எடைக் குறைப்பில் ஈடுபட விரும்புகின்ற ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபடு முன்னர் தங்களது உயரத்தையும் அதற்கான சரி எடையை (Ideal Weight) யும் அறிந்து வைத்திருத்தல் அவசியம். அவ்வாறு அறிந்து வைத்திருக்கின்ற போதுதான் தாங்கள் எவ்வளவு எடை கூடுதலாக இருக்கின்றோம், அதனை எத்தனை வாரங்களில் குறைக்கலாம், எப்படிக் குறைக்கலாம் என்பன போன்றவற்றைத் திட்டமிட்டுச் செயல்படலாம்
ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அவர்களது உயரத்தை அடிப்படையாக வைத்து உடல் எடை எவ்வளவு இருக்க வேண்டும் என்று கணக்கிடப்படுகிறது. பல ஆயிரக் கணக்கானவர்களின் உயரத்தையும், உடல் எடையையும் எடுத்து அவற்றில் சராசரி (கிஸ்மீக்ஷீணீரீமீ) அளவினைக் கொண்டு இது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சரி எடை எனப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட அடிப்படையில் ஒவ்வெருவரும் தத்தம் உயரத்திற்கேற்ப எவ்வளவு எடை இருக்கலாம் என்பதற்கான அட்டவணை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்களது சரி எடை எவ்வளவு இருக்க வேண்டும் என்று நீங்கள் பார்ப்பதற்கு முன்பு ஒரு சிறு வேண்டுகோள். நம்மில் பலர், டாக்டர்கள் மற்றும் நண்பர்களிடம் பேசுகின்ற போது நமது உயரத்தின் அளவினைச் சிறிது கூட்டியும் எடையைச் சிறிது குறைத்தும் சொல்லுகின்ற பழக்கமுள்ளவர்களாக இருக்கிறோம். எனவே உங்களது சரிஎடையை நிர்ணயிக்கும் முன்னர் உங்களது சரியான உயரத்தையும், சரியான எடையையிம் மீண்டும் ஒரு முறை அளந்து உறுதி செய்து கொள்ளுங்கள்.
பெண்களுக்கும் ஆண்களுக்கும் உரிய உயரத்தையும் அதற்கான எடையையும் கொடுத்திருப்பதோடு அதன் பக்கத்திலேயே அவர்கள் உண்ணக்கூடிய, உண்ண வேண்டிய உணவின் கலோரி அளவும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அட்டவணையில் கொடுக்கப்பட்டிருக்கின்ற அளவைகள் ஏறத்தாழ அனைவரும் ஒரே வகை உடல்வாகு கொண்டவர்கள் என்ற அடிப்படையிலேயே கணக்கிடப்பட்டுள்ளன. ஏனெனில் மேல்நாட்டினரைப் போல் நம்மிடையே,
சிறிய தேகவாகு (Small Frame)
நடுத்தர தேகவாகு (Medium Frame)
பெரிய தேகவாகு (Large Frame)
என்று உடல்வாகில் மூன்றாகப் பிரிக்கின்ற போது ஒரு பிரிவையும் மற்றொரு பிரிவையும் பிரிக்கின்ற கோடு எந்த இடத்தில் போடப்பட வேண்டும் என்பது ஒரு விவாதத்திற்குரிய பொருளாகிவிடுகிறது. அத்துடன் மட்டுமின்றிப் பலர், தாங்கள் மிகு எடை கொண்டவர்கள் என்ற பட்டத்தைப் பெற விருப்பமின்றி, தாங்கள் அடுத்த வகை உடல்வாகு கொண்டவர்கள் என்று கூறித் தப்பிக்க முயல்கின்றனர். எனவேதான் இந்த ஏற்பாடு.
பிற சராசரி எடை அட்டவணைகளுடன் இதை ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது இங்கு கொடுக்கப்பட்டுள்ள சரிஎடை சிறிது குறைவாக இருப்பதுபோல் தோன்றினாலும் இதையே சரி எடை என்று கொள்ளலாம். ஏனெனில் இந்த அளவைகள் ஒரு மருத்துவக் கணிப்பில் கிடைத்த சராசரி அளவைகளே. மேலும் அண்மையில் நடந்த ஆணழகன் மற்றும் அழகிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் ஏறத்தாழ இதே அளவு எடை கொண்டவர்களாகவோ அல்லது ஒன்றிரண்டு கிலோ எடை குறைந்நவர்களாகவோதான் இருந்திருக்கின்றனர்.
என்றாலும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஒரு தனித்தன்மை பொருந்தியவர்கள். அவர்களது வளர்ப்பில், வசதிகளில், உணவு, தட்பவெட்ப நிலையில் உள்ள மாறுதல்களைப் பொறுத்து அவர்களது உடல் எடையில் சிறிது ஏற்றத்தாழ்வு இருக்கலாம். என்றாலும் மேற்குறிப்புட்ட அளவுகளிலிருந்து 3%க்கு மேல் ஏற்றமோ, இறக்கமோ இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
சரிஎடை பற்றிப் பேசுகின்றபோது, அதற்கு மேல் எத்தனை கிலோ கூடுதலாக இருக்கிறோம் என்பதை வைத்தே நம் உடல் நிலை எவ்வாறு உள்ளது என்று அளவிட முடியும். எடுத்துக்காட்டாக, நீங்கள் உங்கள் சரி எடையைவிட 20% எடை மிகுந்திருப்பீர்களானால் நீங்கள் மிகு எடையினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறீரிகள் என்று பொருள்.
5 4” உயரமுள்ள ஒரு பெண்மனி சாதாரணமாக 52.5 கிலோ எடை இருக்க வேண்டும். அவ்வாறின்றி இதற்கு மேல் 5 கிலோ எடை கூடுதலாக இருப்பாரானால் அவரது உடல் நலத்திற்கு இது ஊறு விளைவிக்க வாய்ப்பிருக்கிறது.
சரி எடையை விட 20% கூடுதலாக அவரிருந்தால் அவரது உடல் எடை 63.00 கிலோவாக இருக்கும். நிச்சயமாக இந்த மிகு எடை அவரது தோற்றத்தைப் பாதிப்பதோடன்றி இது தொடர்பான நோய்களையும் தோற்றுவிக்கும்.
5 7” உயரமுள்ள நாற்பது வயதான ஒரு ஆண் சாதாரணமாக 63.5 கிலோ எடை இருக்க வேண்டும். இவர் 76.5 கிலோ எடை இருக்கிறாரென்றால் 20% அதிகம் எடையுடன் இருக்கிறார் என்பது வெளிப்படை. இந்த மிகு உடல் எடையினால் அவரது தோற்றம் பாதிக்கப்பட்டு மேலும் குள்ளமாகத் தெரியும். அவரது செயல் திறன் பாதிக்கப்படுகிறது. உள்ளுறுப்புகளின் செயல் திறனில் குறைபாடு ஏற்பட்டு உயர் இரத்த அழுத்தம், இதயத்தாக்கு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பளிக்கிறது.
எனவே இவற்றிற்கெல்லாம் காரணமான அந்த மிகு எடையை (excess weight) உடம்பிலிருந்து களைவது மிக அவசியமாகிறது.
எடைக் குறைப்பு ஒரு மாயையா?
எடைக் குறைப்பு இன்று பலராலும் பல இடங்களிலும் பேசப்படுகின்ற விவாதிக்கப்படுகின்ற ஒரு சூடான விஷயம், கிட்டத்தட்ட எல்லா வார, மாதப் பத்திரிகைகளிலும் இது பற்றி எழுதப்படுகின்றது. நாகரீகம் மிகுந்தவர்கள் என்று எண்ணப்படுகின்றவர்களிடமும், நன்கு படித்தவர்கள் என்று கருதப்படுகின்றவர்களிடமும் இந்தச் சொல் மிகுதியும் புழக்கத்தில் இருப்பதைக் காண்கிறோம்.
முழுமூச்சாக எடைக் குறைப்பு முயற்சியில் இறங்கிப் பத்துப் பதினைந்து நாட்கள் முயன்ற பின்னர் பயன் ஏதுமில்லை என்று சொல்லி முயற்சியைக் கைவிட்டுவிடுபவர்களையும், சில நாட்கள் முயன்றதும் இதுநம்மால் ஆகாது என்று சொல்லி நழுவிவிடுபவர்களையும் நாம் பார்த்திருக்கிறோம். உணவுக் கட்டுப்பாட்டில் (ஞிவீமீt)ல் இருக்கின்றவரை எடை குறைகிறது,ஆனால் அதை விட்டு விட்டால் மறுபடியும் எடை கூடிவிடுகிறதே என்று அங்கலாய்ப்பவர்கள் பலர், இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி அரைப்பட்டினி கிடப்பது என்று வேதனைப்படுகினறவர்களையும் நாம் அறிவோம்.
அப்படியானால் பலராலும் பேசப்பட்டு. விரும்பப்பட்டு, மேற்கொள்ளப்பட்டுகின்ற இந்த எடைக்குறைப்பு ஒரு மாயைதானா? இதில் வெற்றிகளைக் காண முடியாதா என்று கேட்கலாம் இல்லை நிச்சயமாக இது மாயை இல்லை மன உறுதியுடன் உணவுக் கட்டுப்பாட்டினையும் உடற்பயிற்சியையும் மேற்கொண்டு இதில் முழு வெற்றி பெற்றவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றனர்.
பலரிடம் எடை குறைய வேண்டும் என்கிற எண்ணம்தான் இருக்கிறதே தவிர அதற்கேற்ற முயற்சிகள் இல்லை. வெறும் ஆசிகள் மட்டும் பலனைத் தரமாட்டா. வேறுசிலர் உணவுக் கட்டுப்பாடு செய்கிறேன் என்று பட்டினி கிடக்கத் துவங்குகிறார்கள். இது எத்தனை நாட்களுக்கு இயலும். மற்றும் சிலர் உடற்பயிற்சிகளை மட்டும் செய்துவிட்டு உணவில் கட்டுப்பாடின்றி இருக்கின்றனர். இதனால் அவர்களது உடல் நன்கு உருண்டு திரண்டு வளருமே தவிர எடை குறையாது.
வெற்றிகரமான எடைக் குறைப்பிற்கு உணவுக் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும், மன உறுதியும் தேவை. இவை மூன்றும் இருந்தால் நிச்சயமாக, எந்தவிதமான ஐயமும் இன்றி நீங்கள் வெற்றி பெறுவீர்கள். மிகு எடை குறைய வேண்டுமென்கின்ற ஆவலும் வேட்கையும் உங்களிடம் நிறைந்திருக்கிறது. இல்லையெனில் இந்நப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்க மாட்டீர்கள். பெரிதும் முயன்றால் அதற்குத் தேவையான மன உறுதியையும் உங்களால் வளர்த்துக் கொள்ள முடியும்.