பெற்றோர்கள் அதிக உப்புச் சத்தும், அதிக கொழுப்புச் சத்தும் அதிக இனிப்புச் சத்தும் கொண்ட ‘பாஸ்ட் ஃபுட்’ ‘ஜங்க் ஃபுட்’ என்ற சத்தற்ற உணவு வகைகளையும் அதிக வெற்று கலோரிகளைக் கொண்ட உணவுகளை சிறந்த உணவாக கருதிக் கொண்டு தங்கள் குழந்தைகளுக்கு அதிக அளவில் கொடுத்து வருகிறார்கள். இத்தகைய தீங்கு தரும் உணவுகள் உங்கள் குழந்தையின் மூளையின் செயல்திறனை வெகுவாக பாதிக்கக் கூடும். எனவே, தேர்வுக் காலங்களில் உங்கள் குழந்தைகளுக்கு இப்போது கொடுக்கும் ‘லிஸ்டில்’ உள்ள உணவுகளை தராதீர்கள், விலக்கி வையுங்கள்.
ஜங்க் ஃபுட், பாஸ்ட் ஃபுட், என்று பல பெயர்களில் அழைக்கப்படும், பீசா, பர்கர், ஹாட் டாக் (Hot dog) பல் வகையான எண்ணெய்கள், டால்டாவில் பொரித்தெடுத்த உருளைக் கிழங்கு சிப்ஸ் வகைகள், பிங்கர் சிப்ஸ் (Finger Chips) முழுக்க முழுக்க தூய்மைப்படுத்தப்பட்ட (Processed) மைதா மாவு, ரவை, இவற்றை மூலப் பொருட்களாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட, புரோட்டா, நாண், புல்கா போன்ற ரொட்டி வகைகள்.
எண்ணெயில் பொரித்தெடுத்த போண்டா, பஜ்ஜி, வடை, பக்கோடா, சமோசா போன்ற நொறுக்குத் தீனிகள்.
பேக்கரியில் மைதா மாவைக கொண்டு தயாரிக்கப்பட்ட இனிப்பும், கிரீமும் கலந்த பல்வகையான பிஸ்கட் வகைகள், கிரீம் கலந்த கேக் வகைகள், வெள்ளை ரொட்டி, பப்ஸ் வகைகள்.
அதிக சர்க்கரை, அதிக நெய் அல்லது வனஸ்பதி கலந்த இனிப்புப் பண்டங்களான அல்வா, மைசூர் பாகு, பால்கோவா போன்ற இனிப்பு வகை தின்பண்டங்கள்.
வெற்று கலோரிகளைக் கொண்ட மென்பானங்களான கோலாக்கள், செயற்கை வகை பழச்சாறுகள், சோடா வகைகள்.
எண்ணெயில் பொரித்தெடுத்த பல்வகையான காரம் நிறைந்த கார வகைகள், தரக் குறைவான முறையில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம், சர்பத் வகைகள், மைதா மாவில் தயாரித்த பல்வகையான நூடுல்ஸ் வகை உணவுகள்.
ஏன் இவற்றை தவிர்க்க வேண்டும்?
ஃபாஸ்ட் ஃபுட் வகை உணவுகளிலுள்ள அஜினோ மோட்டோ என்ற சுவை தரும் சேர்ப்பானது, உங்கள் குழந்தையின் செரிக்கும் ஆற்றலை சிதைத்து பல்வகையான ஜீரணக் கோளாறுகளுக்கு ஆளாகக் கூடும், மேலும் மென்பானங்களில் சேர்க்கும் பல்வகையான செயற்கை சேர்ப்பிகள் உங்கள் குழந்தையின் உடல் நலத்தையும், உள்ள நலத்தையும் தேர்வுக் காலங்களில் பாதிக்கும் தன்மை உடையவை. மேலும், வெற்று கலோரிகளானது (Empty Calories ) உங்கள் குழந்தையை மனச்சோர்விற்கு ஆளாக்கக் கூடும்.
தரக் குறைவான எண்ணெய்களில் தயாரித்த வடை, பஜ்ஜி போன்ற பண்டங்கள் உங்கள் குழந்தைகளின் வயிற்றுக்குச் சேராமல், உங்கள் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு, வயிற்று வலி போன்ற சிக்கலை ஏற்படுத்தக் கூடும்.
எனவே, தேர்வுக் காலங்களில் உங்கள் குழந்தைகளுக்கு மூளையின் ஆற்றலைக் குறைக்கக் கூடிய உணவு வகைகளைக் கொடுப்பதை பெற்றோர்கள் விலக்குவது நல்லது. அதிக செயற்கை சர்க்கரை பொதிந்துள்ள பண்டங்கள் குழந்தைகளுக்கு ஏற்றதல்ல.