தண்ணீர் எப்ப குடிக்கலாம்?

Spread the love

உணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன்பும், உணவு உண்டபின் அரை மணி நேரம் கழித்தும் தண்ணீர் பருகுவது நல்லது என்கிறார்கள். அதற்காக, உணவு தொண்டையில் அடைத்துக் கொள்ளும்போதோ, புரை ஏறும்போதோ, விக்கல் வரும்போதோ தண்ணீர் குடிக்காமல் இருந்து விடாதீர்கள். அது உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

சாப்பாட்டின்போது இடையிடையே தண்ணீர் அருந்துவது; சாப்பிட்டு முடித்த உடன் தண்ணீர் அருந்துவது நம்முடைய பாரம்பரிய பழக்கமாகி விட்டது. அதை மாற்றுவது கொஞ்சம் சிரமம்தான். சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் அதிகம் குடித்தால், அதிகமாக சாப்பிட முடியாது என்று சொல்வார்கள். தண்ணீர் குடித்தால் அது உடனே சிறுநீராக வெளியேறும் என்று முன்பெல்லாம் சொல்லி வந்தார்கள். ஆனால், சமீபத்திய ஆய்வு முடிவுகளில், தண்ணீரும் ஒரு உணவுப் பொருள்தான். அது செரிமானம் ஆக அரை மணி நேரம் ஆகும் என்று தெரிய வந்துள்ளது.

சரி விஷயத்துக்கு வருவோம்.. நாம் உண்ணும் உணவை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அசைவம் & சைவம் என்றுதானே என நினைக்க வேண்டாம். அதாவது சாப்பிட்டவுடன் தண்ணீர்த் தாகத்தை அதிகமாகத் தூண்டுபவை முதல் வகை. சாப்பிட்ட பின்னால் தண்ணீர் தாகத்தைத் தூண்டாதவை இரண்டாவது வகை. இதில் முதல் வகை உடல்நலத்துக்கு ஒத்து வராதது. 2வது வகை உடல் நலத்துக்கு ஒத்து வரக்கூடியது.

சாப்பிட்டவுடன் தண்ணீர்த் தாகம் அதிகமாவதற்கு காரணம், நாம் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதற்கு தண்ணீர் அதிகமாகத் தேவைப்படுகிறது என்பதுதான். இரண்டாவது வகை உணவு செரிமானம் ஆக கடினமாக இல்லாததால் தண்ணீரும் அதிகம் தேவைப்படுவதில்லை. முதல்வகை உணவு உண்பவர்களும் இரண்டாம் வகை உணவு உண்பவர்களும் இரவில் ஒரே அளவு தண்ணீர் குடித்துவிட்டுப் படுத்தாலும் முதல் வகையினருக்கு குறைந்த சிறுநீர் வெளியேற்றமும் இரண்டாம் வகையினருக்கு அதிகச் சிறுநீர் வெளியேற்றமும் இருக்கும். இதற்கு காரணம் முதல்வகை உணவு எதிர்மறையானது என்பதே ஆகும். அதனால்தான் சிறுநீர் குறைந்த அளவு வெளியேறுகிறது. இதனால், சிறுநீர் முழுவதுமாக கழித்த திருப்தி ஏற்படாது. இந்த நிலை தொடர்ந்தால், அது தொடர்பான நோய்களும் ஏற்படலாம். அதனால் தாகத்தை அதிகம் தூண்டாத 2ம் வகை உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வதே உடல் நலனுக்கு சிறந்ததாகும்.

மருந்தே உணவு; உணவே மருந்து என்பது அனைவரும் அறிந்ததே. எண்ணெயில் வறுத்தும், பொறித்தும் உண்ணும் உணவுகள் அனைத்தும் முதல் வகையான உணவுகள். அவை உடல் நலத்துக்கு ஊறு விளைவிப்பவை. ஆவியில் வேக வைத்த உணவுகள், சமைக்காத காய், கனி உணவுகள், தானியங்கள், பழச்சாறு ஆகியவை 2ம் வகை உணவுகளாகும். இரண்டாம் வகை உணவுகளையே உண்போம். நோயின்றி வாழ்வோம்.


Spread the love