிகள் உள்ளன. சுண்ணாம்புச் சத்தும் கேழ்வரகில் அதிகம். உதாரணமாக, 100 கிராம் கேழ்வரகில் 344 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்துள்ளது. கேழ்வரகு எளிதில் செறிக்கக் கூடியது, விலையும் மலிவு. இந்த தானியமானது மழைக் காலத்தை மட்டும் நம்பியிராமல் எல்லா காலத்திலும் பயிர் ஆகும். நீர் வறண்ட பருவ காலங்களிலும் பயிர் வளரும். தண்ணீர் அதிகமிருந்தால் அரிசிக்கு இணையான விளைச்சலைக் கொடுக்கும் ராகி பூச்சிகளால் சேதம் அடையாது. சுமார் 50 வருடம் வரை நீடித்து நிலைத்திருக்கும்.

ராகியின் பயன்கள்

இதில் கால்சியம் அதிகம் இருப்பதால் மாதவிடாய் அடைந்த பெண்களுக்கு எலும்பு பலவீனத்தைத் தடுக்க ராகி ஒரு சிறந்த உணவாகும். பாலைவிட ராகியில் இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் அதிகம் இருப்பதால் இது குழந்தைகளுக்கு ஒரு சிறந்த உணவாகும். ஆறு மாதக் குழந்தைக்கு பாலுக்குப் பதிலாக ராகியை மாற்று உணவாகக் கொடுக்கலாம். நீரிழிவு மற்றும் உடற் பருமனைக் குறைக்கும் ராகி செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் அதிக நேரம் வயிறு நிரம்பியது போலவே இருக்கும். இதில் நார்ச் சத்து அதிகமுள்ளதால் மலச்சிக்கலைப் போக்கும். ராகியில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவு (138 மி.கி. 100 கிராம்) ராகி பயிரை ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கும் தீவனமாகப் பயன்படுத்தலாம். ராகியை தோசை, இட்லி, ரொட்டி, கஞ்சி, களி போல செய்து சாப்பிடலாம். தற்பொழுது ராகி பிஸ்கட் வடிவத்திலும் கிடைக்கிறது.

கம்பு & இது காட்டுப்பகுதியில் விளையும் புன்செய் பயிர். இதன் வளர்ச்சிக்கு சிறிதளவு தண்ணீரே போதுமானது. உரமோ, பூச்சிக்கொல்லி மருந்தோ இல்லாமல் வளரும் ஒரு பயிர். கம்பு மிகவும் சுவை மிகுந்தது. சமைத்த பின்பு அதன் அளவு மூன்று மடங்கு அதிகரிக்கும் தன்மையுள்ளது. இதில் வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் நிறைய உள்ளன. இதில் மாவுச் சத்து அதிகம் உள்ளதால் அதிக சக்தி கொடுக்க வல்லது. கம்பில் புரதச் சத்தும் நார்ச் சத்தும் அதிகமுள்ளது.

கம்பின் பயன்கள்

கம்பு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் புண் வராமல் தடுக்கலாம். மேலும் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் தடுக்க முடியும். சில புற்றுநோய்களையும் வராமல் தடுக்க முடியும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு. நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவும்.

கம்பு சாப்பிட்ட பின்பு வயிறு நிரம்பியது போல் தோன்றுவதால் மேலும் அதிக உணவு உண்ண முடியாது. இதன் மூலம் உடல் பருமனாக உள்ளவர்களுக்கு எடை குறைய வாய்ப்பு உண்டு. கம்பு மாவை இரவில் நீரில் கொதிக்க வைத்துவிட்டு காலையில் கம்புடன் தயிர் அல்லது மோர் கலந்து கஞ்சி அல்லது கூழ் போல் அருந்துவது உடலுக்கு மிகவும் நல்லது. முக்கியமாக கோடை காலத்தில் மிகுந்த சக்தியையும், குளிர்ச்சியையும் தரும். கம்பை களி, கஞ்சி, ரொட்டி, தோசை, பிஸ்கட் போலவும் செய்து சாப்பிடலாம்.

சோளம் & கம்பு மற்றும் ராகியைப் போலவே இதன் வளர்ச்சிக்கும் குறைவான தண்ணீரே போதுமானது. நெற்பயிருக்குத் தேவையான நீரில் நான்கில் ஒரு பங்கு தண்ணீரே சோளப் பயிருக்குப் போதுமானது. ஆகையால் சோளத்தை உணவில் அதிகமாகப் பயன்படுத்தும்போது, மறைமுகமாக தண்ணீரையும் சேமிக்கிறோம். இதில் கலோரி அதிகமுள்ளதால் (349 மில்லி கிராம்) உடம்பிற்கு அதிக சக்தி கொடுக்க வல்லது. இதில் பாஸ்பரஸ் சத்து (222 மில்லி கிராம்) அதிகமுள்ளது. பாஸ்பரஸ் சத்து பல் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் தேவையானது.

சோளத்தை ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு மட்டுமே தீவனமாக எண்ணிக் கொண்டிருந்த காலம் போய் தற்பொழுது உணவில் பெரும் பங்கு வகிக்கிறது. தற்பொழுது கடற்கரையிலும் பொது இடங்களிலும் சோளக் கதிர், சோளப் பொரி போன்றவை விற்பதையும் அதை ஆர்வத்துடன் பெரியவர்களும், குழந்தைகளும் விரும்பி வாங்கிச் சாப்பிடுவதையும் பார்க்க முடிகிறது.

சோளத்தின் பயன்கள்

இதில் வைட்டமின் பி1, பி15, சி. உள்ளன. நார்ச்சத்து அதிகமுள்ளது. இது மூளையை நன்றாக செயல்பட உதவுவதால், மன உளைச்சலைக் குறைக்கிறது. இதில் ஹோமோ சிஸ்டின் () அளவைக் குறைக்கும் திறன் உள்ளதால் மாரடைப்பு வருவதை வெகுவாகக் குறைக்கிறது. சோளத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் வருவதைத் தடுக்க முடிகிறது. சோளத்தை சோளப் பொரி, சோள எண்ணெய், சோள ரொட்டி என பல வகைகளில் உபயோகப்படுத்தலாம். இது மக்களுக்கு உணவாக மட்டும் பயன்படாமல் மருந்து தயாரிப்பதற்கும், சுவரொட்டி, கால்களுக்குப் போடும் பாலிஷ் செய்வதற்கும் மற்றும் பல மருந்துப் பொருட்கள் தயாரிப்பதற்கும் பயன்படுகின்றன.

தினை & தினையும் ஒரு புன்செய் பயிர்தான். கோடை காலத்தில் வளரும் ஒரு முக்கிய பயிர். தினையை விதைத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களிலேயே அறுவடைக்குத் தயாராகி விடும். பண்டைக் காலத்தில் தேனும், தினை மாவும் ஒரு முக்கிய உணவாக இருந்ததை நம் நூல்களில் படித்து தெரிந்து கொண்டோம். ஆனால், தற்பொழுது மனிதர்கள் அதை உணவாக எடுத்துக் கொள்வது இல்லை. அதற்கு மாறாக வீட்டிலுள்ள செல்லப் பிராணிகளுக்கு உணவாகக் கொடுப்பதை நாம் பார்க்க முடிகிறது.

மற்ற தானியங்களைப் போலவே தினையிலும் சுண்ணாம்புச் சத்து, நார்ச்சத்து மற்றும் கலோரிச் சத்து அதிகம் உள்ளது.

பல வகைகளில் நன்மைதரும் இயற்கையின் வரப்பிரசாதமான இந்த தானிய வகைகளால நம் மட்டிலும் பயன் அடைந்தால் போதாது. நமது வருங்கால சந்ததியினரும் பயன்பெறும் வகையில் இன்றைய இளைய சமுதாயத்தினருக்கும் இதனை நாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

இயற்கை உணவே சத்தான உணவு என்பது உறுதி. இதை நீங்கள் தினமும் கடைபிடித்தால் ‘உண்மை இதுவே’ என்பதை உணர்வீர்கள்.


Spread the love