வைட்டமின் பி 3

Spread the love

மாதமொரு வைட்டமின் – வைட்டமின் பி 3

நாம் தினசரி உட்கொள்ள வேண்டிய அத்தியாவசியமான வைட்டமின்களில் ஒன்று வைட்டமின் பி 3. நீரில் கரையும் பிகாம்ப்ளெக்ஸ் வைட்டமின் குடும்பத்தை சேர்ந்தது. இதில் இருவகைகள் உண்டு. அவை நிக்கோடினிக் அமிலம் (Nicotinie acid) (அ) நியாசின் (Niacin)

நியாசினமைட் (Niacinamide) (அ) நிகோடினமைட் (Nicotinamide)

வைட்டமின் பி 3 யின் பணிகளும், பயன்களும்

பல வளர்சிதை மாற்றங்களுடன் இணைந்தது. நாம் உண்ணும் உணவிலிருந்து உடலுக்கு தேவையான சக்திகளை உடல் பெற உதவுகிறது. கார்போஹைடிரேட், புரதம், கொழுப்பு இவற்றின் ஜீரணத்திற்கு உதவும் என்சைம்களை உருவாக்குகிறது.

நரம்பு மண்டல ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. ஞாபக சக்தியை பாதுகாக்கிறது. தூக்கமின்மையை வராமல் தடுக்கும். மனச்சோர்வை கட்டுப்படுத்துகிறது.

ஆரோக்கியமான சர்மத்திற்கு தேவையான வைட்டமின்.

ஜீரண மண்டல உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தும்.

வைட்டமின் பி 3 யின் தேவை

எல்லாவித உணவு புரதங்களில் ட்ரைடோஃபான்‘ (Tryptophan) என்ற அமினோ அமிலம் உள்ளது. இந்த அமிலத்தின் ஒரு பகுதியிலிருந்து, நம் உடல், வைட்டமின் H 3 ஐ (நியாசினாக) உண்டாக்குகிறது. 60 மி.கி. “ட்ரைடோஃபான்” 1 மி.கி. வைட்டமின் H 3 ஐ தருகிறது. மீதித் தேவையை உணவின் புரதம் தவிர இதர ஊட்டச்சத்துகளிலிருந்து எடுத்துக் கொள்கிறது.

தினசரி தேவை

ஆண்கள் (செய்யும் வேலையை பொருத்து) – 16 லிருந்து 21 மி.கி.

பெண்கள்                 12 லிருந்து 16 மி.கி.

கர்ப்பிணிப் பெண்கள்    18 மி.கி.

பாலூட்டும் தாய்மார்கள் – 18 மி.கி.

வைட்டமின் பி 3 உள்ள உணவுகள்

சோளம், முழுத்தானியங்கள், பருப்புகள், பயறுகள்.

நிலக்கடலையில் வைட்டமின் பி 3 அபரிமிதமாக உள்ளது. 100 கிராம் நிலக்கடலையில் (வறுக்காதது) 19.9 மி.கிராமும் வறுத்த நிலக்கடலையில் 22.1 மி.கிராமும் உள்ளது.

பீன்ஸ், சோயா பீன்ஸ், பட்டாணி, தக்காளி, உருளைக்கிழங்கு.

கடுகு

கோழி, மாடு, வான்கோழி, பன்றி, முயல் இறைச்சிகளில்

முட்டை

வைட்டமின் H 3 குறைந்தால்

ஒரு காலத்தில் ஐரோப்பியாவை உலுக்கிய நோய் “பெல்லகிரா” (Pellagra) வைட்டமின் H 3 குறைவினால் ஏற்படுவது. வாய்ப்புண், தோல் நோய்கள், வயிற்றுப்போக்கு, டிமென்ஷியா எனும் மன குறைபாடுகள் பெல்லக்ராவின் அறிகுறிகள் – தற்போது பெல்லக்ரா ஏற்படுவது மிகவும் குறைவு. இதில் அதிசயம் என்னவென்றால் சோளம் (ஜோவார், Sorghum Vulgare) மற்றும் மக்காச்சோளம் (Maize (Zea Mays) – இவற்றை முக்கிய உணவாக உண்ணும் தேசங்களில் பெல்லக்ரா தோன்றுகிறது. தென்னிந்தியாவில் சோளத்தை அதிகம் உண்ணும் ஏழை மக்களிடையே பெல்லக்ரா காணப்படுகிறது.

காரணம் சோளத்தை நேரடியாக சமைத்து சாப்பிட்டால் அதில் நிறைந்து உள்ள நியாசின்உடலில் சேராது. அதனால் வைட்டமின் H 3 யின் குறைவு ஏற்பட்டு பெல்லக்ராஏற்படும். எலுமிச்சைப்பழ சாற்றில் ஊற வைத்தால் அதில் உள்ள நியாசின் (வைட்டமின் H 3) வெளிபட்டு ஜீரணமாகி உடலில் கிரகிக்கப்படுகிறது.

மத்திய நரம்பு மண்டல பாதிப்புகள் உண்டாகலாம். மன அழுத்தம், சோர்வு, உற்சாகமின்மை, சித்தப்பிரமை ஏற்படலாம்.

ஜீரண மண்டல பாதிப்புகள், வாய்ப்புண்கள், வாய்துர்நாற்றம் ஏற்படலாம்.

எடை குறைவு, தூக்கமின்மை, பலவீனம்.

வைட்டமின் H 3 அதிகமானால்

கல்லீரல் பாதிக்கப்படலாம், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகலாம். வயிற்று வலி, தோல் சிவந்து அரிப்பு ஏற்படலாம்.

எதனால் வைட்டமின் H 3 இழப்பு ஏற்படுகிறது?

இந்த வைட்டமின் உள்ள உணவுப் பொருட்களை அதிக நேரம் கொதிக்க வைத்து சமைத்தால், நியாசின் அழிந்து விடும்.


Spread the love