உயிர்ச்சத்து உள்ள உணவுகள்

Spread the love

மனிதன் உயிர் வாழ்வதற்கு அவசியமான பொருட்கள் சுவாசிக்க காற்று, குடிக்க நீர், உயிர்வாழ உணவு ஆகும். நாம் சாப்பிடும் உணவு, வாய், இரைப்பை, குடலில் நன்றாக அரைக்கப்பட்டு, பல செரிமானப் பொருள்களால் (என்சைம்) மிகச் சிறிய அணுக்களாக்கப்பட்டு, இரத்தத்தில் ஒன்றாகக் கலந்து, உடல் முழுவதும் சென்று உடலின் ஒவ்வொரு உறுப்புக்களையும் சீராக இயங்க உதவுகிறது. உணவு குறைந்தாலும், அதிகரித்தாலும், செரிமானம் செயல்படாது பிரச்சனைக்கு ஆளாகும் போதெல்லாம் உடலின் ஊட்டம் குறைகின்றது. ஊட்டச்சத்துக்கள் உணவில் சரியான அளவில் சேர்ந்தால் தான் உடலும் ஆரோக்கியமாக நோயின்றி அமையும். உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் தண்ணீர், புரதம், மாவு, கொழுப்பு, வைட்டமின்கள் எனப்படும் உயிர்ச்சத்துக்கள், தாது உப்புக்கள் ஆகியவையாகும். இச்சத்துக்களின் தேவை, உடல் அமைப்பு, வயது, உடல் உழைப்பு, உயரம் இவைகளுக்கு ஏற்ப மாறுபடுகிறது. வைட்டமின் போன்ற சத்துக்களின் தேவையும் பயனும் புரதம், கொழுப்பு, மாவுப் பொருட்கள் உட்கொள்ளும் அளவைச் சார்ந்திருக்கிறது. சத்துக்களில் நாம் உயிர்ச்சத்துக்கள் எனக் கூறப்படும் விட்டமின்களைப் பற்றி பார்ப்போம்..

வைட்டமின்கள் உடலுக்கு மிகவும் சிறிய அளவில் தேவைப்படுகின்றன. உடலில் சில முக்கிய வேலைகள், செயல்கள் சரிவர இயங்க இவை அவசியம் தேவைப்படுவதால் இவைகள் வைட்டமின்கள் அதாவது உயிர்ச்சத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றன. பலவகையான பச்சைக் காய்கறிகள், பழங்கள், பால், முட்டைகளில் வைட்டமின்கள் அதிக அளவில் இருக்கின்றன. ஆனால் உடலுக்கு இவ்வுயிர்ச்சத்துக்களின் தேவை மிகக் குறைவு. உடல் நலத்திற்கு டானிக் என்று தயாரிக்கப்படும் வைட்டமின் நிறைந்த மாத்திரைகள், மருந்துகள் அதிக அளவில் உட்கொள்வதனால், உடல் அதிக அளவில் பயன்பெறுகிறது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

நல்ல ஊட்டச் சத்தான உணவு உண்பவர்கள், அளவுக்கு மீறி சாப்பிடும் வைட்டமின்கள் சிறுநீரில் வெளியேறி வீணாகின்றன. வைட்டமின் சத்துக் குறைவு நோய்கள் பெரும்பாலும் ஊட்டக் குறைவான உணவுகளை சாப்பிட்டு மெலிந்து நலிந்து இருக்கும் மனிதர்களுக்குத் தான் அதிக அளவில் ஏற்படுகின்றன.

சில வைட்டமின்கள் தான் உடலில் ஓரளவு சேமித்து வைக்கப்படுகின்றன. உதாரணமாக வைட்டமின் ஏ சத்து, நல்லுணவு உண்ணும் குழந்தைகளின் உடலில் பல மாதங்களின் தேவைக்கு சேமித்து வைக்கப்படும். வைட்டமின் பி அல்லது தையாமின் ஒரு சில நாட்களுக்கான தேவையைத்தான் சேமித்து வைக்க முடியும். இவற்றையெல்லாம் அன்றாடம் சரிவிகித உணவின் மூலம் பெறுவது தான் நல்லது.

பொதுவாக நோய் வாய்ப்படும் நாட்களில் தவிர, மற்ற நாட்களில் வைட்டமின் மாத்திரைகள், மருந்துகள் சாப்பிடுவது தேவையற்றது. உடலுக்குத் தேவையான வைட்டமின்களை இரு வகையாகப் பிரிக்கிறாகள். அவற்றில் ஒரு வைட்டமின்கள் எண்ணெய், வெண்ணெய் போன்ற கொழுப்பு பொருட்களில் கரையக் கூடியவை இந்த வைட்டமின்கள் நன்றாகச் செரிமானமாகி, உடலில் உட்கிரகிக்கப்படுவதற்கு எண்ணெய், வெண்ணெய் ஆகியவை தேவை. இவ்வகையைச் சேர்ந்த வைட்டமின்கள் ஏ, டி, கே, ஈ ஆகியவை. மற்றொரு வகை வைட்டமின் பியும் சியும் இந்த வகையைச் சார்ந்தவை. சிறிதாக வெட்டிய காய்கறிகளை தண்ணீரில் கழுவினால் இச்சத்துக்கள் தண்ணீரில் கரைந்து வீணாகி விடுகின்றன.

வைட்டமின் ஏ

கண், தோல், சுவாசக் குழாய், குடல் இவற்றின் படலங்கள் நன்கு செயல்புரிய உதவுகிறது. இந்தப் படலங்கள் நலமுடன் இயங்கினால் தான் உடலைத் தாக்கும் நச்சுக் கிருமிகளை அழிக்க முடியும். வைட்டமின் ஏ குறைவினால் இப்படலங்கள் நலம் கெட்டு விடுவதால் வியாதியை தோற்றுவிக்கும் கிருமிகள் எளிதில் பரவுகின்றன. எனவே வைட்டமின் ஏ தொற்று நோய்த் தடுப்பு வைட்டமின் என அழைக்கப்படுகிறது.

வைட்டமின் ஏ

கண் பார்வையைப் பாதுகாக்கிறது. கண் விழியின் பின்புறம் அமைந்துள்ள ரெடினா திரையின் வழியாகத் தான் நாம் பார்க்கும் ஆற்றலைப் பெறுகிறோம். ஒளியானது அவ்விழித் திரையில் விழும் போது அத்திரையில் (இரசாயன) மாற்றங்கள் ஏற்பட்டு பார்க்கும் பொருளை அறிய முடிகிறது. வைட்டமின் ஏ குறையும் போது, இவ்விழித்திரை மாற்றங்கள் குறைந்து குறிப்பாக இரவு வேளைகளில் பார்வை குறையும். மேலும் சத்துக் குறைவினால் கருவிழி உலர்ந்து, புண்ணாகி, குருடாகி விடும். இவ்வைட்டமின் சத்து மீன், மாமிசத்தில் உள்ள கொழுப்புகளில் அதிகம் உள்ளது. சுறா மீன், ஈரலில் அதிகம் உள்ளது. கீரை வகைகள், கேரட், பப்பாளி, மாம்பழம் ஆகியவற்றில் இந்த வைட்டமின் சத்து அதிக அளவில் உள்ளது.

வைட்டமின் டி

எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் தேவையான ஒரு உயிர்ச்சத்து வைட்டமின் டி ஆகும். எலும்பு வளர்ச்சி குழந்தைகளுக்கும், வளரும் சிறுவர், சிறுமியர்களுக்கும் அதிகம் தேவை என்பதால், வைட்டமின் டி சத்துக் குறைவு காணப்பட்டால் அதிகக் கெடுதலை தோற்றுவிக்கும். சூரிய வெளிச்சம், தோலின் மேல் விழும் போது, தோலிலிருக்கும் எண்ணெயிலிருந்து வைட்டமின் டியை பெருமளவில் உற்பத்தி செய்கிறது. எனவே குழந்தைகளை வெற்றுடம்போடு இளம் வெயிலில் சிறிது நேரம் உலாவ விடுவது நல்லது. முட்டை, மீன், மாமிசம், வெண்ணெய், பால், ஈரல், மீன் எண்ணெய் போன்றவைகளில் வைட்டமின் டி அதிகம் உள்ளது.

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்

பி காம்ப்ளக்ஸ் என்று சொல்லப்படும் இதில் முக்கியமானவை தையாமின், ரிப்போப்ளேவின், நையாசின், பைடாக்சின், போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி 12 போன்றவைகளே.

தையாமின்

தையாமின் என்னும் வைட்டமின் அரிசி, கோதுமை மற்றும் சர்க்கரை போன்ற மாவுப் பொருள்களை செரிமானமாக்கி நல்ல முறையில் உடலை செயல்படச் செய்கிறது. மாவுப் பொருள்கள் அதிகம் சாப்பிடும் நமக்கு, இது அதிக அளவு தேவைப்படுகிறது. இது காய்கறிகள், பருப்பு வகைகள் தானியங்கள், பயறு வகைகள் முதலியவற்றில் அதிகம் உள்ளது. முளை கட்டிய பயறுகளில் இச்சத்து அதிகம் உள்ளது. அரிசியை அதிகம் தீட்டுவதால், அதன் முளையிலுள்ள சத்து நீக்கப்பட்டு, மாவுப்பொருள் அதிகமாகிறது.

ரிப்போப்ளேவின்

மஞ்சள் நிறமானது. ரிப்போப்ளேவின்சத்துக் குறைவால் வாய்ப்புண் ஏற்படும்.     தானியங்கள், பருப்பு வகைகள், பச்சைக் காய்கறிகள், பால், மீன், மாமிசத்தில் இது அதிக அளவில் இருக்கிறது. கிழங்கு வகைகளில் இச்சத்து மிகவும் குறைந்த அளவில் உள்ளது.

நையாசின்

இந்த வைட்டமின் தோல், நரம்புகள் நல்ல முறையில் சீராக இயங்க தேவைப்படுகிறது. இச்சத்து காய்கறிகள், மாமிசம், முட்டை, பால் ஆகியவற்றில் அதிக அளவு உள்ளது. சோளம், மக்காச்சோளம் முதலியவற்றில் அதிகமாக இருக்கும்.

பைடாக்சின்

வைட்டமின் பி 6 என்று கூறப்படும் பைடாக்ஸின் சத்து நரம்பு மண்டலம நன்கு செயல்பட தேவைப்படுகின்றது. இரத்தம் நல்ல முறையில் உற்பத்தியாக இது தேவைப்படுகிறது. இதுவும் பச்சைக் காய்கறிகள், மாமிசம், முட்டை, பால் ஆகியவற்றில் அதிகம் உள்ளது.

போலிக் ஆசிட்

போலிக் அமிலம் என்று கூறப்படும் சத்தானது இரத்த அணுக்கள் பெருகி, நன்கு வளர உதவுகிறது. இதன் குறைவால் இரத்த சோகை ஏற்படுகிறது. பச்சைக் காய்கறிகள், பால், முட்டை, மாமிசத்தில் இது அதிக அளவில் இருக்கிறது.

வைட்டமின் பி 12

போலிக் அமிலத்தைப் போன்றே இரத்த அணுக்கள் வளர்ச்சிக்கு இச்சத்து அதிகம் தேவைப்படுகிறது. காய்கறிகளில் இது சிறிது கூட கிடையாது. பால், முட்டை, மாமிசத்தில் அதிக அளவில் இருக்கிறது.

வைட்டமின் சி

உடலின் வளர்ச்சியில் வைட்டமின் சி சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. வெகு சிறிய இரத்தக் குழாய்கள் நன்றாக உண்டாகி இயங்குவதற்கு இது மிகவும் தேவை. பச்சைக் காய்கறிகள், ஆரஞ்சு, சாத்துக்குடி எலுமிச்சை, கொய்யாவில் இச்சத்து அதிகம் காணப்படுகிறது. நெல்லிக்கனியில் இவை அனைத்தையும் விட அதிக அளவில் உள்ளது. உணவுப் பொருள்களை வெயில் படுமாறு வைத்தாலும், சூடாக்கினாலும், உலர வைத்தாலும் இச்சத்து அழிந்து விடுகிறது.


Spread the love