தாகத்திற்குத் தண்ணீர்

Spread the love

பண்டைய நாட்களில் தாகம் என்று வருபவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பதைப் பெரும் புண்ணியம் என்று கருதினார்கள். நாட்டுப்புறங்களில், நெடுந்தொலைவு செல்லும் நடைப் பயணிகளுக்கு உதவும் வண்ணம் சாலைகளில் தண்ணீர் பந்தல்கள் வைத்தார்கள். இன்று ஊரெங்கும் தேடினாலும் ஒருவாய் தண்ணீர் கொடுப்பவரைக் காணோம். காரணம் தண்ணீர் இன்று விலையுயர்ந்த ஒரு வியாபாரப் பொருளாகி விட்டது.

மனிதனின் உடலில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர்தான். குறைந்தது நாளொன்றுக்கு இரண்டு லிட்டர் தண்ணீராவது ஒரு மனிதனுக்குத் தேவை. 5 கிலோ எடையுள்ள குழந்தைக்கு 750 IL தண்ணீர் தேவை. வாழ்வின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான தண்ணீர் இன்று கிடைப்பதற்கு அரிதான பொருளாகிவிட்டது. ஏழை, எளிய மக்களும் இன்று சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கித் தான் குடிக்க வேண்டியிருக்கிறது.

இன்றைக்கு வெளியே எங்கு சென்றாலும் ஆதிவாசிப் பெண்கள் குழந்தையைத் தோளில் தூளி கட்டிச் சுமந்து செல்வதைப் போல் தண்ணீர் பாட்டில் ஒன்றைச் சுமந்து கொண்டு அலைய வேண்டி இருக்கிறது. என்ன செய்வது? இது காலத்தின் கட்டாயம். காரணம் வெளியில் கிடைக்கும் எந்த தண்ணீரையும் நல்ல தண்ணீர் என்று நம்பி வாங்கிக் குடிக்க முடிவதில்லை. அதேநேரத்தில் பாலைவிட அதிக விலைக்கு விற்கப்படும் இந்தப் பாட்டில் தண்ணீர் சுத்தமானதுதானா என்பதும் நமக்குத் தெரிவதில்லை.

தண்ணீர் பாட்டில்களின் லேபிள்களில்  மற்றும் சான்றிதழ்களின் எண்கள் அச்சிடப்பட்டிருந்தாலும் அவை உண்மையானவை தானா என்று கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். பல பாட்டில்களில் தயாரித்த தேதி, காலாவதியாகும்தேதி, பாட்ஜ் எண் போன்ற எந்த விவரமும் இருப்பதில்லை. நகராட்சியினர் வழங்கும் நீரை நல்ல முறையில் சுத்திகரித்து வழங்குவார்களானால் அந்தக் குழாய் நீர் பாட்டிலில் கிடைக்கும் நீரைவிடப் பாதுகாப்பானதாகும்.

குளோரினால் சுத்தம் செய்யப்பட்டு வழங்கப்படும் நீரில் இரண்டு மூன்று நாட்களுக்குக் கிருமித் தொற்று ஏற்படாது. குழாயில் பிடித்த தண்ணீரை 20 நிமிடம் கொதிக்க வைத்து நன்கு ஆறிய பிறகு பயன்படுத்துவது மிக எளியதும் சிறந்ததுமான வழி. பாதுகாக்கப்பட்ட நீர் நிலைகளில் உள்ள தண்ணீரைப் பல வழிகளில் தூய்மைப்படுத்தி நகராட்சிகள் மக்களுக்கு வழங்கிய காலம் ஒன்று இருந்தது. நீர் நிலைகளில் இருந்து எடுத்த தண்ணீரை மணல்வடிகட்டி () கரி வடிகட்டி, படிகாரம் சேர்த்து நீரைத் தெளிய வைத்தல், குளோரின் வாயு மூலம் சுத்திகரித்தல் என்று குழாய்த் தண்ணீரில் பல வகையாகப் பாக்டீரியா, வைரஸ் தொற்று நோய் கிருமிகள் நீக்கப்படுவது உண்டு. இப்போது அதெல்லாம் செய்யப்படுகிறதா என்பது தெரியவில்லை.

வீடுகளில் ஃபில்டரின் மூலம் நீரை வடிகட்டினாலும் அது பாக்டீரியாவை வடிகட்டுமே தவிர வைரஸ்கிருமிகளை வடிகட்டாது. எனவே, அவ்வாறு பில்டர் செய்யப்பட்ட தண்ணீரையும் நன்கு கொதிக்க வைத்து குடிப்பது நல்லது.

உலகின் முன்னணி நாடுகளில் மினரல் வாட்டர் என்று கூறப்படுகின்ற தண்ணீர், 5 வகைகளில் சுத்தம் செய்யப்பட்ட பின்னர் குறிப்பிட்ட அளவில் தாது உப்புகளை கலந்து பயன்பாட்டுக்கு அனுப்பப்படுகின்றன. அதாவது தண்ணீரில் உள்ள திடப் பொருள்களை அகற்ற மணல் வடிகட்டி, தேவையில்லாத ரசாயனப் பொருள்கள், சிறுமண் துகள்கள் ஆகியவற்றை நீக்குவதற்குக் கரி வடிகட்டி (Carbon filter) நீரில் கரைந்துள்ள உப்புகள் மற்றும் கடினத் தன்மையை நீக்க (Reverse osmosis)ரிவர்ஸ் ஆஸ்மோஸ்சிஸ் என்னும் வடிகட்டுதல் முறை மற்றும் கிருமிகளைக் கொல்ல அல்ட்ராவயலட் ஒளி செலுத்துதல் மற்றும் ஓஸோன் வாயு சுத்திகரிப்பு ஆகியவை செய்யப்படுகிறது. இதன் பின்னர் (W.H.O.)  கூறுகின்ற அளவில் தாது உப்புகளை இதில் கரையச் செய்து குடிப்பதற்குத் தகுந்த நீர் ஆக்கி அனுப்பப்படுகிறது.

உண்மையில் கூறப்போனால் நமது நாட்டில் இம்முறைகள் அனைத்தும் பின்பற்றப்படுகின்றனவா என்பது சந்தேகத்துக்கு உரியது. இதைத் தவிர்ப்பதற்கும் உணவுக் கட்டுப்பாடு அதிகாரிகளிடமிருந்து தப்பிக்கவும் நமது குடிநீர்த் தயாரிப்பாளர்கள் Packaged Drinking Water (புட்டியில் அடைக்கப்பட்ட குடிநீரே) என்று லேபிள் ஓட்டுகின்றனர். தயாரித்து பாட்டிலில் அடைக்கப்பட்ட இந்நீரில் கிருமித் தொற்றை அழிக்க வல்ல கிருமிநாசினி குளோரின் போன்றவை இல்லாததால் பாட்டிலில் உண்டாகும் சிறு நுண்துளை, மூடிக்கசிவு போன்றவற்றால் கிருமிகள் உள்ளே நுழைந்தாலும் கேடு உண்டாகும். இவற்றிலெல்லாம் இருந்து தப்பிக்க என்ன வழி என்று கேட்கலாம். இயன்றவரை மாநகராட்சிகள் வழங்கும் தண்ணீரை நல்ல வடிகட்டிகள் கொண்டு வடிகட்டிப் பின்னர்  அதை 20 நிமிட நேரம் தளதளவென்று கொதிக்க வைத்து அது நன்கு ஆறிய பின் நல்ல குடங்கள், எவர்சில்வர் ட்ரம்களில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

உலகின் மிகச் சுவையான குடிநீர் லண்டனில் உள்ள தேம்ஸ் நதியின் நீராகும். அதற்கடுத்த இடத்தில் இருப்பது தமிழகத்தில் கோவைக்கு அருகில் உள்ள சிறுவாணி நதி நீராகும். இயற்கையான உப்புகள் ஓரளவு கரைந்த நீர் பருகுபவர்களை விட பதப்படுத்தப்பட்ட மென்மையான குடிநீர் (Soft water) பருகுபவர்களிடையே மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் என்று ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.


Spread the love