வெள்ளை பூசணி குடும்பத்தைச் சேர்ந்தது தர்பூசணி. இதனை ஆங்கிலத்தில் வாட்டர்மெலன் என அழைக்கின்றோம். இது தரையில் படரக்கூடிய கொடியாகும். இதில் பெரிய கால்பந்து அளவு வெள்ளையும் பச்சையுமான கோடுகளைக் கொண்ட காய்களை உடையது. காய்களின் உட்புறம் சிவப்பு நிறமானவை. இவை பார்ப்பதற்கு கண்களை கவர்ந்திடும். இதனை தமிழில் நீர் முலாம்கோமுட்டி, பிச்சம்பழம் எனவும் அழைக்கின்றோம்.
சில ஆண்டுகள் வரை ஆங்கில ஏ,H,சி,டி புத்தங்களில் மட்டுமே காணப்பட்ட இந்த தர்பூசணி தற்பொழுது தெருவெல்லாம் கொட்டிக் கிடக்கின்றது. இது ஏதோ வெளிநாட்டுப் பழம் என்று இருந்த கிராமப்புற மக்களும் கூட தற்பொழுது தர்பூசணியை உண்ண ஆரம்பித்து விட்டனர்.
வெள்ளரி குடும்பத்தை சேர்ந்த இதர பழங்கள், காய்களைப் போலவே, தர்பூசணியிலும் அதிகப்படியான வைட்டமின் சத்து, புரதம், நார்ச்சத்து, தாதுப் பொருட்கள் என பல நல்ல சமாச்சாரங்கள் இருக்கின்றன.
அதிகப்படியான நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் கொண்டது. நாவறட்சியை போக்கக் கூடியது. தாகத்தை தணிக்கக் கூடியது. புத்துணர்ச்சியை தரக்கூடியது. மயக்கத்தை போக்கக் கூடியது.
இதன் சாறுடன் சீரகமும் நாட்டுச் சர்க்கரையும் கலந்து பருகிட நீர்க்கடுப்பு விலகும். நீர்த்தாரை எரிச்சல், விந்து நீர்த்துப் போதல் போன்ற பிரச்சனைகளுக்கு குணம் தரும். மிகக் குறைந்த அளவே சர்க்கரை அளவு கொண்டதால் சர்க்கரை நோயாளிகளும் கூட உண்ணக்கூடிய பழம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு சர்க்கரை கலவாத தர்பூசணி சாறு ஓர் வரப்பிரசாதம்.
100 கிராம் தர்ப்பூசணியில் அடங்கியுள்ள சத்துக்கள்
நீர்ச்சத்து & -95.8%, புரதம் & -0.2%, மாவுச்சத்து & -3.5%, மணிச்சத்து- & 0.3%, நார்ச்சத்து- & 0.2%, கொழுப்புச்சத்து & -0.2%, கால்சியம் & -10 மி.கி., பாஸ்பரஸ் & -14 மி.கி., கலோரி அளவு & -16 கலோரி.
தர்பூசணி உண்பதால் எந்த வித பிரச்சனையும் வராது. நன்மைகள் தான் கிட்டும். ஆனால், தெரு ஓரங்களில் துண்டுகளாக விற்கப்படும் தர்பூசணியை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அதிக தூசி படிந்திருக்கும். ஈ மொய்த்துக் கொண்டிருக்கும். தர்பூசணியில் பிரச்சனையில்லை. ஈயும் தூசியும் தான் தொல்லை. எனவே, முழுப் பழங்களாக வாங்கி வெட்டி உண்பது அல்லது அப்பொழுது வெட்டிய பழங்களை உண்பது நன்று.
வாட்டர்மெலன் ஃபிஷ்
தேவையான பொருட்கள்
வாட்டர்மெலன் நறுக்கியது -4 கப்
எலுமிச்சம்பழம் – 1
சீனி – தேவையான அளவு
க்ளப் சோடா – 1/2 லிட்டர்
ஐஸ் க்யூப்ஸ் – சிறிது
செய்முறை
வாட்டர் மெலனின் விதைகளை எடுத்து விட்டு, சீனியோடு சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதனுடன் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சேர்க்கவும். ஒரு கண்ணாடி ஜக்கில் இந்த ஜுஸை ஊற்றி க்ளப் சோடாவையும் ஊற்றி ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து பரிமாறவும்.
தர்பூசணி ஜுஸ்
தேவையான பொருட்கள்
தர்பூசணி – 1 கப்
ரோஸ் சிரப் – 2 டீஸ்பூன்
சீனி – தேவையான அளவு
ஐஸ் க்யூப்ஸ் – சிறிது
செய்முறை
தர்பூசணியின் விதைகளை எடுத்து விடவும். ஒரு மிக்ஸியில் தர்பூசணி, ரோஸ் சிரப், சீனி, ஐஸ் க்யூப்ஸ் போட்டு ஒரு அடி அடித்து கண்ணாடி டம்ளரில் ஊற்றிப் பரிமாறவும்.
தர்பூசணி ஸ்குவாஷ்
தேவையான பொருட்கள்
தர்பூசணியின் சிவப்பு பகுதி -500 கிராம்
சர்க்கரை – 500 கிராம்
எலுமிச்சம் சாறு – 2 டீஸ்பூன்
சிவப்புக் கலர் – 1 சிட்டிகை
தண்ணீர் – 1/2 லிட்டர்
செய்முறை
தர்பூசணியை மிக்ஸியில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஒரு வடிகட்டியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனுடன் சிவப்புக் கலரை சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும். அரை லிட்டர் தண்ணீரில் சர்க்கரையைப் போட்டு கொதிக்க வைத்து, எலுமிச்சம் சாறை சேர்த்து ஒரு கம்பிப் பதம் வரும் வரை வைக்கவும். பின்னர் இறக்கி ஆறியதும் வடிகட்டி தர்பூசணி ஜுஸுடன் கலந்து, ஸ்டெரிலைஸ் செய்த பாட்டிலில் ஊற்றி மூடவும். இந்த ஸ்குவாஷை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது 1:3 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து பருகவும்.
வாட்டர்மெலன் சர்பத்
தேவையான பொருடகள்
வாட்டர்மெலன் – பாதி பழம்
சீனி – தேவையான அளவு
தண்ணீர் -தேவையான அளவு
ஐஸ் க்யூப்ஸ் -தேவையான அளவு
செய்முறை
தர்பூசின் தோலை சீவி, சிவப்பு கலர் பகுதியின் விதைகளை நீக்கி எடுத்துக் கொள்ளவும். மிக்சியில் வாட்டர்மெலன் துண்டுகள், சீனி, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து ஒரு அடி அடித்து பருகவும்.
சர்பத்தின் மற்றொரு முறை
தேவையான பொருட்கள்
ஸ்ட்ராபெர்ரி -1கப்
தர்பூசணி – 3 கப்
இஞ்சி விழுது -1/2 டீஸ்பூன்
சீனி -3 டே.ஸ்பூன்
செய்முறை
தர்பூசணியின் விதைகளை எடுத்து விடவும். ஸ்ட்ராபெரியின் காம்புகளை எடுத்து விட்டு, தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளவும். ஒரு ப்ளண்டரில் ஸ்ட்ராபெர்ரி, தர்பூசணி, இஞ்சி, சீனி சேர்த்து அரைத்து ஒரு வடிகட்டியில் வடிகட்டி ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து பரிமாறவும்.
தர்பூசணி தக்காளி சாலட்
தேவையான பொருட்கள்
தர்பூசணி சிறியது – 1
தக்காளி – 4
புதினா காம்புடன் – 2
ட்ரஸ்ஸிங்
ஆலிவ் ஆயில் – 2 டே.ஸ்பூன்
வினிகர் – 2 டீஸ்பூன்
புதினா இலை – 1 டே.ஸ்பூன்
மிளகுத்தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
சீனி – 1 டீஸ்பூன்
செய்முறை
ட்ரஸ்ஸிங்கில் கொடுத்துள்ள புதினா இலைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் அதனுடன் ட்ரஸ்ஸிங்கில் கொடுத்துள்ள மற்ற பொருட்களை சேர்த்து ஒரு பாட்டிலில் போட்டு நன்கு குலுக்கி வைக்கவும். தர்பூசணியின் தோலை நீக்கி, விதைகளை எடுத்து விட்டு அதன் சிவப்பு பகுதியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை இரண்டாக நறுக்கி அதன் உள்ளிருக்கும் விதைகளை எடுத்து விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின் ஒரு சாலட் பவுலில் தர்பூசணி, தக்காளி, கலந்து வைத்துள்ள ட்ரஸ்ஸிங் சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிட்ஜில் குளிர வைத்து பரிமாறுங்கள். அப்போது, காம்புடன் உள்ள புதினா இலைகளால் அலங்கரித்து பரிமாறலாம்.
வாட்டர்மெலன் சாலட்
தேவையான பொருட்கள்
தர்பூசணி – 1 கப்
கிர்ணிப்பழம் – 1 கப்
தேன் – 2 டீஸ்பூன்
வெல்லம் – தேவையான அளவு
எலுமிச்சம் ஜுஸ் – 2 டீஸ்பூன்
செய்முறை
தர்பூசணி மற்றும் கிர்ணிப் பழத்தின் தோலை சீவி விதைகளை எடுத்து விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெல்லத்தை பொடி செய்து கொள்ளவும். ஒரு சாலட் பவுலில் பழங்களை ஒன்றாகச் சேர்த்து, அதனுடன் தேன், வெல்லம், எலுமிச்சம் ஜுஸ் சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிட்ஜில் குளிர வைத்து பரிமாறவும். தேவையென்றால் பரிமாறும் போது மிளகுத்தூளை தூவிக் கொள்ளவும்.