கோதுமை உணவு வகைகள்

Spread the love

மேத்தி சப்பாத்தி (வெந்தயக்கீரை)

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு –2கப்

வெந்தயக்கீரை  –1கட்டு

நல்லெண்ணெய் –2டே.ஸ்பூன்

நெய்            -தேவையான அளவு

உப்பு            -தேவையான அளவு

மிளகாய் பொடி  –1/2டீஸ்பூன்

கரம் மசாலா    –1டீஸ்பூன்

ஓமம்           –1/2டீஸ்பூன்

செய்முறை

வெந்தய கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கோதுமை மாவுடன் எல்லாப் பொருள்களையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து 2 மணி நேரம் ஊற விடவும். பின்னர் அந்த மாவை சப்பாத்திகளாக இட்டு சிறிது நெய் விட்டு சுட்டெடுத்துப் பரிமாறவும்.

ஸ்டப்டு பராத்தா

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு    –1கப்

மைதா மாவு       –1கப்

தண்ணீர், உப்பு     -தேவையான அளவு

வெஜிடபிள் மசாலா-1கப்

எண்ணெய்         -தேவையான அளவு

செய்முறை

கோதுமை மாவு, மைதா மாவு, உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து 2 மணி நேரம் ஊற விடவும். பின் அந்த மாவை மெல்லிய பூரிகளாக இடவும். இரண்டு பூரிகளுக்கு நடுவே மசாலாவை வைத்து ஒரங்களை தண்ணீர் வைத்து ஒட்டி விட வேண்டும். பின் தோசைக் கல்லில் சிறிது எண்ணெய் விட்டு சுட்டெடுத்து பரிமாறவும்.

(குறிப்பு: ஸ்டப்பிங் செய்ய எந்த விதமான மசாலாவையும் செய்து சப்பாத்திகளுக்கு நடுவில் வைக்கலாம்.)

கோபி பராத்தா

தேவையான பொருட்கள்

பராத்தாவிற்கு

கோதுமை மாவு  –2கப்

உப்பு             –1/2டீஸ்பூன்

தண்ணீர்         –3/4கப்

மசாலாவிற்கு

காலிஃபிளவர்   –150கிராம்

கொத்தமல்லி   -சிறிதளவு

இஞ்சி          –1இன்ச்

மாங்காய் பவுடர் (ஆம்சூர் பொடி)-1டீஸ்பூன்

கரம் மசாலாப்பொடி  –1டீஸ்பூன்

மிளகாய்ப்பொடி      –1டீஸ்பூன்

உப்பு                -தேவையான அளவு.

செய்முறை

கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து ஒரு ஈரத்துணியை போட்டு மூடி அரைமணி நேரம் ஊற விடவும்.

காலிஃபிளவர், கொத்தமல்லி, இஞ்சி மூன்றையும் துருவிக் கொள்ளவும். பின் காலிஃபிளவருடன் மசாலாவிற்கு சொன்ன பொருள்கள் அனைத்தையும் ஒன்றாகக் கலக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவில் எலுமிச்சம் பழ அளவு எடுத்து அதனை சப்பாத்திக்கல்லில் வட்டமாகத் தேய்த்து அதன் நடுவில் செய்து வைத்துள்ள மசாலாவை 1 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து, ஒரத்தில் 1 இடைவெளி விட்டு நடுவில் வைத்து பரப்பவும். அதன் மேல் 1 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவை தூவவும். (இப்படி செய்வதால் மாவு காய்கறிகளில் உள்ள ஈரத்தன்மையை ஊறிஞ்சி பராத்தா மொறு மொறுப்பாக இருக்கும்). அதே அளவு மாவை எடுத்து முதலில் தேய்த்த அளவு வட்டமாக தேய்த்து, காலிஃபிளவர் மசாலா வைத்த சப்பாத்தி மேல் வைத்து மூடி அதன் மேல் ஒரு சிட்டிகை உப்பு, மிளகாய் பொடி தூவவும். அதனை திரும்பவும் சப்பாத்திக்கல்லில் வைத்து மெதுவாக தேய்த்து தோசைக்கல்லில் போட்டு 2 டீஸ்பூன் நெய் விட்டு திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.

புதினா பராத்தா

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு –2கப்

புதினா இலை   –2டே.ஸ்பூன்

ஓமம்           –1டீஸ்பூன்

நெய்            –2டே.ஸ்பூன்

உப்பு            -தேவையான அளவு

மிளகாய்பொடி   –1/2டீஸ்பூன்

செய்முறை

புதினா தவிர மற்ற எல்லாப் பொருள்களையும் சேர்த்து, தண்ணீர் சேர்த்து பிசைந்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி அரை மணி நேரம் ஊறவிடவும். பின் அந்த மாவை சிறிய எலுமிச்சை அளவு எடுத்து திக்கான வட்டமாக தேய்க்கவும். அதன் மேல் 1 டீஸ்பூன் நெய்யைத் தடவவும். பின் அதனை இடப்புறம் சிறிது மடிக்கவும். வலப்புறமும் சிறிது மடிக்கவும். பின்னர் மேல்புறமும், கீழ்புறமும் மடிக்கவும். இப்போது வட்ட வடிவம் சதுரமாக மாறும்.

அதனை தேய்த்து சதுர பராத்தாவாக திக்காக தேய்க்கவும். அதன் மீது புதினா இலைகளை பொடியாக நறுக்கித் தூவி திரும்பவும் லேசாக பூரிக் கட்டையால் தேய்க்கவும். பின்னர் தோசைக்கல்லில் போட்டு நன்றாக வெந்தவுடன் சிறிது மிளகாய்ப் பொடியை மேலே தூவி சூடாகப் பரிமாறவும்.

ரவா ரோட்டி

தேவையான பொருட்கள்

ரவை     –1கப்

மைதா    –1/4கப்

ஓமம்     –1சிட்டிகை

சோம்பு    –1சிட்டிகை

உப்பு       -தேவையான அளவு

சீனி        –1/2டீஸ்பூன்

பால்        –1/2கப்

நெய்        –1டீஸ்பூன்

செய்முறை

பாலை லேசாக சூடாக்கவும். அதில் சீனியையும், உப்பையும் போட்டு கரைக்கவும். மைதா, ரவை, சோம்பு, ஓமம் முதலியவற்றை ஒன்றாகக் கலக்கவும். அதன் நடுவில் ஒரு குழி செய்து அதற்குள் பால் கலவையை ஊற்றவும். பின்னர் அந்த மாவை நன்றாகப் பிசைந்து ஈரத் துணியால் மூடி 10 முதல் 15 நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் நெய்யை உருக்கி அதனை மாவுடன் சேர்த்துப் பிசையவும். இதனை 12 சம பாகங்களாகப் பிரித்து உருண்டைகளாக உருட்டி மூடி வைக்கவும். பின்னர் இந்த உருண்டைகளை சப்பாத்திக் கல்லில் திக்காக தேய்த்து தந்தூரி அடுப்பில் பொன்னிறமாக சுட்டு எடுத்து நெய் தடவி பரிமாறவும். தந்தூரி அடுப்பு இல்லாதவர்கள் தோசைக் கல்லில் சுட்டு எடுத்துப் பரிமாறவும்.

ரவா பராத்தா

தேவையான பொருட்கள்

ரவை         –21/2கப்

உப்பு          -தேவையான அளவு

ஆலிவ் ஆயில்-2டே.ஸ்பூன்

செய்முறை

ரவை பெரியதாக இருந்தால் அதை மிக்ஸியில் அரைத்து நைசாக்கிக் கொள்ளவும். ரவையுடன் உப்பு, 2 டேபிள் ஆலிவ் ஆயில் ஊற்றி தேவையான அளவு தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து மாவு மிருதுவாகும் வரை பிசையவும். பின்னர் அதனை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திகளாக தேய்க்கவும். பின்னர் அதனை தோசைக்கல்லில் போட்டு மீடியம் நெருப்பில் சிறிது எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்.

சுவீட் பராத்தா

தேவையான பொருட்கள்

மாவிற்கு

கோதுமை மாவு   –2கப்

தண்ணீர்          -தேவையான அளவு

Filling

பொடித்த வெல்லம் –1/2கப்

முந்திரி            –15

கிஸ்மிஸ்          –1டே.ஸ்பூன்

ஏலக்காய் விதை   –1/2டீஸ்பூன்

நெய்              -தேவையான அளவு

செய்முறை

கோதுமை மாவுடன் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து அரைமணி நேரம் ஊற விடவும். ஊறிய பின் அதனை ஒரே அளவுள்ள உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். முந்திரியை சிறிது சிறிதாக உடைத்துக் கொள்ளவும். வெல்லம், முந்திரி, கிஸ்மிஸ், ஏலக்காய் விதை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். பின்னர் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை ஒரே அளவுள்ள சப்பாத்திக்களாக திக்காக தேய்த்துக் கொள்ளவும். ஒரு சப்பாத்தியின் மேல் மிக்ஸ் பண்ணி வைத்துள்ள Filling – ஐ வைத்து அதன் மேல் மற்றொரு சப்பாத்தியை வைத்து மூடி, ஒரங்களை ஒட்டி சப்பாத்திக்கட்டையால் லேசாகத் தேய்த்து தோசைக்கல்லில் போட்டு சிறிது நெய்விட்டு ஒரு பக்கம் வெந்தவுடன் மறுபக்கம் திருப்பிப் போட்டு சுட்டு எடுக்கவும்.

பராத்தா சாண்ட்விச்

தேவையான பொருட்கள்

பனீர்        –200கிராம்

குடமிளகாய் –1

வெங்காயம் –1

வெண்ணெய் (அல்லது) நெய்-தேவையான அளவு

சாட் மசாலா –1டீஸ்பூன்

எண்ணெய்   -தேவையான அளவு

மேரினேட் செய்ய

தயிர்                –1கப்

கொத்தமல்லி இலை –2டே.ஸ்பூன்

சீரகப் பொடி         –1/2டீஸ்பூன்

கரம் மசாலா        –1/2டீஸ்பூன்

சாட் மசாலா        –1/2டீஸ்பூன்

காலா நமக்         –1/4டீஸ்பூன்

மிளகாய்பொடி      –1டீஸ்பூன்

உப்பு               -தேவையான அளவு

மஞ்சள் பொடி      –1/2டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு பேஸ்ட்-1டீஸ்பூன்

ரூமாலி ரொட்டி     –4

(ரூமாலி ரொட்டியின் செய்முறை முற்பகுதியில் உள்ளது)

தயிர் புதினா சட்னி

புதினா இலை        –1/2கப்

கொத்தமல்லி இலை –1/2கப்

பச்சை மிளகாய்      –2

வெங்காயம்          -பாதி

பூண்டு               –2பல்

தயிர்                –11/2கப்

கறுப்பு உப்பு         –1சிட்டிகை

சீரகப் பொடி        –1/4டீஸ்பூன்

உப்பு               -தேவையான அளவு

1 முதல் 5 வரை உள்ள பொருட்களை அரைத்துக் கொள்ளவும்.

பின் அதனுடன் தயிர், கறுப்பு உப்பு, சீரகப் பொடி, உப்பு கலக்கவும். இதுவே தயிர் புதினா சட்னி.

செய்முறை

பனீரையும், குடமிளகாயையும் சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை அரை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். மேரினேட் செய்ய கொடுத்துள்ள பொருட்களையெல்லாம் ஒன்றாகக் கலந்து அதில் பனீரையும், குடமிளகாயையும் சேர்த்து 15 நிமிடம் ஊற விடவும். ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் மேரினேட் செய்த பனீரையும், குடமிளகாயையும் போட்டு 5 முதல் 6 நிமிடம் வரை குறைந்த நெருப்பில் அதில் உள்ள நீர் வற்றும் வரை வதக்கவும். ரூமாலி ரொட்டியின் மீது சிறிது நெய்யைத் தடவி அதன் மீது வதக்கி வைத்துள்ள பனீர், குடமிளகாய் கலவையை வைத்து அதன் மீது நறுக்கிய வெங்காயத்தை வைத்து சாட் மசாலா தூவவும். 1 டேபிள் ஸ்பூன் தயிர் புதினா சட்னியை வெங்காயத்தின் மீது தடவவும். பின்னர் ரூமாலி ரொட்டியை இடப்புறம் சிறிது மடிக்கவும், வலப்புறம் சிறிது மடிக்கவும். பின்னர் மேலும், கீழும் அதே போல் மடிக்கவும். இப்போது சதுர வடிவம் கிடைக்கும். அதனை ஒரு தோசைக்கல்லில் போட்டு சிறிது நெய் விட்டு வேக விட்டு இரண்டு பக்கமும் நன்றாக மொறு மொறுப்பாக வெந்தவுடன் இறக்கி ரைதாவுடன் பரிமாறவும்.


Spread the love