தக்காளி சூப்
தக்காளி, பூண்டு, இஞ்சி, வெங்காயம், மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதித்த உடன் மிக்ஸியில் இட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதன் மேல் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்துக் கொள்ள தக்காளி சூப் அருமையாக, சுவையாக இருக்கும்.
முருங்கைக்காய் சூப்
நீளமாகவும், குறுக்காகவும் வெட்டிய முருங்கைக்காய் துண்டுகளை சிறிதளவு பாசிப்பயறு, தக்காளி பழங்கள் கலந்து வேக வைக்கவும். வெந்த பின்பு மத்து மூலம் அல்லது மிக்ஸி உதவி கொண்டு கடைந்து தண்ணீர் சேர்த்து கொத்தமல்லி இலை, சீரகப்பொடி கலந்து மீண்டும் சூடுபடுத்தவும். சுவைக்காக சூப்புகளில் உப்பு சேர்ப்பது உங்களது விருப்பமாகும்.
காலி பிளவர் சூப்
முருங்கைக்காய் சூப் தயாரிப்பது போலவே செய்து கொள்வதுடன், கடையக் கூடாது என்பது ஒன்று தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
காய்கறிகள் கலந்த சூப்
எல்லாக் காய்கறிகளையும் சிறுசிறு துணடுகளாக வெட்டிப் போட்டுக் கொள்ளவும். தக்காளிப் பழங்கள், இஞ்சி, கறிவேப்பிலை, வெங்காயம், ஒரு உருளைக்கிழங்கு முதலியவற்றையும் சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டுக் கொள்ளவும். போதுமான அளவு நீர் சேர்த்துக் கொண்டு முன்பு வெட்டி தயாரித்து வைத்துள்ள அனைத்தையும் கொதிக்க வைக்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொண்டு மிளகுத்தூள், சீரகத்தூள், கொத்தமல்லி இலைகள் முதலியவற்றைக் கலந்து மீண்டும் அடுப்பில் ஏற்றி சூடுபடுத்தவும். ஒரு கொதி நிலை வந்ததும் இறக்கி உடனே மிதமான சூட்டில் அருந்தலாம்.
கீரை சூப்
மணத்தக்காளி, முருங்கை போன்ற கீரைகளைச் சுத்தம் செய்து தூள் தூளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தக்காளி, பூண்டு, மிளகு, சீரகம், இஞ்சி, வெங்காயம் எல்லாவற்றையும் சரியான அளவு எடுத்து அனைத்தையும் வேக வைக்கவும். வெந்த பின்பு மத்து உதவி அல்லது மிக்சி உதவி கொண்டு கடைந்து கூழ் பதத்தில் தயாரித்து தனியே வைக்கவும்.
நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி கடாயில் விட்டு வெங்காயம், கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து சூப் கலவையில் மேல் சேர்த்துக் கொள்ளவும். சூப்புகள் சிறிது கெட்டியாக இருக்க வேண்டும் எனில் சிறிது உருளைக்கிழங்கையும் சேர்த்து வேக வைக்க வேண்டும். மேற்கூறிய சூப்புகள் அனைத்தும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மதிய உணவில் வீட்டில் ரசம் ஊற்றிச் சாப்பிடுவதற்குப் பதிலாக சூப் ஊற்றிச் சாப்பிடுவது கூடுதல் பலன் தருகிறது.