வெஜிடபிள் கூட்டு

Spread the love

தேவை

ஏதாவது ஒரு காய் – 1/4 கிலோ

(சவ்சவ், வெள்ளரிக்காய், பீன்ஸ், கேரட், புடலங்காய் அல்லது பீர்க்கங்காய்)

தேங்காய்த்துருவல் – 1/2 கப்

பாசிப்பருப்பு – 1 கைப்பிடி

அரிசி – 1 டீஸ்பூன்

மிளகு – 10-12

தாளிக்க

எண்ணெய் – 1 டீஸ்பூன்

கடுகு – சிறிது

சீரகம் – சிறிது

சிவப்பு மிளகாய் – 2

கறிவேப்பிலை – சிறிது

செய்முறை

மேற்கூறிய காய்களில் ஏதாவது ஒரு காய் எடுத்துக் கொள்ளவும். அந்தக் காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அரிசியை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை கழுவி ஊற வைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். காயை சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும். அதனுடன் வேக வைத்த பருப்பு, அரிசி மாவு, தேங்காய் துருவல், மிளகு, உப்பு சேர்த்து அடுப்பைக் குறைத்து வேக வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, சீரகம், சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து கூட்டில் ஊற்றவும். இந்த கூட்டில் உள்ள மிளகு ஜீரண சக்தியைத் தூண்டும். தேங்காய் சிறந்த சக்தியையும், காய்கள் மினரல் சத்துக்களையும், பருப்பு புரோட்டீனையும் தருகிறது.

கொள சாறு

தேவை

கொள்ளு – 1/2 கப்

பாசிப்பயறு – 1/2 கப்

கொண்டைக்கடலை – 1/2 கப்

புளி – நெல்லிக்காயளவு

சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

கடுகு – சிறிது

சீரகம் – சிறிது

பூண்டு – 2 பல்

கறிவேப்பிலை – சிறிது

செய்முறை

கொள்ளு, பாசிப்பயறு, கொண்டைக்கடலை முதலியவற்றை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு வெறும் வாணலியில் மூன்றையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். இந்த புளி விழுதுடன் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து, அரைத்து வைத்துள்ள பவுடரில் 3 டேபிள் ஸ்பூன் சேர்த்து, உப்பு, சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும். ஓரளவு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, பூண்டு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து ஊற்றவும். இந்தக் குழம்பு கேழ்வரகு கூழுக்கு ஏற்றதாகும். இது பொதுவாக குளிர்காலங்களில் செய்யப்படும் உணவாகும். இதில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது. இதில் உள்ள பூண்டு ஜீரணத்திற்கு உதவுகிறது.

ஹிராலே காயி ஊறுகாய்

தேவை

நார்த்தங்காய் – 3

உப்பு – 4 டீஸ்பூன்

மிளகாய் பொடி – 2 டீஸ்பூன்

மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்

கடுகு பொடி – 1/2 டீஸ்பூன்

பெருங்காயம் – 1 டீஸ்பூன்

வெந்தயப்பொடி – 1/2 டீஸ்பூன்

கடலை எண்ணெய் – 3 டே.ஸ்பூன்

செய்முறை

நன்கு பழுத்த நார்த்தங்காய்களை வாங்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். விதைகளை எடுக்க வேண்டாம். இதனுடன் 4 டீஸ்பூன் உப்பு சேர்த்து சில தினங்கள் ஊற விடவும். நன்கு ஊறிய பின் அதில் சிவப்பு மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, வெந்தயப் பொடி, கடுகு பொடி, சிறிது பெருங்காயம் சேர்த்து நன்கு கிளறி 2-3 நாட்கள் அப்படியே வைக்கவும். மூன்று நாட்களுக்கு பிறகு கடலை எண்ணெய்யை சூடாக்கி அதில் சிறிது பெருங்காயம் போட்டு தாளித்து ஊறுகாயில் ஊற்றவும். இந்த ஊறுகாய் உண்ட உணவு ஜீரணமாவதற்கும் உதவுகிறது. விட்டமின் – சி சத்து நிறைந்தது.

தம்பிட்டு

தேவை

அரிசி மாவு – 300 கிராம்

வெல்லம் – 150 கிராம்

தேங்காய் துருவல் – 1 கப்

ஏலக்காய் – 3

நெய் – சிறிது

செய்முறை

பச்சரிசியை கழுவி நிழலில் ஒரு துணியில் உலர்த்தவும். பின்னர் இந்த அரிசியை மாவாக அரைத்துக் கொள்ளவும். வெல்லத்தை தூளாக செய்து கொண்டு அதனுடன் அரிசி மாவு, தேங்காய்த்துருவல், ஏலக்காய், நெய் சேர்த்து உருண்டைகளாக பிடிக்கவும்.

அகேஸ் சொப்பின பல்யா

தேவை

துவரம் பருப்பு – 100 கிராம்

அகத்திக் கீரை – 1 கட்டு

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

கடுகு – 1/2 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் – 3

பெருங்காயம் – சிறிது

தேங்காய்த்துருவல் – 1 கப்

செய்முறை

துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். இதனுடன் அகத்திக் கீரை, உப்பு சேர்த்து வேக வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, மிளகாய், பெருங்காயம் போட்டு தாளித்து கீரையில் ஊற்றவும். தேங்காய்த்துருவல் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். அகத்திக் கீரை ஏகாதேசிக்கு மறுநாள் உண்ணப்படும். இந்தக் கீரை உடலின் பித்தத்தைக் குறைத்து, குளிர்ச்சி தரக் கூடியது.


Spread the love