தங்கமான வைட்டமின் சி

Spread the love

விட்டமின்களில் தங்கம் போன்றது வைட்டமின் ‘ C ‘ நீரில் கரையும் வைட்டமின் ‘C ‘, ஒரு நோய் தடுக்கும் வைட்டமின். உடலை நோய்களிலிருந்து பாதுகாக்கும். இதன் பயன்கள் ஏராளமானவை. மேலும் மேலும் ஆராய்ச்சிகளின் மூலம் இதன் புதிய பயன்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த வைட்டமின் ‘அஸ்கார்பிக் அமிலம்’ (Ascorbic acid) என்றுத் சொல்லப்படுகிறது.

வைட்டமின் ‘C ‘ யை நமது உடல் தானாகவே தயாரித்துக் கொள்ள முடியாது. உணவிலிருந்து தான் இதை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லை மாத்திரைகள் மூலம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பயன்கள்

உடல் சீராக வளர உதவும். எலும்புகளும், பற்களும் உருவாக உதவுகிறது. புரதத்துடன் இணைந்து திசுக்களின் வளர்ச்சியிலும் அமைப்பிலும் பங்கேற்கிறது.

உடலின் நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலின் நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. பாக்டீரியா, வைரஸ் கிருமிகளில் உண்டாகும் தொற்று நோய்களை தடுக்கிறது. அடிபட்டதால் ஏற்படும் காயங்கள், தீப்புண்களை விரைவாக குணமாக்குகிறது.

தசை நார்கள், எலும்புகள், செல், திசுக்கள், பற்கள், ஈறுகள் இவற்றையெல்லாம் இணைக்கும் முக்கியமான பொருள் ‘கொல்லாஜென்’ (Collagen). இதை தயாரிப்பது வைட்டமின் ‘C ‘.

உணவிலிருந்து இரும்புச்சத்தை உடல் கிரகிக்க வைட்டமின் உதவுகிறது. அதே போல் கால்சியத்தை உடல் ஏற்றுக் கொள்ளவும் உதவுகிறது.

ஜலதோஷத்தை ஓரளவு கட்டுப்படுத்த உதவுகிறது.

தீவிரமான காய்ச்சல் அல்லது அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு, உடல் ஆற்றல் பெற உதவும் சிறந்த டானிக்.

வைட்டமின் ‘C’ உள்ள உணவுகள்

முக்கியமானவை சிட்ரஸ் பழங்கள், நெல்லிக்காய்.

உணவு (100 கிராம்) மும், வைட்டமின் C (மி.கிராமிலும்) உள்ளது.

அகத்திக்கீரை-169

குப்பைக்கீரை-179

முட்டைக்கோஸ்-124

கொத்தமல்லி-135

முருங்கைக்கீரை-220

நூல்கோல் இலைகள்-157

குப்பைமேனி-147

டர்னிப் இலைகள்-180

முருங்கைக்காய்-120

குடமிளகாய்-137

பச்சைமிளகாய்-111

நெல்லிக்காய்-600

முந்திரிப்பழம்-180

கொய்யாப்பழம்-212

கொருக்கப்பள்ளி-108

ஆரஞ்ச்-30

ஆரஞ்ச் ஜுஸ்-64

எலுமிச்சை ஜுஸ்-63

இலந்தப்பழம்-76

பப்பாளி-57

தினசரி தேவை (வைட்டமின் C)

ஆண், பெண்-40 லிருந்து 75 மி.கி.

பாலூட்டும் தாய்மார்கள்-80 லிருந்து 95 மி.லி.

குழந்தைகள்-25 மி.கி. (0-12 மாதங்கள்)

சிறுவர்கள் (1 லிருந்து 18 வரை) 40 மி.கி.

வைட்டமின் ‘ C’ தானிய பருப்பு வகைகளில் இல்லையென்றே சொல்லலாம். ஆனால் “முளை கட்டிய” (Sprouted) தானியங்களில் அதிகம் ஏற்படுகிறது. முளை கட்டுவதற்கு தானியங்களை 24 மணி நேரம் நீரில் நனைத்து, வடிகட்டி ஈரத்துணியில் பரப்பி, ஈரத்துணியால் மூடி வைக்க வேண்டும். இரண்டு மூன்று நாட்களில் 1 (அ) 2 செ.மீ. நீளமாக முளை வரும். முளைகட்டிய முழு கடலைப்பருப்பு (கொத்துக்கடலை). பஞ்ச காலங்களில் வைட்டமின் C குறைபாடுகளை போக்க மிகவும் உதவியது. இந்த பருப்பை விட 3 மடங்கு அதிகம் வைட்டமின் C நிறைந்த பருப்பு முளைகட்டிய பாசிப்பயறு முளைகட்டிய தானியங்களை பச்சையாகவோ அல்லது குறைவாக சமைத்து உண்பது நல்லது.

வைட்டமின் ‘C ‘ யின் நற்குணம் அது மலிவான எளிதாக கிடைக்கும் நெல்லிக்காயில் அபரிமிதமாக இருப்பது தான். விலை உயர்ந்த ஆப்பிளில் வைட்டமின் C இல்லை. சிட்ரஸ் பழங்களில் இருக்கிறது. நெல்லிக்கனியில் உள்ள அளவு வேறெங்கும் இல்லை. ஆரஞ்சு ஜுஸை விட நெல்லிக்காயில் 20 மடங்கு, வைட்டமின் ‘C’ அதிகம். நெல்லிக்காயை காய வைத்தாலும், சமைத்தாலும் அதில் உள்ள வைட்டமின் ‘சி’ குறைவதில்லை.

வைட்டமின் ‘சி’ குறைந்தால்

ஸ்கர்வி – ரத்த நாளங்கள், எளிதில் உடைந்து ரத்தக்கசிவு ஏற்படுதல், பசியின்மை புண்கள் ஆறாமல் போதல், குழந்தைகளில் கால், தொடைகளில் வலி, வீக்கம், காய்ச்சல், வாந்தி முதலியனவும், ரத்த சோகையும் உண்டாகும். ஆனால் இந்தியாவில் ஸ்கர்வி அதிகமாக தாக்கியதில்லை.

ஆஸ்டியோ பொரோசிஸ் (Osteo – poresis) எனும் எலும்புச் சிதைவு

எடை குறைதல், அஜீரணம், தோல் பாதிப்புகள் முதலியன ஏற்படலாம்.

அதிகம் உட்கொண்டால்

ஒரு நாளுக்கு 100 மி.கி. அளவை தாண்டினால் – பேதி, வயிற்று வலி, மயக்கம், தலை சுற்றல், தலைவலி, தசைப்பிடிப்பு, வாய்ப்புண்கள், சிறுநீரகத்தில் கற்கள் முதலியன ஏற்படலாம்.

எதனால் அழியும்

வைட்டமின் ‘C ‘ முக்கிய குணாதிசயம், அது சீக்கிரமாக குறைந்து போகும். காரணம் காற்றில் சுலபமாக “ஆக்ஸிகரணம்” (Oxidation) ஆகி விடும். எனவே வைட்டமின் ‘C’ உள்ள காய்கறிகளை “வெட்டி” வைத்தால் அல்லது உலர வைத்தால், காற்றில் வைட்டமின் ‘C’ கரைந்து விடலாம். சூரிய வெளிச்சத்தாலும் வைட்டமின் ‘C’ பாதிக்கப்படும். தண்ணீரில் அதிக நேரம் காய்கறிகளை ஊற வைத்தாலும் இல்லை அவற்றை அதிகமாக வேக வைத்தாலும், வைட்டமின் ‘C’ அழிந்து விடும். கூடிய வரை வைட்டமின் ‘C’ செறிந்த காய்கறிகளை பச்சையாக உண்பது நல்லது.


Spread the love