உணவின் இரு பெரிய பிரிவுகள் சைவ உணவும், அசைவ உணவும் இரு உணவுகளில் சிறந்தது எது என்ற சர்ச்சை முடிவு நிலைக்கு வராவிட்டாலும் தற்போதைய நிலைமை என்னவென்றால் அதிகமாக மக்கள் மரக்கறி உணவுக்கு மாறி வருகின்றனர்.
சைவ உணவு
மத கோட்பாடுகள், ஜீவகாருண்யம், பழக்கவழக்கங்களால் பலர் சைவ உணவை உட்கொள்கின்றனர். “தன் உடலை பெருக்குவதற்காக சிறிதும் இரக்கமின்றி பிற உயிரைக்கொன்று அதன் ஊனை தின்கின்றவன், வாழ்க்கையில் எங்ஙனம் அருள் உள்ளவனாக இருக்க முடியும்?” என்று வினவுகிறார் வள்ளுவர் பெருமான் திருக்குறளின் புலால் மறுத்தல் அதிகாரத்தில்.
சைவ உணவு உண்பவர்களிலும் பல பிரிவுகள் உண்டு.
- எந்த வித மிருக உணவையும் தொடாதவர்கள் (பால் உட்பட) இருக்கிறவர்கள்
- மாமிசம், மீன் தவிர, முட்டை, பால், மற்றும் பால் சார்ந்த உணவுகளை உண்பவர்கள்
- இறைச்சி சாப்பிடமாட்டார்கள் ஆனால் மீன், முட்டை உட்கொள்பவர்கள். இவர்கள் வட – இந்தியாவில் அதிகம். ” கங்கா புஷ்பம்” என்று கங்கையின் சுத்த நீர் மீன்களை விரும்பி உண்பவர்கள்!
- சில விலங்குகளின் இறைச்சி மற்றும் அங்கக இறைச்சி (மூளை, போன்றவற்றை) களை ஒதுக்கி விட்டு மட்டன், கோழி இறைச்சிகளுடன் நிறுத்திக் கொள்பவர்கள்.
- பால் சார்ந்த உணவுகளை சேர்த்துக் கொள்பவர்கள் ஆனால் முட்டையைக் கூட தொடாதவர்கள்
சைவ உணவுப் பிரியர்களின் கருத்துகள்
இயற்கையாகவே மனிதன் மாமிச பட்சிணியாக படைக்கப்படவில்லை. அவனது உடல் வாகு தாவிர உணவுகளை உண்பதற்காகவே அமைக்கப்பட்டிருக்கிறது. மாமிசத்தையே உணவாக கொண்டு விலங்குகளுக்கு உள்ள கூரான வலுவான நகங்கள், மாமிசத்தை கிழித்து உண்ண உதவும் கோரைப்பற்கள் மனிதனுக்கு இல்லை. சிங்கம், புலி போன்ற விலங்குகளின் உமிழ் நீர் அமிலத்தன்மை அதிகமானது. உண்ணும் பிராணிகளின் புரதங்களை ஜீரணிக்கவல்லது.
இந்த விலங்குகள் வட்டமான வயிற்றை கொண்டவை. இறைச்சியை ஜீரணம் செய்ய அதிக அளவில், வீர்யமான ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை சுரக்க வல்லவை. சிறிய குடலை உடையவை. இதனால் ஜீரணத்திற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் குறைவு. தவிர இவற்றின் கல்லீரல், அதிகமாக சுரக்கும் யூரிக் அமிலத்தை சமாளிக்க வல்லது.
மனிதன் கடவாய் பற்கள் தாவிர உணவுக்கே ஏற்றவை. மனிதனின் உமிழ்நீர் காரத்தன்மை உள்ளது. தாவிர புரதத்தை ஜீரணிக்க ஏற்றது. மிருக புரதங்கள் உண்டாக்கும் அதிக யூரிக் அமிலத்தை மனிதனின் கல்லீரல் சமாளிக்க முடியாமல் போகலாம். அதிக யூரிக் அமிலம் படிகங்களாக மூட்டுகளில் தேங்கி கௌட் என்ற வலியுடன் கூடிய மூட்டு நோயை உண்டாக்கும்.
சிங்கம், புலி போன்றவற்றை விட மனிதனின் குடல் நீளமானது. தாவிர உணவுகளை உண்டு வாழும் மிருகங்களை விட மாமிசம் உண்ணும் மிருகங்களுக்கு குடல் சிறியதாக இருக்கிறது. ஜீரணத்திற்கு பின் உருவாகும் சக்கைகள், கழிவுகள் எல்லாம் குடலில் தான் வந்து தங்கும். மரக்கறி உணவுகள் சீக்கிரம் கெடுவதில்லை. எனவே அவை நீளமான குடலில் சில நாள்கள் வெளியேற்றப்படாமல் தங்கினாலும் பாதகமில்லை. ஆனால் மாமிசம் சீக்கிரம் அழுகி கெட்டு விடும். பல விஷங்களை உண்டாக்கும். புலி, சிங்கங்கள் போன்றவற்றின் குடல் சிறியதாக இருப்பதால் சீக்கிரமாக சக்கை, கழிவுப்பொருட்கள் வெளியேறுகின்றன. ஆனால் நீட்டமான மனிதனின் குடல் மாமிச உணவுக்காக உபயோகப்படுத்தப்பட்டால் மாமிச கழிவு சக்கை சீக்கிரம் வெளியேறாமல் விஷமாக மாறும். ஆரோக்கியம் கெடும்.
· சைவ உணவு மலிவானது, மென்று சாப்பிட எளிது. பற்கள் இல்லாது போனாலும் சைவ உணவை சாப்பிடலாம்.
· புலி, சிங்கம் போன்ற விலங்குகள் புல்லை தின்னும் மான் போன்றவற்றையே உண்கின்றன. ஒநாய், கரடி, கரி போன்ற இதர மாமிச பட்சிணிகளை விரும்பி உண்பதில்லை.
· மாமிச புரதத்தை ஜீரணிப்பது கடினம்.
· சைவ உணவில், அசைவ உணவை விட, கொழுப்புகள், கொலஸ்ட்ரால் குறைவு. கொழுப்புகள் அதிகமிருந்தால் அதீத பருமன், இதய நோய்கள், உயர்ரத்த அழுத்தம், நீரிழிவு, புற்று நோய்கள் உண்டாகலாம். சைவ கொழுப்பை விட அசைவ கொழுப்பு கெடுதலானது. பல்வேறு வியாதிகளை உண்டாக்கும்.
· சைவ உணவு உண்பவர்களுக்கு மார்பக புற்றுநோய், சுக்கில வலகம் மற்றும் இதர புற்றுநோய்கள் பாதிக்கும் வாய்ப்புகள் குறைவு.
· பல தாவிர உணவுகளை பச்சையாக உண்ண முடியும்.
அசைவ உணவுப பிரியர்களின் கருத்து
· சைவமானாலும் சரி, அசைவமானாலும் சரி, ஜீரணிக்கப்படும் அனைத்து உணவுகளையும் உண்பது ஆரோக்கியமானது தான். இறைச்சியை சமைத்துத் தானே சாப்பிடுகிறோம் என்கின்றனர் அசைவர்கள்!
· அசைவ உணவுகளில் தான் முழுமையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. இரும்புச்சத்து லிவர், சிவப்பு மாமிசம், முட்டைக்கரு முதலிய அசைவ உணவுகளில் அபரிமிதமாக இருக்கிறது. முக்கிய வைட்டமின்னான வைட்டமின் H – 12, அசைவ உணவுகளிலிருந்தே கிடைக்கிறது. வைட்டமின் ‘டி‘ யும் சைவ உணவுகளில் அதிகம் இல்லை.
· சரகசம்ஹிதையில் 12 வகை உணவுகள் விவரிக்கப்படுகின்றன. இவற்றில் மாமிச உணவும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
கீதையில் கிருஷ்ண பகவான் உணவை மூன்று வகையாக பிரித்துச் சொல்கிறார். ஸாத்விக உணவு மனதை ஈர்க்கும். நற்சுவையோடு, ஆரோக்கியத்தை வளர்க்கும். ரஜோகுண உணவு காரம், உப்பு, புளிப்பு நிறைந்தவை. நோய், மனக்கலக்கத்தை உண்டாக்கும். தமோகுண உணவுகள் சமைத்து வெகுநேரமாக வைக்கப்பட்டவை, துர்வாசனை உடையவை. மனதிற்கு ஏற்றவை அல்ல. சாத்விக உணவு பெரும்பாலும் சைவ உணவை குறிக்கும். பெயருக்கேற்ற உண்பவர்களின் சாத்வீக நற்குணங்களை வளர்க்கும்.
சைவ உணவு உண்பவர்கள் கவனிக்க வேண்டியது
- உண்ணும் சைவ உணவு, பல பொருட்களின் கலவையாக இருக்க வேண்டும். உடலுக்கு தேவையான கலோரிகள் நிறைந்திருக்க வேண்டும். பலவகை, விதம் விதமான காய்கறி, பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- முளை கட்டிய தானியங்களை உபயோகியுங்கள்.
- முடிந்தால் கைக்குத்தல் அரிசியை பயன்படுத்தவும்.
- இனிப்புகளையும் கொழுப்பு செறிந்த உணவுகளையும் தவிர்க்கவும்.
- சில உணவுகளை சேர்த்து உண்பதால் பலன் அதிகம். உதாரணமாக பீன்ஸையும், அரிசியையும் (சாதத்தையும்) சேர்த்து உண்டால் முழுமையான புரதம் கிடைக்கும். தனித்தனியாக இந்த உணவுகளை உண்டால் தேவையான அளவு புரதம் கிடைக்காது.
- சோயா, சோயா சார்ந்த உணவுகளை அதிகம் உட்கொண்டால் சைவ உணவின் ஊட்டச்சத்து குறைபாடுகள் இருக்காது என்கின்றனர் உணவு நிபுணர்கள். தற்போது பல வகைகளில் சோயா கிடைக்கிறது. அசைவ உணவுகளுக்கு நிகரான சத்துக்கள் சோயாவில் இருக்கின்றன.
அசைவ உணவு உண்பவர்கள், உயர்ரத்த அழுத்தம், அதிஸ்தூலம் இதய நோய் இவற்றால் பாதிக்கப்பட்டால் கட்டாயம் அசைவ உணவுகளை குறைக்க வேண்டும்.
சைவ உணவை உண்டாலும் சரி, அசைவ உணவை உண்டாலும் சரி, நாம் கவனிக்க வேண்டியது நமது உணவு எல்லா சத்துக்களும், சரியான அளவுகளில் உள்ள சமச்சீர் உணவுதானா என்பது வயதாக வயதாக, அசைவ உணவிலிருந்து சைவ உணவுக்கு மாறுவது நல்லது.
உணவு நலம் ஜுலை 2010
சைவ உணவும், அசைவ உணவும், ஒரு, ஒப்பீடு, மத கோட்பாடுகள், ஜீவகாருண்யம், மாமிசம், மீன், முட்டை, கங்கா புஷ்பம், மூளை, மட்டன், கோழி, வீர்யம், ஹைட்ரோ குளோரிக், கல்லீரல், யூரிக் அமிலம், மூட்டு நோய், குடல், கொழுப்புகள், கொலஸ்ட்ரால், அதீத பருமன், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய், வியாதி, மார்பக புற்றுநோய், சுக்கில வலகம்,
வைட்டமின், பி, சரகசம்ஹிதை,