நீங்கள் சற்று தேகம் மெலிந்தவராக இருந்தால், உங்களை சுற்றியிருப்பவர்கள் ஏன் இப்படி மெலிந்திருக்க..சரியாக சாப்பிடுறது இல்லையா என்று அறிவுரைகளாலும், கேள்விகளாலும் உங்களை குடைந்து எடுத்துவிடுவார்கள். மெலிந்த உடலைத் தேற்றுவதென்பது அவ்வளவு எளிதும் அல்ல. கடினமும் அல்ல.
நீங்கள் எந்த வயதில் இருக்கிறீர்களோ அதற்கேற்றாற்போல், உயரத்திலும் இருக்க வேண்டும் உடல் எடையும் இருக்க வேண்டும். உங்களது உடலைப் பற்றி புரிதல் உங்களுக்கு அவசியம் இருந்தாக வேண்டும். எனக்குள்ள என்ன நடக்கின்றது என்கிறது புரிதல் இருக்க வேண்டும்.
உடல் எடையை தேற்றுவது என்பது குழந்தைப் பருவம் முதலாக கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு, கடைபிடிக்க தவறும்பட்சத்தில், ப்ரைமரி காம்ப்ளக்ஸ் காரணமாக இருக்கக் கூடும். இந்தியாவில் குழந்தை எடை குறைவுக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது பிரைமரி காம்ப்ளக்ஸ். அதைக் கணிப்பதில் மருத்துவர்களிடையே கூட வேறுபட்ட கருத்து நிலவுவது உண்டு. சிறு குழந்தையில் இதைச்சரியாக கவனிக்கத் தவறும் போது, பின்னாளில் எப்போதும் மெலிந்த தேகம் நிலை பெற்றுவிட வாய்ப்புண்டு.
கஞ்சி அன்னத்திற்கு காயம் பருத்திடும் என்கிறது சித்த மருத்துவம். சிறு குழந்தையாக இருப்பின் காலை வேளையில் சத்து மாவு கஞ்சியும், இளைஞர்கள் என்றால் அரிசி தேங்காய்ப்பால் கஞ்சியும் சாப்பிடுவது உடல் எடை ஏற ஒத்தாசை செய்யும்.
சாப்பிட்ட உடனே மலம் கழிக்கத்துாண்டும் கழிச்சல் நோயால் அவதிப்படுபவர்கள், எவ்வளவுதான் சாப்பிட்டாலும், உடல் எடை மெலிந்தே காணப்படுவார்கள். உணவு உண்ட பின், எங்காவது வெளியில் கிளம்ப ஆயத்தம் ஆகும்போது, சூடான காரமான உணவை சாப்பிட்டவுடன் மலம் கழிக்கத்துாண்டும் இந்த கழிச்சல் நோயில் மெலிந்த தேகம் நிரந்தரமாகி விடும். இந்த நோய் இருப்பின், சரியான மருத்துவ சிகிச்சையுடன் சுண்டை வற்றல், கறிவேப்பிலை , மாதுளை ஆகிய உணவுகளை தினசரி சேர்ப்பது நோயை நீக்கி உடல் எடையை கண்டிப்பாக அதிகரிக்கும்.
பழங்களில் எடையை உயர்த்த அதிகம் பயன்தருவது வாழை. அதிலும் நேந்திரம்பழத்துண்டுகளை மாலை வேளையில் நொறுக்குத்தீனியாக தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். பசு வெண்ணெய், பசும்பால் உடல் எடை கூட்ட உதவும்.
இளைத்தவனுக்கு எள்ளு என்பது முதுமொழி மட்டுமல்ல. மருத்துவ மொழியும்கூட. இளைத்த உடலினர் இட்லி தோசைக்கு எள்ளுப்பொடி, எள்ளுச்சட்னி, நொறுக்குத்தீனியாக எள்ளுருண்டை என எள்ளை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.
குழந்தைகளுக்கு உளுந்து சேர்த்த உணவுகள் மிக நல்லது. இளம் பெண்களில் மிகவும் மெலிந்த உடலோடு இருக்கும். மிகவும் மெலிந்த உடலோடு இருக்கும் பெண்கள் சற்று வாளிப்பான உடல்வாகு பெற எள்ளும் உளுந்தும் மிகப்பயன் தரும். வயிற்றில் அல்சர் எனும் வயிற்றுப்புண், குடல்புண், இருந்தாலும் உடல் எடை ஏறுவதில்லை. அதுபோன்ற, நோயினால் பாதிக்கப்பட்டவர்கள். நீராகாரம், மோர், மாலையில் வாழைப்பழம் போன்றவற்றை வழக்கமாக உட்கொண்டு வரவும்.