விட்டமின் பயன்படுத்துபவர்கள் ஜாக்கிரதை

Spread the love

விட்டமின்கள் உயிர் சத்துக்கள். உடலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு இன்றியமையாதது. உணவுப் பொருட்களில் காணப்படும் ஒர் இயற்கை ரசாயனப் பொருள். விட்டமின்களில் இரு வகைகள் உண்டு. ஒன்று கொழுப்புச்சத்தில் கரைபவை (விட்டமின் ஏ, டி, இ,கே), மற்றொன்று நீரில் கரையும் விட்டமின்கள் (‘பி’ பிரிவு விட்டமின்கள், விட்டமின் சி).

உடலுக்கு சிறிய அளவில் தான் விட்டமின்கள் தேவை. விட்டமின்களெல்லாமே தீங்கற்றவை என்று சொல்ல முடியாது. “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்“ என்பது போல, விட்டமின்களும் அதிக அளவில் உட்கொண்டால் அவை விஷமாகும்.

விட்டமின் ‘ஏ’

இதை ஒரு நாள் உட்கொள்ள வேண்டிய அளவு ஆண்கள் – 700 லிருந்து 900 மைக்ரோகிராம் (0.7 முதல் 0.9 மில்லிகிராம்) பெண்கள் – 700 மைக்ரோகிராம் (0.7 மி.கி.) வாரத்தில் 3 (அ) 4 முறை வைட்டமின் ‘ஏ’ உட்கொண்டால் போதுமானது. அதுவும் டாக்டரின் அனுமதியுடன் உட்கொள்ள வேண்டும்.

விட்டமின் ‘ஏ’ அதிகமானால்

டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிராபிக் டி.வி. சேனல்களில், துருவக் கரடி   யை பார்த்திருப்பீர்கள். வெள்ளை, மஞ்சள் நிறத்தில் கொழு கொழுவென்று இருக்கும் பெரிய கரடி அது. இந்த கரடியின் எந்த பாகங்களை அங்குள்ள எஸ்கிமோக்கள் சாப்பிடுகிறார்களோ இல்லையோ, அதன் ‘லிவரை’  மட்டும் அவர்கள் தொடமாட்டார்கள்! எஸ்கிமோக்களின் வாகனமான “ஸ்லெட்ஜ்ஜை” (Sledge) இழுக்கும் நாய்கள் கூட இந்த துருவக் கரடியின் கல்லீரலை சாப்பிடாது காரணம் துருவக் கரடியின் லிவரில் உள்ள விட்டமின் ‘ஏ’ – இதன் அளவு எவ்வளவு தெரியுமா? ஒரு கோடி I.U! (I.U. – 1 மை.கிராம்) ஒரு சராசரி மனிதனின் தினசரி தேவை அதிகபட்சமாக 5000 மி.ஹி.

துருவ கரடியின் லிவரை உட்கொண்டால், தலை சுற்றல், வாந்தி முதலியவை உண்டாகி, உண்டவரில் புறத்தோல் முழுவதும் உரிந்து போய்விடும். அதிக அளவு விட்டமின் ‘ஏ’ யை தொடர்ந்து நீடித்த நாட்கள் உட்கொண்டால் உடலில் நச்சப்பொருட்கள் உருவாகும்.’ எனப்படுகிறது. இரத்த ப்ளாஸ்மா (நிணநீர்) வில் ரெடினால் 100 மி.கி./டெ.லிக்கு அதிகமானால் Hypervitaminosis’ தாக்குதல் என்று பொருள்.

அதிக அளவு விட்டமின் ஏ உட்கொள்வது குழந்தை, சிறுவர் சிறுமிகளை அதிகம் பாதிக்கும். குழந்தைகளுக்கு அதிக அளவு விட்டமின் ‘ஏ’ சேருவதின் காரணம் – பெற்றோர்கள் தான். குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற பேராவலில் ‘மீன் எண்ணெய்’யை அதிகம் கொடுப்பதால் நன்மைகளை விட தீமை அதிகமாகும். குறைந்த அளவில் (7.5லிருந்து 15 மி.கி.) ரெடினால் 30 நாள்கள் கொடுக்கப்பட்ட குழந்தைகள் உடலில் நச்சுப்பொருட்கள் உண்டாகி விடுகிறது.

தினமும் 500 மி.கி. உட்கொண்ட பெரியவர்களுக்கும், 100 மி.கி. சிறுவர்களுக்கும், 30 மி.கி. ஒரு குழந்தைக்கும் கொடுக்க, அதுவே விஷத்தை உருவாக்கி விடுவது தெரியவந்துள்ளது.

அறிகுறிகள்

தூக்கக் கலக்கம், மயக்கம், தொடர்ந்து தூங்குவது, கடுமையான தலைவலி, கல்லீரல் வீக்கம், 24 மணி நேரம் கழித்து தோல் உரிதல்.

சருமத்தில் அரிப்பு, தோல் வெடிப்பு, உலர்ந்த அழுகிய சர்மம், தலைமுடி கொட்டுதல், உதட்டில் வெடிப்பு.

பசியின்மை, எலும்புகள் விகாரமடைதல், எலும்புகளில் வலி, மென்மையாதல், நலிவடைதல், பற்சிதைவு.

ஆயாசம், எரிச்சல் படுவது, உதிரப்போக்கு.

முதல் சிகிச்சை ரெநாய்ட் (வைட்டமின் ஏ) உட்கொள்வதை நிறுத்த / குறைக்க வேண்டும். 1 வாரத்தில் அறிகுறிகள் மறையும். தோல் பாதிப்புகள் குறைய சில மாதங்களாகும். கல்லீரல் நிரந்தரமாக பாதிக்கப்படலாம். விட்டமின் ஏ வின் உற்ற தோழன் விட்டமின் ‘டி’ இரண்டும் சேர்ந்தே உட்கொள்ளப்படுகின்றன. இதனால் ஹைபர்விட்டமினோசிஸ் அறிகுறிகளில் சில விட்டமின் ‘டி’ யால் உண்டாக்கப்பட்டிருக்கலாம். குழந்தைகளை பொருத்த வரையில், குழந்தையின் தாய் கர்ப்பமாக இருக்கும் போது முதல் 3 மாதங்களில் 7.5 லிருந்து 12 மி.கி. ரெடினால் உட்கொண்டு வந்திருந்தால், குழந்தை பிறவிக்கோளாறுகளால் பாதிக்கப்படலாம். எனவே டாக்டரால் பரிந்துரைக்கப்பட்ட அளவை கர்ப்பிணிகள் கடைபிடிக்க வேண்டும்.

விலங்குகளில் நடத்திய சோதனையில், விட்டமின் ‘இ’ விட்டமின் ‘ஏ’ உண்டாக்கிய நச்சுகளை குறைக்கிறது என்பது தெரியவந்துள்ளது. எனவே விட்டமின் ஏ உள்ள மருந்துகள், டானிக்குகளில் விட்டமின் ‘இ’. சிறிதளவு சேர்க்கப்படுகிறது. கர்ப்பிணிகள் உடலில் கொழுப்புடன் விட்டமின் ‘ஏ’ சேர்ந்து தேங்கி விடுகிறது. இவர்களின் உடலிலிருந்து நஞ்சான ரெடினாய்டுகளை நீக்கி 2 வருடங்களாவது ஆகலாம். தவிர ஆண்களும் ‘சுய மருத்துவம்‘ செய்து கொண்டு அளவுக்கு மீறி விட்டமின் ‘ஏ’ உண்பது தவறு.

விட்டமின் ‘டி’

Calciferol அதிகமாக உட்கொண்டால் இதர விட்டமின்களை விட பகிரங்கமாக நச்சுப்பொருட்களை உண்டாக்குவது விட்டமின் ‘டி’. தினசரி 1.25 மி.கி. எடுத்துக் கொண்டால் ‘ஹைபர்கால்சிமியா’  ஏற்படும். இது ரத்தத்தில் இயற்கைக்கு மாறாக தசை பலவீனம், உணர்ச்சியின்மை, தலைவலி, பசியின்மை, பிரட்டல், வாந்தி, ஹைபர் டென்ஷன், எலும்பு வலி வரும். சிறுநீரக செயல்பாடுகள் விரைவாக பாதிக்கப்படும். இந்த அதிகப்படியான விட்டமின்களை தருவது பெற்றோர்களின் தவறு. குழந்தைக்கு  தாக்கினால் வளர்ச்சி 6 மாதத்திற்கு நின்று விடும்.

சிகிச்சை

விட்டமின் ‘டி’ உட்கொள்வது நிறுத்தப்பட வேண்டும்.

கால்சியம் குறைந்த உணவு.

குளூகோகோர்டிசாய்டல் மருந்துகள்.

விட்டமின் ‘சி’

சாதாரணமாக இந்த விட்டமினை உடல் நன்கு ஏற்றுக் கொள்ளும். அதிக அளவு கொடுத்தால் பேதி, களைப்பு, பலவீனத்தை உண்டாக்கலாம். சர்ம நோய்கள் தோன்றலாம்.


Spread the love