பச்சைக் சாறு பண்டுவம்

Spread the love

முற்றிலுமாகப் பழச்சாறுகள் மற்றும் பச்சைக் காய்கறிச் சாறுகளை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுகின்ற பண்டுவத்தை பச்சைச் சாறு பண்டுவம் என்கிறார்கள். உண்ணா நோன்பு என்று குறிப்பிடுவது போல இதைப் பழச்சாறு நோன்பு என்றும் சிலர் சொல்கிறார்கள்.

இந்தப் பச்சைச் சாறு பண்டுவத்தின் போது உடலுறுப்புகளின் கழிவு நீக்கும் திறனும் தூய்மைப்படுத்தும் வலிவும் அதிகரிப்பதுடன், நச்சுப் பொருள் வெளியேற்றமும் விரைந்து நடக்கிறது. நுரையீரல், ஈரல், சிறுநீரகங்கள் போன்றவற்றின் செயல்பாடு எளிதாக்கப்பட்டு செயல்திறன் கூடுகிறது. செரிமான உறுப்புகளுக்குத் தேவையான ஓய்வு கிடைக்கிறது. ஒரு வார கால பச்சைச் சாறு பண்டுவத்திற்குப் பிறகு இரைப்பையின் செரிமானத் திறன் பன்மடங்கு உயர்வது கண்கூடு.

“உணவு மறுத்தலின் போது உடலில் உள்ள கழிவுகள் எரிந்து போவதுடன் விரைந்து வெளியேற்றவும் பயன்படுகின்றன. இந்த நிலையில் காரகுணம் கொண்ட பழச்சாறு, காய்கறிச்சாறுகள் உடலுறுப்புகளின் திறமையான செயல்பாட்டிற்கு உதவுகின்றன. பழங்களிலுள்ள பழச்சர்க்கரை இதயத்தை வலுப்படுத்துகிறது. காய்கறிச் சாறுகள் யூரிக் அமிலம் மற்றும் கனிம அமிலங்களையும் வெளியேற்ற உதவுகின்றன” என்கிறார் டாக்டர் பெர்க் என்னும் உலகப்புகழ் பெற்ற அறிவியலாளர்.

தாவரங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றிலிருந்து பிழிந்து எடுக்கப்படும் சாறுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனி மருத்துவ குணம் கொண்டவையாகும். பச்சைச் சாறு பண்டுவ முறையைக் கடைப்பிடிக்க முயலும் முன் சில எச்சரிக்கைகள். எல்லாச் சாறுகளும் அருந்தப்படுவதற்குச் சிறிது முன்பு தான் பிழியப்பட வேண்டும். புதிய காய்கறிகள், கீரைகள், பழங்கள் மட்டுமே சாறு எடுக்கப் பயன்படுத்தப்பட வேண்டும். ஐஸ்பெட்டியில் வைத்த சாறுகள் தவிர்க்கப்பட வேண்டும். குடிப்பதற்குத் தேவையான அளவு மட்டுமே சாறு எடுக்கப்பட வேண்டும். இலை, காய்கறிச் சாறுகளும் பழச்சாறுகளும் மீதம் வைக்கப்பட்டால் விரைவில் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து தமது மருத்துவ குணங்களை இழந்து விடுகின்றன. சாறுகளின் தரத்தைப் பொருத்தே பண்டுவம் அமைகிறது. சாறு முற்றிலுமாக எடுக்கப்படுவதுடன் மிகவும் தித்திப்பாகவோ, கசப்பாகவோ இருந்தால் (1:1) சரியளவு தண்ணீர் சேர்க்கப்பட வேண்டும்.

பொதுவாகப் பழச்சாறுகள் உடலில் பொதிந்து கிடக்கும் நச்சுப் பொருள்களைக் கிளறி வெளியேற்றி விடுகின்றன. இதற்கு மாறாக காய்கறி, கீரைச்சாறுகள் நரம்புகளை இதமாக தடவி அமைதிப்படுத்தித் தசைகளுக்கு ஓய்வு தருகின்றன. இவைகளின் எதிரெதிரான குணங்களால் பழச்சாற்றையும், காய்கறிச்சாற்றையும் ஒரே வேளையில் உட்கொள்ளக் கூடாது. தனித்தனியே காலையும், மாலையும் உட்கொள்ளலாம். தேவைப்பட்டால் இரண்டு பழச்சாறுகளைக் கலந்து கொள்ளலாம்.

பண்டுவ முறைகள்

பச்சைச் சாறுகளை 6 வகையாகப் பிரிக்கலாம்.

இனிப்பு மிக்க பழச்சாறுகள்

திராட்சை/ மா/ வாழை/ சீதா/ பப்பாளி/ சப்போட்டா.

மித அமிலப் பழச்சாறுகள்

ஆப்பிள்/கொய்யா/பேரி/வெள்ளரிப்பழம்

அதிக அமிலப் பழச்சாறுகள்

ஆரஞ்சு/நாரத்தை/எலுமிச்சை/சாத்துக்குடி/அன்னாசி/தக்காளி

காய்கறிச்சாறுகள்

வெள்ளரி/பூசணி/பாகல்/புடலை/பீர்க்கு

கீரைச்சாறுகள்

அருகம்புல்/முளைக்கீரை/முட்டைக்கோஸ்/செலரி/லெட்டூஸ்/பசலை/வல்லாரை.

வேர் சார்ந்த காய்கறிச் சாறுகள்

கேரட்/பீட்ரூட்/முள்ளங்கி/வெங்காயம்

இனிப்புச் சுவை கொண்ட பழச்சாறுகளை மித அமிலப்பழச்சாறுகளுடன் கலக்கலாம். ஆனால் அதிக அமிலச் சாறுகளுடனோ காய்கறிச் சாறுகளுடனோ கலக்கக் கூடாது.

மித அமிலப் பழச்சாற்றை இனிப்பு அல்லது அதிக அமிலப்பழச்சாற்றுடன் கலக்கலாம்.

அதிக அமிலப் பழச்சாற்றை காய்கறிச் சாறுகளுடன் கலக்கலாம்.

குறிப்பிட்ட வகையான சாறுகள் குறிப்பிட்ட நோய்களுக்காக சாப்பிடப்படுவதால் சாறுகளை நோய்களுக்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏப்பம்/பொருமல்/அஜீரணம்

திராட்சை/ஆரஞ்சு/சாத்துக்குடி/முளைக்கீரை/பப்பாளி சாறுகளிலிருந்து தேர்ந்து கொள்க.

ஒவ்வாமை (அலர்ஜி)

கேரட்/பீட்ரூட்/திராட்சை/ஏப்ரிகாட்

சோகை

கேரட்/பீட்ரூட்/கருப்பு திராட்சை/மாதுளை

மூட்டுவலி

செர்ரி/அன்னாசி/ஆப்பிள்/எலுமிச்சை/விளா

குடற்புண்

முள்ளங்கி கீரை/முட்டைகோஸ்/பசலை

வயிற்றோட்டம்

பப்பாளி/அன்னாசி/கேரட்/செலரி

மலச்சிக்கல்

கொய்யா/திராட்சை

நீரிழிவு

நாவல்பழம்/குறிஞ்சாக் கீரை/பாகற்காய்

சிறுநீர்க்கோளாறு

எலுமிச்சை/ஆரஞ்சு/வெள்ளரி/வாழைத்தண்டு/நாரத்தை

உயர் இரத்த அழுத்தம்

கேரட்/பீட்ரூட்/வெள்ளரி/திராட்சை/ஆரஞ்சு

பச்சைக் சாறுக் பண்டுவம் செய்கின்ற போது ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை இச்சாறு பருக வேண்டும். நாள் ஒன்றுக்கு மூன்று முறை பருகலாம்.


Spread the love