`பெண்களே நன்னடத்தை உள்ளவர்கள்!’
`ஆண்களை விடத் தாங்களே நன்னடத்தை உள்ளவர்கள்’ என்பது பெண்கள் எப்போதும் பெருமைபாராட்டிக்கொள்ளும் ஒரு விஷயம். அது உண்மை தான் என்று ஆய்வுரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வானது நேர்மை, ஒழுக்கம் தொடர்பான கேள்விகளுக்குப் பெறப்பட்ட பதில்கள் அடிப்படையில் அமைந்தது. இதில் தான், நல்ல நடத்தையில் ஆண்களை விடப் பெண்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பலர், கண்டிப்பான நேர்மைக் கொள்கை உடையவர்களாக இருப்பது தெரிய வந்தது.
ரோஜர் ஸ்டீயர் என்ற முன்னணி தத்துவியலாளர் இந்த ஆய்வை மேற்கொண்டார். இதில், பெண்கள் தங்களின் ஒரு முடிவு பிறர் மீது எந்தத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சிந்தித்து முடிவெடுக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு நபரின் நன்னடத்தை, ஓர் அலுவலகத்தில் நுழையும் போது அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு செய்து தொகுத்திருக்கிறார் ரோஜர்.
இவர் தனது ஆய்விற்காக 200 நாடுகளைச் சேர்ந்த 60 ஆயிரம் தன்னார்வ பங்கேற்பாளர்களிடம் கேள்விகள் கேட்டுப் பதில்களைப் பெற்றார். அந்த 60 ஆயிரம் நபரில் தலைமை நிர்வாகிகள் முதல் அடிப்படைத் தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் வரை அடங்குவர்.
மொத்தத்தில் இந்த ஆய்வு முடிவு, பெண்களைத் தலைநிமிரச் செய்வதாகவும், ஆண்கள் தலையில் கொட்டுவதாகவும் அமைந்துவிட்டது!