கோடைக்கேற்ற தர்பூசணி

Spread the love

வெள்ளை பூசணி குடும்பமான CuCur Bite Au குடும்பத்தைச் சேர்ந்தது தர்பூசணி. இதனை ஆங்கிலத்தில் “Water Melon -வாட்டர்மெலான்” எனவும் தாவிரவியலில் Citrultos vulgairs எனவும் அழைக்கின்றோம். இது தரையில் படரக்கூடிய கொடியாகும். இதில் பெரிய கால்பந்து அளவு வெள்ளையும் பச்சையுமான கோடுகளைக் கொண்ட காய்களை உடையது. காய்கள் உட்புறம் சிவப்பு நிறமானவை பார்ப்பதற்கு கண்களை கவர்ந்திடும் இதனை தமிழில் நீர் முலாம்கோமுட்டி, பிச்சம்பழம் எனவும் அழைக்கின்றோம்.

சில ஆண்டுகள் வரை ஆங்கில ஏ.பி.சி.டி புத்தங்களில் மட்டுமே காணப்பட்ட இந்த தர்பூசணி தற்பொழுது தெருவெல்லாம் கொட்டிக் கிடக்கின்றது. இது ஏதோ வெளிநாட்டுப் பழம் என்று இருந்த கிராமப்புற மக்களும் கூட தற்பொழுது இத் தர்பூசணியை உண்ண ஆரம்பித்து விட்டனர்.

வெள்ளரி குடும்பத்தை சேர்ந்த இதர பழங்கள் காய்களைப் போலவே தர்ப்பூசணியிலும் அதிகப் படியான வைட்டமின் சத்து, புரதம், நார்ச்சத்து, தாதுப் பொருட்கள் என பல நல்ல சமாச்சாரங்கள் இருக்கின்றன.

அதிகப்படியான நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் கொண்டது நாவறட்சியை போக்கக் கூடியது. தாகத்தை தணிக்கக் கூடியது. புத்துணர்ச்சியை தரக்கூடியது. மயக்கத்தை போக்கக் கூடியது.

இதன் சாறுடன் சீரகமும் நாட்டுச் சர்க்கரையும் கலந்து பருகிட நீர்க்கடுப்பு விலகும் நீர்த்தாரை எரிச்சல், விந்து நீர்த்துப் போதல் போன்ற பிரச்சனைகளுக்கு குணம் தரும். மிகக் குறைந்த அளவே சர்க்கரை அளவு கொண்டதால் சர்க்கரை நோயாளிகளும் கூட உண்ணக்கூடிய பழம் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுககு தர்பூசணி சாறு (சர்க்கரை கலவாதது) ஒர் வரப்பிரசாதம்.

100 கிராம் தர்ப்பூசணியில் அடங்கியுள்ள சத்துக்கள்

நீர்ச்சத்து-95.8%, புரதம்-0.2%, மாவுச்சத்து-3.5%, மணிச்சத்து-0.3%, நார்ச்சத்து-0.2%, கொழுப்புச்சத்து-0.2%, கால்சியம்-10மி.கி., பாஸ்பரஸ்-14மி.கி., கலோரி அளவு-16 கலோரி.

தர்பூசணி உண்பதால் எந்த வித பிரச்சனையும் வராது. நன்மைகள் தான் கிட்டும். ஆனால், தெரு ஓரங்களில் துண்டுகளாக விற்கப்படும் தர்பூசணியை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அதிக தூசி படிந்திருக்கும்.

ஈ மொய்த்துக் கொண்டிருக்கும் தர்பூசணியில் பிரச்சனையில்லை. ஈயும் தூசியும் தான் தொல்லை. எனவே, முழுப் பழங்களாக வாங்கி வெட்டி உண்பது அல்லது அப்பொழுது வெட்டிய பழங்களை உண்பது நன்று.

வாட்டர் மெலன் ஃபிஷ்

தேவையான பொருட்கள்

வாட்டர் மெலன் நறுக்கியது  –4கப்

எலுமிச்சம்பழம்              –1

சீனி                         -தேவையான அளவு

க்ளப் சோடா                 –1/2லிட்டர்

ஐஸ் க்யூப்ஸ்                 -சிறிது

செய்முறை

வாட்டர் மெலனின் விதைகளை எடுத்து விட்டு, சீனியோடு சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதனுடன் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சேர்க்கவும். ஒரு கண்ணாடி ஜக்கில் இந்த ஜுஸை ஊற்றி க்ளப் சோடாவையும் ஊற்றி ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து பரிமாறவும்.

தர்பூசணி ஜுஸ்

தேவையான பொருட்கள்

தர்பூசணி       –1கப்

ரோஸ் சிரப்     –2டீஸ்பூன்

சீனி             -தேவையான அளவு

ஐஸ் க்யூப்ஸ்    -சிறிது

செய்முறை

தர்பூசணியின் விதைகளை எடுத்து விடவும். ஒரு மிக்ஸியில் தர்பூசணி, ரோஸ் சிரப், சீனி, ஐஸ் க்யூப்ஸ் போட்டு ஒரு அடி அடித்து கண்ணாடி டம்ளரில் ஊற்றிப் பரிமாறவும்.

தர்பூசணி ஸ்குவாஷ்

தேவையான பொருட்கள்

தர்பூசணியின் சிவப்பு பகுதி-500கிராம்

சர்க்கரை        –500கிராம்

எலுமிச்சம் சாறு –2டீஸ்பூன்

சிவப்புக் கலர்    –1சிட்டிகை

தண்ணீர்         –1/2லிட்டர்

செய்முறை

தர்பூசணியை மிக்ஸியில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஒரு வடிகட்டியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனுடன் சிவப்புக் கலரை சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும். அரை லிட்டர் தண்ணீரில் சர்க்கரையைப் போட்டு கொதிக்க வைத்து, எலுமிச்சம் ஜுஸையும் சேர்த்து ஒரு கம்பிப் பதம் வரும் வரை வைக்கவும். பின்னர் இறக்கி ஆறியதும் வடிகட்டி தர்பூசணி ஜுஸுடன் கலந்து ஸ்டெரிலைஸ் செய்த பாட்டிலில் ஊற்றி மூடவும். இந்த ஸ்குவாஷை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது 1:3 என்ற விகிதத்தில் தண்ணீர் கலந்து ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து பருகவும்.

வாட்டர் மெலன் சர்பத்

தேவையான பொருட்கள்

வாட்டர் மெலன் – 1/2

சீனி             -தேவையான அளவு

தண்ணீர்         -தேவையான அளவு

ஐஸ் க்யூப்ஸ்    -தேவையான அளவு

செய்முறை

தர்பூசின் தோலை சீவி சிவப்பு கலர் பகுதியை மட்டும் விதைகளை எடுத்து விட்டு எடுத்துக் கொள்ளவும். ஒரு ப்ளண்டரில் வாட்டர் மெலன் துண்டுகள், சீனி, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து ஒரு அடி அடித்து பருகவும்.

தர்பூசணி சர்பத்

தேவையான பொருட்கள்

ஸ்ட்ரா பெர்ரி   –1கப்

தர்பூசணி       –3கப்

இஞ்சி விழுது  –1/2டீஸ்பூன்

சீனி            –3டே.ஸ்பூன்

செய்முறை

தர்பூசணியின் விதைகளை எடுத்து விடவும். ஸ்ட்ராபெரியின் காம்புகளை எடுத்து விட்டு, தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளவும். ஒரு ப்ளண்டரில் ஸ்ட்ரா பெர்ரி, தர்பூசணி, இஞ்சி, சீனி சேர்த்து அரைத்து ஒரு வடிகட்டியில் வடிகட்டி ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து பரிமாறவும்.

தர்பூசணி தக்காளி சாலட்

தேவையான பொருட்கள்

தர்பூசணி சிறியது –1

தக்காளி          –4

புதினா காம்புடன் –2

ட்ரஸ்ஸிங்

ஆலிவ் ஆயில் –2டே.ஸ்பூன்

வினிகர்        –2டீஸ்பூன்

புதினா இலை  –1டே.ஸ்பூன்

மிளகுத்தூள்    -தேவையான அளவு

உப்பு           -தேவையான அளவு

சீனி            –1டீஸ்பூன்

செய்முறை

ட்ரஸ்ஸிங்கில் கொடுத்துள்ள புதினா இலைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின் அதனுடன் ட்ரஸ்ஸிங்கில் கொடுத்துள்ள மற்ற பொருட்களை சேர்த்து ஒரு பாட்டிலில் போட்டு நன்கு குலுக்கி வைக்கவும். தர்பூசணியின் தோலை நீக்கி, விதைகளை எடுத்து விட்டு அதன் சிவப்பு பகுதியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை இரண்டாக நறுக்கி அதன் உள்ளிருக்கும் விதைகளை எடுத்து விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின் ஒரு சாலட் பவுலில் தர்பூசணி, தக்காளி, கலந்து வைத்துள்ள ட்ரஸ்ஸிங் சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைத்து பரிமாறும் சமயம் காம்புடன் உள்ள புதினா இலைகளால் அலங்கரித்து பரிமாறவும்.

மெலன் சாலட்

தேவையான பொருட்கள்

தர்பூசணி (watermelon)   –1கப்

கிர்ணிப்பழம் (muskmelon)-1கப்

தேன்                 –2டீஸ்பூன்

வெல்லம்             -தேவையான அளவு

எலுமிச்சம் ஜுஸ்      –2டீஸ்பூன்

செய்முறை

தர்பூசணியின் தோலை சீவி விதைகளை எடுத்து விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கிர்ணிப் பழத்தின் தோலை சீவி விதைகளை எடுத்து விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெல்லத்தை பொடி செய்து கொள்ளவும். ஒரு சாலட் பவுலில் பழங்களை ஒன்றாகச் சேர்த்து, அதனுடன் தேன், வெல்லம், எலுமிச்சம் ஜுஸ் சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைத்து பரிமாறவும். தேவையென்றால் பரிமாறும் போது மிளகுத்தூளை தூவிக் கொள்ளவும்.


Spread the love
error: Content is protected !!