எடை குறைப்புக்கு ஃபிளாக்ஸ் சீட்ஸ்

Spread the love

ஊட்டச்சத்து நிபுணர்கள் பலர், `ஃபிளாக்ஸ் சீட்ஸ்’ பவுடர் கலந்த வெதுவெதுப்பான நீரைக் காலையில் வெறும் வயிற்றில் பருகுங்கள், தொப்பைக் குறையும் என்று அறிவுறுத்துகின்றனர்.

எங்கே கிடைக்கும் இந்த ஃபிளாக்ஸ் சீட்ஸ் பவுடர்? எல்லா சூப்பர் மார்க்கெட்களிலும் கிடைக்கும். அப்படியானால், இது வெளிநாடுகளில் விளையும் விலை உயர்ந்த உணவா?’ என்று நீங்கள் நினைக்க வேண்டாம். இது நம் நாட்டில் இருக்கும் வெள்ளரி விதை, பூசணி விதை போன்றவற்றைப் போன்ற ஒன்றுதான். இதனை `ஆளி விதை’  என்று கூறுவார்கள்.

இந்த விதையை அப்படியே எடுத்துக்கொண்டால் செரிமானக் கோளாறு உண்டாகலாம். அதனால் இதைப் பொடியாகத்தான் உட்கொள்ள வேண்டும். இதில் நிறைந்துள்ள சத்துகளையும், உடல் எடை குறைய இது எப்படித் துணைபுரிகிறது என்பதை பார்ப்போம்..

ஆளிவிதையில் நார்சத்தின் அளவு அதிகம். இதைச் சரியான அளவில் உட்கொண்டால் அதிகம் பசியெடுக்காது. அது மட்டுமல்லாமல், உடல் எடையைக் கச்சிதமாக வைத்திருக்கவும் உதவும். இதிலுள்ள நார்ச்சத்து உடலில் கெட்ட கொழுப்பு சேருவதைத் தவிர்த்து, இதய நோய், பக்கவாதம் வராமல் பாதுகாக்கும்.

`லிக்னன்ஸ்’ எனப்படும் ஒருவகை ஆன்டிஆக்ஸிடன்ட் ஆளி விதையில் அதிக அளவில் உள்ளது. இது நேரடியாக உடல் எடையை குறைக்கத் துணைபுரியாவிட்டாலும், செல்களின் செயல்பாட்டை அதிகரித்து, தேவையற்ற கொழுப்பை எரிக்கத் துணைபுரியும். அத்துடன் உடலுக்குச் சிறந்த ஊட்டச்சத்தையும் பாதுகாப்பையும் அளிக்கும்.

ஆளிவிதை குறைந்த அளவு கார்போஹைட்ரேட், மாவுச்சத்து, சர்க்கரை ஆகியவற்றைக்கொண்டது. அதனால் கலோரியின் அளவும் குறைவாகவே உள்ளது. இதில் நார்ச்சத்தின் அளவுதான் அதிகம்.  இதில் 20 சதவீதம் புரதச்சத்து நிறைந்துள்ளதால், எளிதில் எடையைக் குறைக்க உதவும். அத்துடன் சைவப் பிரியர்களின் உடலுக்கு புரதச்சத்து அதிகம் தேவைப்பட்டால், ஆளிவிதைதான் சிறந்தது.

ஆளிவிதை ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்தது. பசியைக் கட்டுப்படுத்தி, நிறைவைத் தந்துவிடும். ஹார்மோன் குறைபாடு காரணமாக பெண்களுக்கு ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், முடி உதிர்வு மற்றும் மன உளைச்சலுக்கு சிறந்த மருந்து. தொடர்ந்து இதை உட்கொண்டு வந்தால், முடி உதிர்வது மட்டுப்படும்; முடி வளர்வதற்கு உதவும்.

மேலும், ஒழுங்கற்ற மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். அந்த நேரத்தில் ஏற்படும் வயிற்று வலி, தலைவலி, பதற்றம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். அத்துடன் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராமல் காக்கும். கர்ப்பப்பைச் செயல்பாடுகளை மேம்படுத்தும்.

சப்பாத்தி மாவு, தோசை மாவுகளில் ஆளிவிதைப் பொடியை சேர்த்துக்கொள்ளலாம். மில்க் ஷேக், ரைத்தா, ஓட்ஸ், கஞ்சி, சூப், சாலட், மோர், குழம்பு ஆகியவற்றில் ஒரு டீஸ்பூன் ஆளிவிதைப் பொடியை சேர்த்துக் கொள்ளலாம்.

ஆளி விதை எண்ணெயை சாலட்டில் சேர்த்துக்கொள்ளலாமே தவிர, சமைக்கும்போது உபயோகிக்கக் கூடாது. ஆளிவிதை எண்ணெயை குறிப்பிட்ட அளவுக்கு மேல் சூடாக்கினால், அது உணவை ஊசிப்போக வைத்துவிடும். ஆளிவிதை மாத்திரையை நாள் ஒன்றுக்கு ஒரு முறைதான் உட்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் வழக்கமாகப் பருகும் நீரைவிட அதிக அளவில் குடிக்க வேண்டும். மேலும் மருத்துவர் பரிந்துரையின்றி ஆளி விதை மாத்திரைகளை சாப்பிடவே கூடாது.

ஆளிவிதை உட்கொள்ளும் நாள்களில் அதிக அளவில் நீர் பருகவில்லை என்றால் மலச்சிக்கல், வாய்வு போன்ற உபாதைகளை ஏற்படுத்திவிடும். கர்ப்ப காலங்களின் ஆரம்பகட்டத்தில் இதை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில், இது இனப்பெருக்க அமைப்பின் வளர்ச்சியை பாதித்துவிடும்.


Spread the love