திருமணத்திற்கு முன் ஒல்லிக்குச்சியாக இருந்த பெண் அதற்கு பிறகு குண்டாகிவிடுவது ஏன்? ஒல்லிக்குச்சி போல் இருந்த பையன் நடுவயதில் தொந்தியும், தொப்பையுமாக இருப்பது ஏன்?
முக்கிய காரணம் – உணவு. உண்ணும் உணவின் தரம், அளவு, உண்ணும் சமயம் இவற்றைப் பொருத்தே உடல் ஆரோக்கியம் அமையும். நாம் உண்ணும் உணவு சமச்சீர் உணவாக இருக்க வேண்டும். உங்கள் உடல் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். சரியான உணவு இல்லாவிட்டால் தரக்குறைவான உணவு திசுக்களை பலவீனப்படுத்தும். ஊட்டச்சத்து வேறு வழியின்றி உடலின் பல பாகங்களில் சேமித்து வைக்கப்படும். இந்த சேமிப்பால் உடலின் பல பாகங்கள் உப்பி, பருமன் கூடுகிறது.
உணவு உண்ணும் போது குளிர்வித்த மென்பானங்களை குடிக்கக் கூடாது. உணவு ஜீரணமானபின் இவற்றை குடிக்கலாம். இளநீர், பழரசங்கள் நிறைய சக்தியை தருபவை. கோடை காலத்தில் இவற்றை சேர்த்துக் கொள்ளவும். சூப்புகள், அதிக கொழுப்புள்ள உணவுகள் ஜீரணமாக உதவுகின்றன. உணவு உண்ணும் போது ஒவ்வொரு நான்கு (அ) ஐந்து கவளங்களுக்கு பின் தண்ணீர் சிறிது சிறிதாக குடித்து வரவும்.
உணவின் அளவு
நாம் உண்ணும் உணவு வயிற்றை மூன்றில் இரண்டு பாகத்தை நிரப்பினால் போதும். இது தான் சரியான அளவு. அடிக்கடி உண்பதை தவிர்க்கவும். இதனால் வயிறு அதிக வேலைக்கு உட்படும். ஜீரணமண்டல உறுப்புகள் பலவீனமடையும்.
உண்ணும் சமயம்
ஆயுர்வேதத்தின் படி சூரிய ஒளியும், இதமான வெப்பம், ஜீரண சாறுகளின் சுரப்பை அதிகரிக்கின்றன. அதனால் காலை உணவு மற்றும் இரவு உணவு ‘லேசாக’வும், மதிய உணவு “கனமாகவும்” இருக்க வேண்டும்.
சுருக்கமாக சொன்னால், நல்ல உணவை சரியான அளவில் சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும்.