வெங்காயப் பூண்டு வெங்காயமும் பூண்டும் இணைந்த கலவை

Spread the love

வெங்காயம் மற்றும் வெள்ளைப் பூண்டு ஆகிய இரண்டும் நமது சமையலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இவைகளின் மணம் மற்றும் சுவை என்பது வேறு வேறானது. வெங்காயம் மற்றும் வெள்ளைப் பூண்டு ஆகிய இரண்டின் மணமும் கலந்த ஒரு தாவரம் உள்ளது. அதுதான் வெங்காயப் பூண்டுச் செடி ஆகும்.  இதன் தாவரவியல் பெயர் அல்லியம் டூபரோசம் என்பதாகும். இது அல்லியேசி என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.

இத்தாவரத்திற்கு பல்வேறு பெயர்கள் உண்டு. ஏற்காட்டில் இதனை ஜிம்மு என அழைக்கின்றனர். பூண்டு சிவ்ஸ், ஓரியண்டல் பூண்டு, ஆசியன் சிவ்ஸ், சீன சிவ்ஸ், சீன லீக் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.

தாயகம்

இது சீன மாகணமான ஷாங்க்சியின் தென்மேற்கு பகுதியை தாயகமாகக் கொண்டது. சைபீரியா, மங்கோலியா, ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளிலும் காணப்படுகிறது. தற்போது உலகம் முழுவதும் இது பயிரிடப்படுகிறது. சில இடங்களில் களைச் செடியாகவும் வளர்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆழகுத் தாவரமாக வளர்த்து வருகின்றனர். இத்தாவரத்தை பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த தாவரவியல் அறிஞர் ஜோஹன் பீட்டர் ரோட்லர் என்பவரால் விவரிக்கப்பட்டது. பின்னர் 1825 ஆம் ஆண்டில் இதற்கு தாவரவியல் பெயர் சூட்டினர்.

வளரியல்பு

வெங்காயப் பூண்டுச் செடியானது வெங்காய பேரினதைச் சேர்ந்தது. இது ஒரு சிறு தாவரம். வெங்காயம் மற்றும் வெள்ளைப் பூண்டிற்குக் காணப்படும் குமிழத்தின் அமைப்பிலிருந்து இதன் குமிழம் மாறுபட்டது. இது சிறிய மட்டத் தண்டும் கிழங்கை கொண்ட குமிழம் உடையது. குமிழமானது 1 செ.மீ நீளமும், 0.5 செ.மீ அகலமும் கொண்டுள்ளது. அதை நாரிழைகள் சுற்றியுள்ளன. இதில் 4 – 9 இலைகள் உள்ளன. இலைகள் 30 – 60 செ.மீ நீளம் வரை வளர்கின்றன. இலைகள் தட்டையானவை.

செடியின் மையத்தில் இருந்து 2 -3 அடி உயரத்திற்கு ஒரு தண்டு உருவாகி, அதில் கொத்தாக பூக்கள் தோன்றுகின்றன. பூக்கள் வெள்ளை நிறம் கொண்டுள்ளது. இதிலிருந்து வீசும் நறுமணம் வண்ணத்துப் பூச்சிகளையும், தேனீக்களையும் கவர்ந்திழுக்கிறது. இவைகள் மூலம் மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது. பூக்கள் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் தோன்றுகின்றன. விதையானது செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் உருவாகின்றன. இதன் விதைகள் கருப்பாக, முக்கோண வடிவத்தில் உள்ளன.

சாகுபடி

பல்வேறு தோட்டங்களில் அழகுக்காக வளர்க்கப்படுகிறது. இதில் பல்வேறு கலப்பு விதைகளும் உள்ளன. பல நாடுகளில் விவசாயம் செய்யப்படுகிறது. இதன் மட்டத்தண்டு குமிழத்தைப் பிரித்தும் சாகுபடி செய்யலாம். இதன் விதைகள் மிக விரைவாக முளைக்கின்றன. ஆகவே விதைகளைப் பயன்படுத்தலாம். விதைகள் வேகமாக பரவி களைச் செடியாகவும் மாறி விடுகின்றன. ஆகவே பூக்கள் தோன்றியவுடன் அதை அகற்றி விடுகின்றனர். இதன் மூலம் களைச் செடிகள் உண்டாவதை தடுக்கலாம். இச்செடிகள் அனைத்து தட்ப வெப்ப நிலைகளிலும் நன்கு வளரக் கூடியவை. ஆகவே இதை எளிதில் வளர்த்து பராமரிக்கலாம். மேலும் ஆஸ்திரேலியாவில் விவசாய களைச் செடியாக பரவியதால், இது பெரும் பிரச்சனையை உண்டாக்கியுள்ளது. அமெரிக்காவில் இதன் விதைகள் சிதறிய இடமெல்லாம் களைகளாக வளர்ந்துள்ளன. இலைகளை வெட்டி எடுக்க எடுக்க புதிய இலைகள் தோன்றிக் கொண்டே இருக்கும்.

சமையல்

சீனாவிலும், ஆசியாவிலும் பல நூற்றாண்டுகளாக சமையலில் பயன்படுத்தி வருகின்றனர். இலையில் வெங்காயச் சுவையும், வெள்ளைப் பூண்டின் மணமும் உள்ளது. ஆகவே வெள்ளைப் பூண்டு மற்றும் வெங்காயத்திற்கு மாற்றாக இதனை சமையலில் சேர்த்துக் கொள்கின்றனர். வெள்ளைப் பூண்டு மற்றும் வெங்காயத்தின் விலை ஏற்றத்தின் போது அவைகளுக்குப் பதிலாக இதன் இலைகளை சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். இலையில் வெங்காயத்தை விட வெள்ளைப் பூண்டின் வாசனையே அதிகம் இருக்கும்.

இதன் குமிழத்தைப் பயன்படுத்துவது கிடையாது. இலைகள் மற்றும் பூ மொட்டுகளை சமையலில் சேர்த்துக் கொள்கின்றனர். இலையை நேரடியாகவும் சாப்பிடலாம். சட்டினி, சாலட், சூப் போன்றவையும் தயாரிக்கின்றனர். இலையை நறுக்கும் போதே வெங்காயம் மற்றும் வெள்ளைப் பூண்டின் வாசம் வீசும். ஆகவே வாசனைக்காகவும், சுவையைக் கூட்டுவதற்காகவும் இதை குழம்பு வகைகளில் சேர்க்கின்றனர்.

சீனாவில் முட்டை, இறால், பன்றி இறைச்சி ஆகியவற்றின் கலவையுடன் பாலாடை தயாரிக்க இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இது ஒரு பொதுவான வாசனை மூலப் பொருளாகும். மேலும் உணவுப் பொருட்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது. மணிப்பூர் மற்றும் இந்தியாவின் பிற வடகிழக்கு மாநிலங்களில் பூண்டு மற்றும் வெங்காயத்திற்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது.

ஜப்பான் நாட்டில் சூப், சாலட் தயாரிக்கவும் இதை பயன்படுத்துகின்றனர். கஜகஸ்தானில் மேண்டி, சாம்சா, யூட்டா மற்றும் பிற வழக்கமான உணவுகளில் சேர்க்கப்படுகிறது. கொரிய உணவு வகைகளில் பரவலாக உபயோகிக்கப்படுகிறது. வறுத்து எடுக்கும் பொருளின் மீது இதை பொடியாக்கி தூவுகின்றனர். நேபாளத்தில் வறுக்கப்படும் உருளை கிழங்கில் இதனைச் சேர்க்கின்றனர். வியட்நாமில் ஒரு குறிப்பிட்ட காய்கறியாகவும் மற்றும் பன்றி இறைச்சி குழம்பிலும் இதைப் பயன்படுத்தகின்றனர். மேலும் விதைகளில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. அதுவும் சமையலுக்குப் பயன்படுகிறது.

மருத்துவ பயன்

இது ஒரு மூலிகை தாவரமாகும். சீனாவில் மிக முக்கியமான மூலிகையாக பல்வேறு நோய்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் சளி மற்றும் காய்ச்சலைக் குணபடுத்தும். பொட்டாசியம், வைட்டமின் கி, இரும்பு, பீட்டா கரோட்டீன், ரிபோபிளாவின் போன்றவை ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகம் உற்பத்திச் செய்கின்றன. மேலும் ரத்த அழுத்தத்தை சீர்படுத்துகிறது. பாக்டீரியா எதிரியாகவும், வாந்தி அடக்கியாகவும், செரிமான ஊக்கியாகவும் செயல்படுகிறது. இரைப்பைக் குடல் வலி நீக்கியாக விதை பயன்படுகிறது. பூச்சிக்கடி, வெட்டுக்காயம், புண் ஆகியவற்றிற்கும் மருந்தாகிறது. சிறுநீரகம் சரியாக இயங்கவும், சிறுநீரகப் பை பலவீனத்தை குணப்படுத்தவும் இதை மூலிகை மருந்தாகத் தருகின்றனர். இந்தியாவில் மேகநோய் தொடர்புடைய நோய்களைக் குணப்படுத்த மூலிகையாகப் பயன்படுத்துகின்றனர்.

ஏற்காடு இளங்கோ


Spread the love