காற்றிற்கு அடுத்ததாக தண்ணீர் மனிதனுக்கு மிகவும் இன்றியமையாத ஒரு பொருள். உணவில்லாமல் மனிதனால் பல நாட்கள் உயிர் வாழ முடியும், ஆனால் நீரில்லாமல் சில நாட்கள் கூட உயிர் வாழ முடியாது.
நாம் பருகுகின்ற தண்ணீர் நம் உடலிலிருந்து தொடர்ந்து சிறுநீராகவும், வியர்வையாகவும், மலமாகவும் வெளியேறுவதுடன் நமது மூச்சுக்காற்றோடு சேர்ந்து ஆவியாகவும் வெளியேறுகிறது. இதனால் நம் உடலின் தண்ணீர் இழப்பு தொடர்ந்து ஈடு செய்யப்பட வேண்டிய ஒன்று.
உடலின் நீர்த் தேவையானது நாவறட்சியினாலும், தாக உணர்வினாலும் நமக்கு அறிவிக்கப்படுகிறது. நல்ல உடல் நலம், நாம் அருந்தும் தண்ணீரினாலேயே பெரிதும் அமையக்கூடும். எப்போது தண்ணீர் அருந்த வேண்டும், எவ்வளவு அருந்த வேண்டும், நாம் அருந்துகின்ற நீர் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது பற்றி ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும்.
தாகம் எடுக்கின்ற போது நீர் அருந்த வேண்டும். அது அவசியம். அவ்வாறின்றி நீர் குடிப்பதற்கென்று சில நேரங்களைக் குறித்து வைத்துக் கொண்டு, தண்ணீர் தாகம் இல்லாத போது, அந்த நேரங்களில் நீர் அருந்துவதால் எவ்விதப் பயனுமில்லை. தாகம் அல்லது நீர்வேட்கை உண்டாகும் போது நீரை வேகமாகக் குடிப்பதால் தாகம் தீராது. மாறாக நீரை மெல்ல மெல்ல உறிஞ்சிக் குடித்தால் சிறிது நீரிலேயே தாகம் தீர்ந்துவிடும். அதிகமான நீர் அருந்த வேண்டிய அவசியம் ஏற்படாது.
அதிகமான நீர் அருந்தப்படும்போது அது வயிற்றிலுள்ள செரிமான சுரப்புகளை எல்லாம் Dilute செய்து, செரிமானத்தைத் தாமதப்படுத்திவிடும். இதன் காரணமாகவே உணவு உண்ணும் போது நீர் பருகக் கூடாதென்று சொல்லப்படுகிறது. வறுத்த அல்லது பொறித்த மற்றும் உப்பும் காரமும் அதிகமுள்ள உணவுகளை உண்ணுகின்ற போது நீர் குடிப்பதை தவிர்க்க இயலாமல் போக வாய்ப்புள்ளது. உணவு எவ்வளவுக்கு எவ்வளவு இயற்கையோடு இயைந்ததாக உள்ளதோ அந்த அளவுக்குத் தண்ணீர் குறைவாக அருந்தினால் போதுமானது.
குளிரூட்டப்பட்ட நீர் செரிமானத்திற்குத் தடையாக இருக்கக்கூடும். நீரின் குளுமையை நீக்கிப் பதப்படுத்துவதற்காக ஓரளவு உடல் சக்தியும் விரையமாகலாம். எனவே குடிக்கப் பயன்படுத்தப்படுவது குளிர்ந்த நீராக இருக்க வேண்டுமே தவிர மிகவும் குளிரூட்டப்பட்ட நீராக இருக்கக்கூடாது. மருந்து எதுவும் கலக்கப்படாத, குளோரின் சேர்க்கப்படாத நீரே குடிப்பதற்கு மிகவும் ஏற்றது. ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லை. நகர்ப்புறங்களில் குழாய்கள் மூலம் அனுப்பப்படுகின்ற குடிதண்ணீரில் குளோரினும் பிளீசிங் பவுடரும் பெருமளவில் கலக்கப்படுகின்றன. இவற்றை முற்றிலுமாக நீக்க முடியாது என்றாலும் பானைகளில் அல்லது மண் பானைகளில் நீரைப்பிடித்து வைக்கின்ற போது குளோரின் ஆவியாக மாறி வெளியேறி விடுகின்றது.
தண்ணீருக்கு என்றே ஒரு தனிச்சுவையுண்டு. இதில் கரைந்திருக்கும் ஆக்ஸிஜனால் இந்தச் சுவை உண்டாகிறது. நீரைக் கொதிக்க வைக்கும் போது ஆக்ஸிஜன் வெளியேறி விடுவதால் நீரின் சுவை குறைந்து விடுகிறது. எனவே குடிப்பதற்கு ஏற்றது இயல்பான குளிர்ந்த நீர்தான். ஆனால் நீரில் நுண்மத் தொற்றுக்களும் பிற அசுத்தங்களும் சேர்ந்திருக்கக் கூடும் என்ற ஐயமிருந்தால் நீரைக் காய்ச்சிக் குடிப்பதைத் தவிர வேறு வழியில்லை. நீரைச் சூரிய வெளிச்சம் படும்படி வைத்திருந்து பின்னர் வடிகட்டிக் குடிப்பதும் நல்லது.
தாகம் எழுகின்ற வேளைகளில் பலர் பழச்சாறுகள், மென்பானங்கள், காபி, தேநீர் போன்றவற்றை அருந்துகின்றனர். இவைகளெல்லாம் ஒருவகை உணவுகளேயன்றித் தண்ணீர் ஆகாது. தண்ணீருக்கு இணை தண்ணீர் தான்.
கோடை காலம் ஆரம்பமாக உள்ளது, இந்த கோடையில் சரி அளவு தண்ணீர் பருகி உடல் நலத்தில் கவனம் கொள்ள நாம் உறுதி கொள்வோம்.