காய்கறி ஜுஸ்

Spread the love

கேரட் ஜுஸ்

தேவையான பொருட்கள்

கேரட்             –4

தேங்காய் கீற்று    –2

வெல்லம் (அ) சீனி -தேவையான அளவு

தேன்              –2டே.ஸ்பூன்

ஐஸ் க்யூப்ஸ்      -சிறிது

புதினா இலை      –4

எலுமிச்சம் ஜுஸ்  –1டீஸ்பூன்

செய்முறை

கேரட்டை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெல்லம் சேர்ப்பதென்றால் வெல்லத்தை துருவிக் கொள்ளவும். மிக்ஸியில் தேங்காய், கேரட், சீனி (அ) வெல்லம், ஐஸ் க்யூப்ஸ் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதனை வடிகட்டி ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி அதனுடன் தேன், எலுமிச்சம் ஜுஸ் சேர்த்து புதினா இலைகளைத் தூவி பருகவும்.

கேரட்டை அதிக அளவில் சேர்த்துக் கொள்வது புற்றுநோய் வரும்

வாய்ப்பைக் குறைக்கிறது. கண்பார்வைக் கோளாறுகளை சரி செய்கிறது. மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.

முட்டைகோஸ் ஜுஸ்

தேவையான பொருட்கள்

முட்டைகோஸ்   –100கிராம்

உப்பு             -தேவையான அளவு

சீரகத்தூள்        –1/4டீஸ்பூன்

மிளகுத்தூள்      –1சிட்டிகை

கொத்தமல்லி இலை-சிறிது

செய்முறை

முட்டைகோஸை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மிக்ஸியில் நறுக்கிய முட்டைகோஸ், அரை கப் தண்ணீர், கொத்தமல்லி இலை சேர்த்து அரைக்கவும். அரைத்ததை வடிகட்டி ஒரு க்ளாஸில் ஊற்றி உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள் சேர்த்து, கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கி சிறிது தூவி தேவையென்றால் ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து பருகவும்.

இந்த ஜுஸை தொடர்ந்து குடித்து வந்தால் வயிற்றில் உள்ள அல்சர் நோய் குணமாகும்.

பீட்ரூட் ஜுஸ்

தேவையான பொருட்கள்

பீட்ரூட்          –1

எலுமிச்சம் ஜுஸ்-2டீஸ்பூன்

உப்பு            –1சிட்டிகை

சீனி            -தேவையான அளவு

மிளகுத்தூள்     -சிறிது

புதினா இலை   –4

செய்முறை

பீட்ரூட்டை தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். மிக்ஸியில் பீட்ரூட், 1/2 கப் தண்ணீர், சீனி, உப்பு சேர்த்து அரைக்கவும். அரைத்ததை வடிகட்டி ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி எலுமிச்சம் ஜுஸ், மிளகுத்தூள், ஐஸ் க்யூப்ஸ் சேர்க்கவும். கடைசியாக புதினா இலைகளைத் தூவி பருகவும்.

பீட்ரூட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், மூலநோய் முதலிய நோய்கள் குணமாகின்றன.

வெள்ளரிக்காய் ஜுஸ்

தேவையான பொருட்கள்

வெள்ளரிக்காய்    –1

பச்சைமிளகாய்    -பாதி

தயிர்             –1கப்

பெருங்காயம்     -சிறிது

மாங்காய்         –2துண்டு

இஞ்சி            –1/2இன்ச்

உப்பு             -தேவையான அளவு

கொத்தமல்லி     -சிறிது

செய்முறை

வெள்ளரிக்காய், இஞ்சி, மாங்காய் முதலியவற்றின் தோலை சீவி நறுக்கிக் கொள்ளவும். மிக்ஸியில் வெள்ளரிக்காய், இஞ்சி, பச்சைமிளகாய், தயிர், பெருங்காயம், மாங்காய், உப்பு, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும். வெள்ளரிக்காயில் விதைகள் இருந்தால் எடுத்து விடவும். அரைத்ததை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி கொத்தமல்லி தூவி பருகலாம்.

வெள்ளரிக்காயை சமைக்கும் போது அதிலுள்ள சத்துக்கள் அழிந்து விடுகின்றன. ஆதலால் வெள்ளரிக்காயை கூடுமான வரை பச்சையாக சாப்பிடுவது நல்லது. வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சியை தரக் கூடியது.

தக்காளி ஜுஸ்

தேவையான பொருட்கள்

பெங்களூர் தக்காளி   –3

இஞ்சி               –1சிறுதுண்டு

சீனி (அ) உப்பு       -தேவையான அளவு

ஐஸ் க்யூப்ஸ்       -சிறிது

செய்முறை

தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். மிக்ஸியில் தக்காளி, இஞ்சி, சீனி, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து அரைக்கவும். அரைத்ததை வடிகட்டி ஒரு கிளாஸில் ஊற்றி பருகவும். நீரிழிவு உள்ளவர் என்றால் சீனியை தவிர்த்து தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.

தக்காளி அதிகம் சாப்பிடுபவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது என்று ஒரு மருத்துவ பல்கலைக் கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பாகற்காய் ஜுஸ்

தேவையான பொருட்கள்

பாகற்காய்       –1

எலுமிச்சம் ஜுஸ் –2டீஸ்பூன்

உப்பு             -தேவையான அளவு

சீரகப்பொடி       –1/4டீஸ்பூன்

மிளகுப்பொடி     –1/4டீஸ்பூன்

கொத்தமல்லி     -சிறிது

செய்முறை

பாகற்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். அதனுடன் எலுமிச்சம் ஜுஸ், உப்பு, சீரகப்பொடி, மிளகுப்பொடி சேர்த்து நன்கு கலக்கி கொத்தமல்லி தூவி பருகவும்.

பாகற்காய் ஜுஸ் தினசரி குடிப்பதால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைகின்றது என்று நவீன மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நாட்பட்ட தோல் நோய்கள் குணமாகின்றன.

பூசணிக்காய் ஜுஸ்

தேவையான பொருட்கள்

பூசணிக்காய்  –1கீற்று

தேன்         –2டே.ஸ்பூன்

புதினா இலை -சிறிது

மிளகுத்தூள்   –1/4டீஸ்பூன்

சீனி          -தேவையான அளவு

செய்முறை

பூசணிக்காயை தோலை சீவி விதைகளை அரைத்துக் கொள்ளவும். அதனுடன் தேன், சீனி, புதினா இலை, மிளகுத்தூள் சேர்த்து தேவையென்றால் ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து பருகவும். இனிப்பு சேர்க்காதவர் என்றால் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

பூசணிக்காய் அடிக்கடி சேர்ப்பதால் அதிக எடை உள்ளவர்களுக்கு எடை குறைகிறது. உடம்பின் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தருகிறது.

மாங்காய் ஜுஸ்

தேவையான பொருட்கள்

மாங்காய்     –1

புதினா இலை –6

சீரகத்தூள்     –1/4டீஸ்பூன்

மிளகுத்தூள்   –1/4டீஸ்பூன்

உப்பு          -தேவையான அளவு

சீனி           –1டீஸ்பூன்

கொத்தமல்லி  -சிறிது

செய்முறை

மாங்காயை தோலை சீவி துண்டுகளாக நறுக்கவும். மாங்காயுடன் புதினா, சிறிது நீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். வெந்ததை நன்கு மசித்துக் கொண்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு, சீரகத் தூள், மிளகுத் தூள், சீனி சேர்த்துக் கலந்து கொத்தமல்லி தூவி பருகவும்.

மாங்காய் ஒரு சிறந்த கிருமி நாசினி. மாங்காயை அடிக்கடி சேர்த்துக் கொள்வது வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கிறது.

முள்ளங்கி ஜுஸ்

தேவையான பொருட்கள்

முள்ளங்கி   –2

உப்பு        -தேவையான அளவு

சீரகத்தூள்   –1/4டீஸ்பூன்

கொத்தமல்லி- சிறிது

எலுமிச்சம் ஜுஸ்-2டீஸ்பூன்

செய்முறை

முள்ளங்கியை தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். முள்ளங்கி, கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அதனுடன் உப்பு, சீரகத்தூள், எலுமிச்சம் ஜுஸ் சேர்த்துப் பருகவும். முள்ளங்கியை அடிக்கடி சேர்ப்பதால் உடல் எடை குறையும். சிறுநீரக கற்கள் கரையும்.

வாழைத்தண்டு ஜுஸ்

தேவையான பொருட்கள்

வாழைத்தண்டு  –1

சீரகத்தூள்       –1/4டீஸ்பூன்

உப்பு            -தேவையான அளவு

கொத்தமல்லி    -சிறிது

செய்முறை

வாழைத்தண்டை நறுக்கி அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். அதனுடன் உப்பு, சீரகத்தூள் சேர்த்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

வாழைத்தண்டை அடிக்கடி சேர்ப்பதால் சிறுநீரகக் கற்கள் கரைகின்றது. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் நீங்குகிறது.

சுரைக்காய் ஜுஸ்

தேவையான பொருட்கள்

சுரைக்காய் சிறியது –1

நெல்லிக்காய்       –2

புதினா இலை      –10

இஞ்சி             –1துண்டு

எலுமிச்சம் ஜுஸ்  –2டே.ஸ்பூன்

சீரகம்             –1/4டீஸ்பூன்

கறுப்பு உப்பு       -சிறிது

உப்பு              -தேவையான அளவு

ஐஸ் க்யூப்ஸ்     -சிறிது

செய்முறை

சுரைக்காயை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நெல்லிக்காயை கொட்டையை எடுத்து விட்டு நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியின் தோலை சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்  கொள்ளவும். ஒரு மிக்ஸியில் சுரைக்காய், நெல்லிக்காய், புதினா இலை, இஞ்சி, சீரகம், கறுப்பு உப்பு, உப்பு, ஐஸ் க்யூப்ஸ் முதலியவற்றைச் சேர்த்து நன்கு அரைத்து கடைசியாக எலுமிச்சம் ஜுஸைச் சேர்த்து பரிமாறவும்.


Spread the love