கொழுத்த உடலை கொடிபோல் ஆக்கலாம்

Spread the love

தற்போதைய வாழ்க்கை முறையில் மனிதர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுள் ஒன்று உடல் பருமன் பிரச்சனை. கொழுத்த உடல் அல்லது அதிக உடற்பருமன்சிலரின் அன்றாடத்தைக் கூட சரிவர செயல்படுத்த முடியாத வகையில் இருக்கின்றது.

கொழுத்த உடல் பிரச்சனைக்கு முடிவு கட்டி கொடிபோல் உடலுக்கு ஆரம்பப் புள்ளி வைப்பது எளிதானது. அதை எப்படி என்று பார்ப்போம்-.

கண்ணில் பட்டதெல்லாம்.

வீட்டில் கண்படும் இடங்களில் எல்லாம் தரம் குறைந்த உணவுகள், கலோரி கூடிய உணவுகளான இனிப்பு, காரம் மற்றும் எண்ணெய் பண்டங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகள் இருக்கக் கூடாது. பார்க்கும் இடமெல்லாம் பழங்களாக, நல்ல உணவுகளே கண்ணில் பட வேண்டும். மேலும், தேவையற்ற உணவுகளான கொழுப்பு நிறைந்த உணவுகள், மாமிசம், முட்டை, பால், பால் சார்ந்த உணவுகள் (தீட்டிய அரிசி, மைதாவில் செய்யப்பட்ட உணவுகள்) போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

நல்ல மிளகு, இஞ்சி, வெள்ளைப் பூண்டு போன்ற மருத்துவக் குணம் உள்ள பொருட்கள் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும்.உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

குப்பையில் போடுவதை தொப்பையில் போடுவதா?

உடலும் மனமும் உண்பது போதும் என்று நினைக்கும்போது ஐய்யோ, தட்டில் போட்டு விட்டது வீணாகிறதோ. காசு கொடுத்து வாங்கியதை தூர கொட்ட முடியுமா? என்று நம் வாயைத் திறந்து வயிற்றில் திணிக்கக் கூடாது. வீணாய்ப் போவதை உள்ளே கொட்ட நம் வயிறு என்ன குப்பைத் தொட்டியா? எப்போதும் டேபிள் ஸ்பூனினால் உணவை தட்டில் எடுத்து வைக்க வேண்டும். அப்போது உணவின் அளவின் மேல் ஒரு கவனம் (conciousnes) இருக்கும்.

எப்போதும் உண்டால்?

நாம் எப்போதும் உண்டு கொண்டே இருப்பதை ஒரு பழக்கமாக்கிவிட்டோம். மகிழ்ச்சியைக் கொண்டாட உண்கிறோம். துக்கமாக இருக்கும்போதும் உண்கிறோம். சலிப்பாக இருக்கும்போதும் உண்கிறோம். தோல்வியில் துவண்டபோதும் அதை மறக்கவும் உண்கிறோம். பய உணர்வு உள்ள போது அதில் இருந்து விடுபடவும் உண்கிறோம்.

“வயிற்றை நினைப்பவன் வாழ்வில் உயரமாட்டான்” என்பது பழமொழி. வயிற்றை நினைக்காமல் ஆர்வத்தோடு உழைப்பில் கவனம் வைக்க வேண்டும். ஆர்வத்தோடு உழைக்கும்போது வயிற்றை மறக்கிறோம். உற்சாகமாக விளையாடும் குழந்தைகளும், ஆர்வமாக உழைக்கும் மனிதர்களும்அந்த வேளைகளில் உணவை மறக்கிறார்கள். அப்போது உடலின் எடையும் குறைகிறது. வாழ்வின் வளமும் கூடுகிறது.

தாமதமாக உண்ணவும்.

வாய், வயிறு என்பதை தொழிற் சாலைக்கு சமமாக எடுத்துக் கொள்ளலாம். ஆகவே, வாய், வயிறு என்ற தொழிற் சாலையை எத்தனை முடியுமோ அத்தனை தாமதமாக திறக்கவும் முடிந்தவரை சீக்கிரம் மூடவும் பழக வேண்டும்.

காலை உணவை (Breakfast) ஒன்பது அல்லது பத்துமணி என்று தாமதமாக உண்ண வேண்டும். இரவு (Dinner) உணவை ஆறு அல்லது ஏழு மணி என்று சீக்கிரம் முடித்துவிட வேண்டும். அப்போது உண்ணும் உணவின் அளவும் குறையும். உடல் எடையும் குறைய வாய்ப்பிருக்கிறது.

காரமற்ற காலை உணவு.

காலையில் வயிறு மென்மையாக இருக்கும். எனவே, காலை உணவில் காரமுள்ள சட்டினி, சாம்பார் இருக்கக் கூடாது. இந்த கார உணவுகள் வயிற்றில் உறுத்தலை உருவாக்கும்.மேலும், இந்த கார உணவுகள், நிறைய இனிப்பு உணவுகளை உள்ளே இழுக்கும்.இதனால் உள்ளே செல்லும் உணவின் அளவும் கூடும்.

காலை உணவில் பழ ஜுஸ் மற்றும் பப்பாளி, ஆப்பிள் என்று சாப்பிடலாம். இல்லையேல் சட்டினி, சாம்பார் இல்லாமல் வெறும் இட்டிலியோ, சப்பாத்தியோ சாப்பிடலாம். இதனால் சாப்பாட்டின் அளவு குறையும். நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் நார்ச்சத்து (Fiber) நிறைந்த பழங்கள், காய்கறிகள், கீரைகள் என தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.

நன்றாக மெல்லுக.

நாம் உண்ணும் உணவை இதுதான் கடைசி கவளம் என்ற உணர்வோடு அத்தனை நேரம் வாயில் வைத்து நன்கு மென்று அதன்பின் உணவை உள்ளே இறக்க வேண்டும். இதனால், உண்ட உணவு நன்கு செரிமானம் ஆகும். நாம் உணவை வாயில் வைத்து மெல்லும் போது நமது உமிழ்நீரில் கரைந்து அதில் ஒரு சிறுபகுதி வயிற்றுக்குச் செல்லாமல் நேரடியாக வாயிலிருந்து உடலின் முக்கியப் பகுதிகளுக்குச் செல்கிறது. இப்போது உணவை செரிக்க வயிற்றுப் பகுதி தயாராகிறது. இப்படிமென்று உண்பதால் குறைவாக சாப்பிட்டாலும் நிறைய சாப்பிட்ட திருப்தி உடலுக்கும் மனசுக்கும் கிடைக்கத்தான் செய்கிறது.

பசித்த பிறகே உண்.

சாப்பிடுகிற நேரம் வந்தவுடன் பசிக்கிறதோ இல்லையோ முதலில் தட்டில் கொட்டி வைத்து பிடி பிடியென பிடிக்கத் தொடங்குகின்றனர். இது சரியல்ல. நல்லபசி வரும் வரை உணவைத் தொடக் கூடாது. பசி வந்த பின் இரண்டு டம்ளர் நீர் அருந்த வேண்டும். அதன்பின் அரைமணி நேரம் சென்ற பின் உணவை உண்ண வேண்டும். அப்போதும் அரைவயிறு உண்டபின் எழுந்துவிட வேண்டும். பசியை முழுவதுமாக சாகடிக்கக் கூடாது. பசியை முழுவதுமாக கொன்றுவிட்டால் உடலும் மூளையும் சோர்வான நிலையில் மந்தமாக இருக்கும். எனவே,லேசான பசி இருக்கும்போதே சாப்பாட்டை முடித்துவிட வேண்டும்.

பிடித்தால் மட்டும்?

பொதுவாக நாம் போகும் இடங்களில் பார்க்க நேருகிற உணவின் வாசனை நம்மைச் சுண்டி இழுக்கலாம். அப்போது அந்த உணவை உண்ண வேண்டுமென்று எண்ணக் கூடாது. உண்மையிலேயே உணவின் மனத்திற்கும் சுவைக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் கிடையாது. ஆக, உணவின் வாசனை பிடித்தால அந்த வாசனையை மட்டும் ரசிக்க வேண்டும். அத்தோடு விட்டுவிட வேண்டும்.


Spread the love