குண்டான குழந்தைகள் ஆரோக்கியமா?

Spread the love

குழந்தைகள் குண்டாக இருப்பதையே அழகு என்று பெற்றோர்கள் உட்பட பலர் நினைக்கிறார்கள். குழந்தைகள் மட்டுமல்ல, பெண்கள் கூட சிறிது “பூசினாற்” போல் இருப்பதையே இந்திய ஆடவர்கள் – குறிப்பாக தென்னிந்திய ஆடவர்கள் – விரும்புகின்றனர். குண்டான குழந்தைகள் அழகாக தோன்றலாம். ஆனால் அவர்கள் ஆரோக்கியமானவர்கள் என்று சொல்ல முடியாது. உலக சுகாதார குழுமம் (WHO), 2015 ல், குண்டான குழந்தைகளுக்கு ஏற்படும் இதயநோய் தான் அதிக அளவு இறப்புகளுக்கு காரணமாகும் என்கிறது.

குண்டான குழந்தைகள் குண்டான பெரியவர்களாகிறார்கள். 6 வயது வரை குண்டான குழந்தைகளை ரசிக்கலாம். அதன் பிறகு அவர்கள் கேலிக்கு ஆளாகின்றனர். மற்ற குழந்தைகளிடமிருந்து ஒதுக்கப்படலாம். இதனால் குண்டு குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படும். இது ஒரு தனி பாதிப்பு. உடல் ரீதியாக, அதீத பருமன் எந்த வயதிலிருந்தாலும் சரி, இதயத்தை பாதிக்கும்.

குழந்தைகள் குண்டாகும் காரணங்கள் பல. பாரம்பரியம், ஹைபோ தைராடிசம், பெற்றோர்களின் பழக்க வழக்கங்கள், குழந்தைகளை வளர்க்கும் முறை, தவறான உணவு பழக்கங்கள், மனநிலை மற்றும் உணர்வு பாதிப்புகள், உழைப்பு (அ) விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவை இல்லாத வாழ்க்கை முறை, டி.வி. பார்க்கும் பழக்கம் – என்று பல காரணங்களை காட்டலாம். முக்கியமாக குழந்தைகளுக்கு “செல்லம்” கொடுத்து, கேட்பதை வாங்கித்தருவது, சாக்லேட், பிஸ்கட் போன்றவற்றை அளவுக்கு மீறி கொடுப்பது இவைகளெல்லாம் தவிர்க்கக் கூடிய காரணங்கள். நீங்களே கவனியுங்கள் – உங்கள் வீட்டில் குழந்தை இருந்தால் அதற்கு கொடுக்கப்படும் நெய்யின் அளவு எவ்வளவு என்று!

சமீபத்தில் குண்டான குழந்தைகளைப் பற்றிய ஆய்வு ஒன்று அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் குண்டான குழந்தைகள் ஆரோக்கியமானவையல்ல என்பதை உறுதி செய்கின்றன. அதீத எடை, கொழுப்பின் பாதிப்புகள் சிறு வயதிலேயே தொடங்கி விடும். குண்டான குழந்தை இளைஞனாகும் போது இதய நோயால் பாதிக்கப்படும் சாத்திய கூறுகள் அதிகம். வளர்சிதை மாற்றங்களில் (Metabolism) கோளாறுகள் ஏற்படலாம். நீரிழிவு (டைப் – 2), மூளைத்தாக்கு, உயர் ரத்த அழுத்தம் இவைகளும் உண்டாகும். எனவே தீவிரமான, அதிரடியாக முயற்சிகளை மேற்கொண்டு குழந்தைகள் குண்டாவதை குறைக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

வயது, உயரத்திற்கு ஏற்ப இருக்க வேண்டிய அளவு எடையை விட அதிகமான உடல் எடை, அதிகமான இடுப்பு சுற்றளவு, ரத்தத்தில் நல்ல கொலஸ்ட்ரால் (HDL) குறைவாக இருப்பது, ரத்தத்தில் அதிக ட்ரை -கிளிசரைடுகள் (கொழுப்பு) மற்றும் க்ளூகோஸ், உயர் ரத்த அழுத்தம் – முதலிய அறிகுறிகளெல்லாம் வளர்சிதை (Metabolism) கோளாறுகளை சுட்டி காட்டும்.

சரி, குழந்தைகளின் எடையை குறைக்க உணவுக்கட்டுப்பாடு தேவை. ஆனால் குழந்தைகளுக்கு உணவு பத்தியம் செய்யலாமா? அவர்களின் வளர்ச்சி நின்று விடுமே? என்று நீங்கள் கேட்கலாம். நியாயமான கேள்வி தான். இதற்கு நீங்கள் சிறிது சிரமப்பட வேண்டும். குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவின் கலோரிகளை குறைக்க வேண்டும். ஆனால் ஊட்டச்சத்துக்கள் குறையக் கூடாது. இதற்கு நீங்கள் ஒரு டயடீசியனை (Dietician) அணுக வேண்டும். “மாற்று உணவு”களால் இந்தப் பிரச்சனையை சமாளிக்கலாம். நீங்களாகவே அதிரடியாக குழந்தையின் உணவை குறைக்க வேண்டும்.

சரியான எடை ஏற்றாத உணவு மட்டுமல்ல, கூடலே உடற்பயிற்சியும் தேவை. சுறுசுறுப்பாக ஒடியாடுதல், உடலுழைப்பு முதலிய இயக்கங்களுக்கு பெற்றோர்கள் குண்டான குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்.

சில ‘டிப்ஸ்’

1. மேற்சொன்னபடி, டயடீசியன் உதவியுடன் குண்டான குழந்தைக்கு கொடுக்க வேண்டிய ‘டயட்’டை திட்டமிட்டுக் கொள்ளுங்கள். குழந்தைகளையும் சேர்த்துக் கொண்டு குடும்ப நபர்கள் அனைவரும் சேர்ந்து சாப்பிடும் (ஒரு வேளையாவது) பழக்கத்தை மேற்கொள்ளுங்கள்.

2.       உணவில் பழங்களும், காய்கறிகளும் அதிகமாக இருக்கட்டும்.

3.       “Junk Food” எனும் உணவு வகைகளை தவிர்க்கவும்.

4.       மிளகு பொடி சேர்த்த மோரை கொடுக்கலாம்.

5.       உணவுக்கு பிறகு உலர்ந்த பழங்கள், குறிப்பாக நெல்லிக்காய் போன்றவைகளை எடுத்துக் கொள்வது நல்லது.

6.       ஆயுர்வேதத்தின் “உத்வர்த்தனா” (உலர்ந்த மூலிகை பொடிகளால் உடல் மசாஜ் செய்வது) சிகிச்சை உடல் எடையை குறைக்க உதவும்.


Spread the love