நாம் செய்யும் செயல்கள் தான் நமக்கு நன்மையை அல்லது தீங்கை தரும். நடைமுறை வாழ்க்கையில் நாம் செய்யும் தொழில் என்னவாக வேண்டுமானால் இருக்கலாம். அதை செவ்வனே செய்தால் நமக்கு நன்மை பயக்கும். நம் பணியை நாம் ஊக்கமுடன் செய்ய வேண்டும். எல்லோரிடமும் சுமுகமாக, இனிமையாக பேச வேண்டும். நட்புடன் நம்முடன் வேலை செய்பவர்களுடன் பழக வேண்டும். அதே சமயத்தில் நாம் நண்பர்களையும், தீயவர்களையும் இனங்கண்டு கொள்ள வேண்டும். எவரால் நமக்கு நன்மை பயக்கும் என்று அறிவதை விட, எவரால் நமக்கு தீங்கு ஏற்படும் என்பதை அறிவது புத்திசாலித்தனம். நம் மனம் தான் நமக்கு மாபெரும் உதவிசெய்யும். நாம் நமக்கு வரும் தீங்குகளை அறிந்து செயல்பட்டால் தீங்கின் விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம்.
டி.வி.யில், நேஷனல் ஜியாகிராபிக் மற்றும் ‘அனிமல் ப்ளானெட்’ நிகழ்ச்சிகளில் பல கொடூரங்களை பார்க்கிறோம். ஒரு Wildebeestஎன்ற மாடு போன்ற ஒன்றை (இதை ஆப்ரிக்க மொழியில் gnu என்கின்றனர்) நாலைந்து கழுதைப் புலிகள் பிடித்து உயிருடன் சாப்பிடுகின்றன. கழுதைப்புலிகள், இந்த மாட்டை பின்பாகத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கடித்து தின்று வருகின்றன. மாடோ ஈனஸ்வரத்தில் அலறுகிறது. அதன் கண்களிலிருந்து நீர் வடிகிறது. சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான மிருகங்கள் இந்த கொலையை பார்த்துக் கொண்டு நிற்கின்றன. கருணை மிகுந்த கடவுள் ஏன் காப்பற்ற வில்லை என்பதற்கு பதில், ஊழ்வினை தான். தான் விதித்த விதிகளை கடவுளே மீறமாட்டார். இன்னொரு காட்சியில் ஐந்தாறு சிங்கங்கள் காட்டெருமை குட்டியை தாக்கும் போது, மற்ற பெரிய காட்டெருமைகள் ஒன்று சேர்ந்து, சிங்கங்களை விரட்டி அடித்து, எருமை குட்டியை காப்பாற்றுகின்றன.
நன்மையும், தீமையும் நமக்கு பிறர் தருவதாக நாம் நினைத்தால் அது நமது தவறு தான். நாம் வீட்டில் அமர்த்தும் வேலையாள் நமது நகை, பணத்தை திருடிசென்றால், சரியாக விசாரிக்காமல் அவனை வேலைக்கு வைத்த நாம் தான் தவறு செய்தவர்கள். தங்க ஆபரணங்களுடன் அகால வேலையில் வெளியில் செல்வது, ஒருவராக சென்று வங்கியில் பெருந்தொகைகளை எடுப்பது இவற்றையெல்லாம் செய்யக் கூடாது. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, பல சீட்டு கம்பெனிகளில் பணத்தை போட்டு ஏமாந்ததைப் பற்றி நமக்கு நன்றாக தெரியும். எனவே நல்லவராக இருங்கள். அதே சமயம் புத்திசாலித்தனம் தேவை. தீங்கு நேரிட்டால் அதை சமாளிக்க உதவும் நண்பர்களை, உறவினர்களை ஏற்படுத்தி அன்பு கொள்ளுங்கள்.
உங்கள் நலன் கருதி
ஆயுர்வேதம் டாக்டர் எஸ் செந்தில் குமார்