சொரியாஸிஸ் என்பது என்ன?

Spread the love

சொரியாசிஸ் (Psoriasis) என்னும் சரும நோய்க்கு ஆட்பட்டவர்கள் அனுபவிக்கின்ற சோகமும் துக்கமும் சொல்ல முடியாதது. சமுதாயத்தில் அவர்கள் நடத்தப்படுகின்ற விதமும், அதனால் அவர்கள் அனுபவிக்கும் தாழ்வு உணர்ச்சியும் எவர் மனதையும் இளகச் செய்யும்.

சொரியாசிஸ் நோயாளிகள் ஒரு காலத்தில் தொழு நோயினர் (Leprosy) என்றே கருதி வெறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டனர். 1841 – ல் ஹெப்ரா என்ற மருத்துவர் தனது நீண்ட ஆய்வின் மூலம் இது தொழு நோயிலிருந்து மாறுபட்ட ஒரு சரும நோய் என நிரூபித்துக் காட்டினார்.

ஏறக்குறைய உலக மக்கள் தொகையில் ஒரு சதவிகிதத்தினர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் பல லட்சம் சொரியாசிஸ் நோயாளிகள் உள்ளனர். தடித்துச் சிவந்த நிறத்தில் சாம்பல் பூத்தது போன்ற செதில் செதில்களாக மூடப்பட்ட படை அல்லது பற்று போன்ற இச் சரும நோய் தலை, பிடரி, முழங்கையின் பின்புறம், முழங்கால் மற்றும் இடுப்பின் பின் பகுதி போன்ற இடங்களில் தோன்றித் தொல்லை தரும். பல நேரங்களில் இது பொடுகு, படை, எக்ஸிமா என்று தவறாகக் கூறி மருத்துவம் செய்யப்படுவதுமுண்டு.

நிரந்தரமாக குணமாகாத இந்நோய் மறைவதும் பின்னர் தோன்றுவதும் அடிக்கடி நிகழக் கூடிய ஒன்று. டாக்டர் மாற்றி டாக்டர், மருந்து மாற்றி மருந்து என்று இவர்கள் படும் துயரம் சொல்லில் அடங்காதது. நெடு நாட்களாக இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கூட, இது எதனால் ஏற்படுகிறது என்று தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிவதில்லை.

தொடர்ந்து நடத்தப்பட்ட பல ஆய்வுகளினாலும் இது தோன்றுவதற்குக் காரணம் என்ன என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் மன இறுக்கம், மனக்குழப்பம் போன்றவை ஏற்படும் போதும், சிலவகை மருந்துகள் உட்கொள்ளும் போதும் இதன் தாக்கம் அதிகரிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாற்று முறை மருத்துவர்கள் இதை வேரோடு அறிந்து விட முடியும் என்று கூறினாலும் அது போன்றதொரு மருந்து இது வரை வந்ததாகத் தெரியவில்லை. இதை நிரந்தரமாகக் குணமாக்க முடியாது போனாலும் சில வகை ஆங்கில மருந்துகள் இந்நோயின் தாக்கத்தையும் அது தரும் தொல்லையையும் கணிசமாகக் குறைக்க உதவுகின்றன.


Spread the love
error: Content is protected !!