வெற்றிச் சிந்தனைகள்

Spread the love

மனம் எப்போதும் அலைந்து கொண்டே இருக்கக் கூடியது. ஒரு நிமிட நேரத்தில் ஓராயிரம் சிந்தனைகள் மனதைக் கடக்கும். என்றாலும் எல்லாச் சிந்தனைகளும் ஏற்புடையனவாக இருக்க வேண்டுமென்பதில்லை. பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்து நிற்கும்போது பலப்பல பேருந்துகள் வருவதும் போவதுமாக இருக்கின்றன. என்றாலும் எல்லாவற்றிலும் நாம் ஏற முயல்வதில்லை. எந்தப் பேருந்து நம்மை நாம் செல்ல வேண்டிய இடத்திற்குக் கொண்டு செல்லுமோ அதில் மட்டுமே ஏறுகிறோம். அதுபோன்று மனத்தில் தோன்றுகின்ற எல்லாவற்றிலும் சிந்தையைச் செலுத்தாமல் நமது தேவை என்ன? குறிக்கோள் என்ன என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

சிந்தனையைத் தெளிவுபடுத்திக் கொண்டு திடமாக ஒரு காரியத்தில் இறங்கும்போது எதிர்மறைச் சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது. கடந்த காலத்தில் ஏதோ ஒன்றிரண்டு முயற்சிகளில் வெற்றி பெற முடியவில்லை என்பதற்காக எதிர்காலத்திலும் அவ்வாறு நிகழ வேண்டுமென்ற கட்டாயமில்லை. அப்படி எதிர்பார்க்கவும் தேவையில்லை.

ஒவ்வொரு காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்றவாறே காரியங்கள் நிகழ்கின்றன. அதனால் புதிய எண்ணங்களை ஆக்கபூர்வமாகத் தளராத முயற்சியுடன் மேற்கொண்டால் வெற்றி நம்மைத் தேடி வரும். இது சிறுசிறு செயல்களில் வெற்றி பெறுகின்றபோது நம் மனதில் மகிழ்ச்சியும், துணிவும் எற்படுகிறது. இது மேலும் மேலும் செயல்களில் ஆர்வமுடன் ஈடுபடத் துணை நிற்கிறது.

அடுத்து நாம் எடுத்துக் கொண்டுள்ள முயற்சி நேர்மையானது, நமக்கு மட்டுமின்றிப் பிறருக்கும் நன்மை பயக்கும் என்ற உணர்வு இருக்க வேண்டும். அடுத்து நமது திட்டத்தை, முயற்சியை நாமே மனதார நேசிக்க வேண்டும். அப்போது மட்டுமே நாம் எடுத்துக் கொண்ட முயற்சியில் முழு மனதுடனும், நம்பிக்கையுடனும் ஈடுபடுவோம். அவ்வாறு செயல்படும்போது வெற்றி நிச்சயம் நம்மைத் தேடி வரும்.

பொன்மொழிகள்

இழந்த பணத்தை உழைத்து மீட்கலாம், இழந்த அறிவை படித்து மீட்கலாம்,இழந்த உடல்நலனை மருந்துகளால் மீட்கலாம், இழந்த நேரம் இழக்கப்பட்டது தான்…

ஆயுர்வேதம்.காம்


Spread the love