நீரிழிவு – இன்றைய நிலை

Spread the love

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் நீரிழிவு பிரிவு, சமீபத்தில் நடத்திய ஒரு முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ள விஷயங்கள், நீரிழிவு நோயின் தாக்கத்தின் தீவிரத்தை மறுபடியும் உறுதிப்படுத்துக்கின்றன. தமிழகத்தை பொறுத்த வரையில், இந்த ஆய்வு தெரிவித்துள்ளவை.

தமிழ்நாட்டில் 10 ல் ஒருவருக்கு நீரிழிவு வியாதி உள்ளது.

25 பேரில் இருவர் நீரிழிவு நோய் வரக்கூடிய அபாய நிலையில் உள்ளனர்.

80% தமிழ் நாட்டவர்கள் அதிக உடல் எடையும், கொழுப்பும் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதாவது “கெட்ட” கொலஸ்ட்ரால் (எல்.டி.எல்) மற்றும் ‘கொழுப்பு’ அதிகமாகவும், நல்ல கொலஸ்ட்ரால் (ஹெச்.டி.எல்) குறைவாகவும் இருக்கின்றனர்.

28% மக்கள் உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள்.

இந்த ஆய்வை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்துடன் இணைந்து நடத்தியது மதராஜ் நீரிழிவு ஆராய்ச்சி ஸ்தாபனம், இந்த ஆய்வின் நோக்கங்கள் – டைப் 2 நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் எவ்வளவு பரவியுள்ளது. நகரங்களில் உள்ள நீரிழிவு தாக்குதலுக்கும், கிராமங்களில் உள்ள தாக்குதலுக்கும் உள்ள வேறுபாடுகள், இதய நோய் உண்டாகும் அபாயங்கள், சிகிச்சையின் பயன்கள் – இவற்றை கணிப்பது – மூன்று கட்டங்களில், 20 வயதுக்கு மேற்பட்டவர்களில், இந்த ஆய்வு இந்தியாவின் 28 மாநிலங்களையும், டெல்லி மற்றும் இரண்டு மத்திய அரசாங்க ஆட்சியில் உள்ள பிரதேசங்களிலும் நடத்தப்படும். முதல் கட்டத்தில், தமிழ் நாட்டில் 4000 நபர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

“இந்த ஆய்வினால், முதல் தடவையாக வாழ்க்கை நிலை மாற்றங்களைப் பற்றிய முழு விவரங்களை அறிய முடியும். எவ்வளவு பேருக்கு இதய நோய், சிறுநீரக பாதிப்புகள் முதலியன ஏற்படும் என்பதை அறிய முடியும்” என்கிறார் ஆய்வுக்குழுவின் தலைவர் டாக்டர். ஆர்.எம். அஞ்சனா “வருமுன் காப்பது முக்கியம் தான். அதே சமயம் நீரிழிவு ஏற்பட்டவருக்கு தகுந்த, சிறந்த சிகிச்சை தருவதும் அவசியம் என்கிறார் டாக்டர். அஞ்சனா.

“சிகிச்சை பெறும் நீரிழிவு நோயாளிகளில் மூன்றில் ஒருவர் தான் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்” என்கிறார் அவர். அறியாமையும், வருமுன் காக்கும் நடவடிக்கைகள் இல்லாததும் முக்கியமான தடங்கல்களாக இருக்கின்றன. நகரப் புறங்களில் இருவருக்கு நீரிழிவைப்பற்றிய விவரங்கள் தெரிந்திருந்தால், ஒருவருக்கு தெரியாமல் இருக்கிறது. நாட்டுப்புறத்தில் இந்த விகிதம் 1:1 ஆக இருக்கிறது.

நீரிழிவு நிபுணர்களுக்கு கவலை அளிக்கும் புள்ளி விவரம் கிராமங்களில் அதிக நீரிழிவு நோயாளிகள் இருப்பது. இவர்களுக்கு சிறந்த சிகிச்சை சென்றடைவது கடினம்.

மற்றொரு ஆய்வை ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம் நடத்தியுள்ளது. இந்த ஆய்வில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 6000 பேர்கள் பங்கேற்றனர். இந்த ஆய்வின் படி, 43.3% நபர்கள் இயல்புக்கு மாறான குளூகோஸ் வளர்சிதை மாற்ற பாதிப்புக்கும், 75.3% நபர்கள் இயல்புக்கு மாறான அதிக கொழுப்பு அளவுகளுக்கும், 52% இயல்புக்கு மாறான உயர் ரத்த அழுத்தத்திற்கும் உள்ளாகி இருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

மேலே சதவிகித புள்ளி விவரங்களைப் பார்த்தோம். இப்போது எண்ணிக்கை புள்ளி விவரங்களை பார்ப்போம்.

தமிழ் நாட்டில் 42 லட்சம் நீரிழிவு நோயாளிகள் உள்ளனர்.

30 லட்சம் நபர்கள் நீரிழிவு வரும் அபாய கட்டத்தில் உள்ளனர்.

50 லட்சம் ஆண்களும், 76 லட்சம் பெண்களும் அதீத பருமனும், இருப்பு சதையும் உடையவர்களாக இருக்கின்றனர். மூன்றில் ஒரு பெண்ணும், பத்தில் இரு ஆண்களும், அளவுக்கு மீறிய தொந்தியும், தொப்பையுமாக இருக்கின்றனர்.

தமிழகத்தில் ஆண்களை விட அதிகமாக பெண்கள் நீரிழிவு நோயாளியாக இருக்கின்றனர். ஆண்கள் 48.6% பெண்கள் 51.4%.

இடுப்புச் சுற்றளவு

அதீத இடுப்பில் சேரும் சதை, கொழுப்பு ஆபத்தானது என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்ட உண்மை. இந்த சதை தேங்கி நிற்கும் வெறும் கொழுப்பல்ல. கொழுப்பாக இருந்தால் அதை உடற்பயிற்சிகள் முதலியவற்றால் குறைக்க இயலும். இந்த சதையில் ஹார்மோன்கள் உற்பத்தியாகி ஆரோக்கியத்தை பாதிக்கும்.

தமிழகப் பெண்கள், ஆண்களை விட அதிக ‘குண்டாக’ இருக்கின்றனர். பெரிய தொந்தியும், தொப்பையும் உடைய ஆண்கள் 22.4%, பெண்கள் 35.3%.

“வயிற்றை சுற்றிய அதிக கொழுப்பு ஆபத்தானது” என்கிறார். டாக்டர். மோகன், மதராஸ் நீரிழிவு ஆராய்ச்சி ஸ்தாபனத்தின் தலைவர். தொந்தி இருந்தால், சுவாச கோளாறுகள், இதய கோளாறுகள், புற்றுநோய் ஏற்படலாம். நீரிழிவு நோயை தூண்டி விடுவது அதிக பருமன் தான்.

இருக்க வேண்டிய, இருக்கக் கூடாத இடுப்பு சுற்றளவுகள்

இருக்க வேண்டிய இடுப்பளவு

அதிகமான இடுப்பளவு

மிக அதிகமான இடுப்பளவு

பெண்

80 செ.மீ.க்கு குறைவாக

80 லிருந்து 90 செ.மீ.

90 செ.மீ.க்கு மேல்

ஆண்

90 செ.மீ.க்கு குறைவாக

90 லிருந்து 100 செ.மீ.

100 செ.மீ.க்கு மேல்

ஒவர் பருமன் உள்ளவர்களுக்கு விரைவில் இன்சுலீனை எதிர்க்கும் தன்மை ஏற்பட்டு விடும். இதனால் டைப் – 2 நீரிழிவு ஏற்படும் அபாயம் அதிகம். இடுப்பு, வயிற்றை சுற்றி உள்ள கொழுப்புச் சதையை “எரித்து” விட முடியாது. இந்த கொழுப்பு, நாளமில்லா சுரப்பிகள் போல் ஹார்மோன்கள் மற்ற இதர பொருட்களை உண்டாக்கும். இவற்றால் இன்னும் பசி ஏற்பட்டு உடல் எடை மேலும் கூடும். என்று எச்சரிக்கிறார் டாக்டர். மோகன், மதராஸ் நீரிழிவு ஆராய்ச்சி ஸ்தாபன தலைவர்.

நீரிழிவு சிகிச்சை – ஸ்டெம் செல் சிகிச்சையில் முன்னேற்றம்

நீரிழிவு நோய் பெருகி வருகிறது என்ற அபாய செய்திகளுக்கு நடுவே நல்லதொரு செய்தியும் வந்திருக்கிறது. டைப் – 1 நீரிழிவு நோயாளிகளின் கணையம் இன்சுலீனை தயாரிக்க முடியாமல் போவதால், அவர்கள் உயிர் வாழ தினமும் செயற்கை இன்சுலீனை ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொள்ள வேண்டும். இந்த நிலை மாறி, உடலே மறுபடியும் இன்சுலீனை சுரக்க வைக்க ஸ்டெம் செல்களால் முடியும் என்பது பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்படுகிறது.

ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகம், வாஷிங்டன், அமெரிக்கா நடத்திய ஒரு பரிசோதனையில் மனித விந்துவை தயாரிக்கும் ஸ்டெம் செல்களை, ஆய்வுக் கூடத்தில் பராமரித்து வளர்த்தனர். இந்த செல்கள் இன்சுலீனை தயாரிக்கும் கணைய பீடா செல்களை போல் மாற்ற, சில கலவைகளை இவற்றுடன் சேர்த்து வளர்த்தனர். இந்த மாறிய ஸ்டெம் செல்கள், நீரிழிவு உள்ள எலிகளுக்கு மாற்றப்பட்டன. இந்த செல்கள், கணைய பீடா செல்களைப் போலவே, இன்சுலீனை சுரக்க ஆரம்பித்தன. இந்த சிகிச்சையை மனிதர்களுக்கு மாற்றும் முயற்சி கூடி வர அதிக நாட்களில்லை.

ஆயுர்வேதம்.காம்


Spread the love