ஒல்லியாக இருப்பவர்கள் குண்டாக விருப்பப்படுகிறார்கள். குண்டாக இருப்பவர்கள் ஒல்லியாக விருப்பப்படுகிறார்கள். இது தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது.
ஒல்லியாக இருப்பவர்கள் குண்டாக விருப்பப்படலாம். ஆனால், குண்டாக இருப்பவர்கள் மேலும் குண்டாவது தான் தவறு. சீன நாட்டிலும், ஜப்பான் நாட்டிலும், தொந்தியோடும் தொப்பையோடும், ஊளைச் சதையோடும் குண்டாக இருப்போரைப் பார்ப்பது மிக அரிது. சமீப காலமாகத்தான் இந்தியாவில் குண்டாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. உலகளவில் குண்டாக இருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 30 கோடியாக இருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. அதாவது இவர்கள் எல்லோரும் தான் இருக்க வேண்டிய உடல் எடையை விட அதிக எடையுடன் இருக்கிறார்கள்.
உடல் குண்டாகவும் அதிக எடையுடனும் இருப்பவர்களுக்குத்தான் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு நோயாக வரத் தொடங்குகிறது. அதிக எடை உள்ளவர்களுக்கு முதலில் வரும் நோய் சோம்பேறித்தனம். இந்த சோம்பேறித்தனம் தான் உடலில் ஒவ்வொரு நோயாக வருவதற்குக் காரணமாகிறது. அதிக எடை உள்ளவர்களுக்கு முதலில் வரும் நோய் ‘டயாபடீஸ்’ அதாவது சர்க்கரை வியாதி. இதைத் தொடர்ந்து ரத்தக்கொதிப்பு, இதயநோய், பக்கவாதம், சரும நோய், பித்தப்பையில் கல், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாதல், புற்றுநோய், கால் மூட்டுவலி, ஹெர்னியா (குடல் இறக்கம்) காலின் மேற்பகுதியிலுள்ள இரத்தக்குழாய்கள் தடித்துச் சுருங்கிப் போதல் முதலியன ஏற்பட அதிக வாய்ப்புண்டு. சாதாரணமாக குவிந்து இருக்க வேண்டிய பாதங்கள் அதிக எடையுள்ளவர்களுக்கு சப்பையாக, சமமாக ஆகிவிடும். இதனால் சாதாரணமாக நடப்பதற்கும், வேகமாக நடப்பதற்கும் சற்று சிரமமாக இருக்கும். குண்டாகவும், அதிக எடையுடனும் இருக்கும் ஆண், பெண் இருவருக்குமே திருமணமான பின் தாம்பத்திய வாழ்வு திருப்திகரமாக இருக்க வாய்ப்பில்லை. மேலும் ஆண்களில் சிலருக்கு ஆண்மைக் குறைவும், குழந்தை பெற்றுக் கொள்ளும் பாக்கியமும் குறைந்து விடும். மொத்தத்தில் குண்டாக இருப்பவர்களுக்கும் அதிக எடை உள்ளவர்களுக்கும் நோய்கள் அதிகமாக வர வாய்ப்புண்டு என்பதை நினைத்து பயந்துவிட வேண்டாம்.
உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, உடல் ஆரோக்கியம், சரியான நேரத்தில் உணவை உட்கொள்ளுதல், உணவின் அளவைக் குறைத்தல், சத்தான உணவை உண்ணுதல் முதலியன. உடல் குண்டாகாமலும், அதிக எடை ஏறாமலும் இருக்க முக்கியக் காரணங்களாகும். அந்தக் காலத்தில் நமது முன்னோர்கள் தானியங்களுக்கும், காய்கறிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். சத்தான உணவைத்தான் சாப்பிடுவார்கள். அதற்கேற்றவாறு உடல் உழைப்பும், கடின வேலையும் இருக்கும். நாகரீகம் நாளுக்கு நாள் முன்னேறி வரும் இந்தக் காலத்தில் சாப்பிடும் உணவில் முக்கால்வாசி ரெடிமேடாகத் தயாராகி விடுகிறது. இதில் சர்க்கரையும், கொழுப்புச் சத்தும் தான் அதிகமாக இருக்கின்றது. உடலுக்குத் தேவையான நார்ச்சத்து எந்த உணவிலும் அதிகமாக காணப்படுவதில்லை.
உலக சுகாதார நிறுவன அறிக்கையின் படி, ஒவ்வொருவருடைய எடையும் சரியாக இருக்கிறதா? அதிகமாக இருக்கிறதா? என்பதைக் கண்டுப்பிடிக்க ஒரு கணக்கும் கொடுத்திருக்கிறார்கள். இந்தக் கணக்கை யார் வேண்டுமானாலும் போட்டுப் பார்த்து உங்கள் எடை சரியான அளவில் இருக்கிறதா என்று நீங்கள் கண்டுபிடித்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு உங்கள் எடை 64 கிலோ கிராம் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய உயரம் 1.6 மீட்டர் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுடைய எடையை, உங்களுடைய உயரத்தால் இரண்டு முறை வகுத்து விடுங்கள். கிடைக்கும் விடை 25 (64 1.6 6=25) இந்த 25 என்பது தான் உங்கள் உயரத்திற்கும், வயதிற்கும் சரியான எடை விகிதம். இந்த 25 உலக சுகாதார நிறுவன அறிக்கையின் படி பி.எம்.ஐ. என்று அழைக்கப்படும். 64 கிலோவுக்கு மேலிருப்பவர்கள் அதிக எடையுள்ளவர்களாகவும், 77 கிலோவுக்கு மேலிருப்பவர்கள் குண்டானவர்கள் என்றும் சேர்க்கப்படுவார்கள். உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்யுங்கள் கொழுப்பு, சர்க்கரை அதிகமுள்ள உணவைத் தவிர்த்திடுங்கள். உடலுழைப்பை அதிகப்படுத்துங்கள். தினமும் உடற்பயிற்சி பழக்கத்தை உண்டுபண்ணுங்கள். நார்ச்சத்து அதிகமுள்ள உணவைச் சாப்பிடுங்கள்.