வாழைப்பூ ஓர் வரப்பிரசாதம்!

Spread the love

பூக்கள் என்றாலே நம் மனதில் ஒருவித மகிழ்ச்சி தான். நறுமணத்தை தரக்கூடியதாகவும், பெண்கள் அவற்றை சூடினால் அவர்களின் அழகை மெருகூட்டி காட்ட கூடிய பொருளாகவும் உள்ளது. இவ்வளவு பயன்கள் இருந்தாலும் நம் உடலை பாதுகாக்க கூடியதாகவும் உள்ளது. நம் ஆயுளை அதிகரிக்க வைக்கும் பூக்களுள் மிக முக்கியமானதாக இந்த வாழைப்பூ உள்ளது.

வாழைப் பூவின் பயன்கள்

இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே பாதிக்க கூடிய ஒரு பெரிய நோய் தான் சர்க்கரை நோய். இந்த நோய் உள்ளவர்கள் வாழைப் பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி, அத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகாய் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால், கணையத்தை வலு பெற செய்து உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்க செய்து, சர்க்கரை நோயை கட்டுபடுத்துகிறது.  சிலருக்கு மலம் கழிக்கும் போது இரத்தம் வெளியேறும். இந்த நோய் உள்ளவர்கள் வாரம் ஒரு முறை வாழைப்பூவை உணவில் சேர்த்து வந்தால் இது விரைவில் குணமாகிவிடும்.

சிலருக்கு பிறந்ததில் இருந்து உடல் சூடு இருக்கும். சிலருக்கு கோடை காலத்தில் ஏற்படும் உடல் சூடு ஆகியவற்றை குறைக்க வாழைப்பூவுடன் பாசிப்பருப்பை சேர்த்து கடைந்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வரலாம்.

சீதபேதி மற்றும் வாய் நாற்றம் உள்ளவர்கள் வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும். இவை அனைத்தும் படிப்படியாக குறைய தொடங்கும்.

பெண்களுக்கு இந்த வாழைப்பூ  ஒரு வரபிரசாதமாகும். பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில், அதிக உதிரப்போக்கு உண்டாகும். அந்த காலங்களில் வாழைப்பூவில் உள்ள வெள்ளை பாகத்தை நசுக்கி சாறு பிழிந்து அதனுடன் மிளகு சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் இரத்த போக்கு கட்டுப்படும். மாதவிடாய் காலத்தில் வயிற்று வலியும் குறைய தொடங்கும்.

இதேபோல் பெண்களுக்கு ஏற்படும் மற்றொரு பிரச்னை வெள்ளைப்படுதல் ஆகும். இதனால் உடல் எடை குறையவும் அதிக வாய்ப்புள்ளது. எனவே இந்த பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பூவை ரசம் செய்து சாப்பிட்டு வர வெள்ளைபடுதல் குறைவதோடு வறட்டு இருமலும் குறைய தொடங்கும்.

கை, கால் வலி உள்ளவர்கள் வாழைப் பூவை இடித்து சாறு பிழிந்து அதனுடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து வலி உள்ள இடத்தில் தேய்த்து, சுடு நீரால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

குழந்தையின்மையால் அவதிபடுவர்களுக்கு இது ஒரு வரமாகும். ஏனென்றால், மலட்டுத்தன்மை உள்ளவர்கள் அடிக்கடி வாழைப்பூவை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் குழந்தைப்பேறு கிடைக்கும். நம் குலம் தழைக்க, குலைத்தள்ளும் வாழையின் பூவை உண்டு வந்தாலே போதும்.

வாழைப்பூ கஞ்சி

தேவையான பொருட்கள்

வாழைப்பூ இதழ்            15

இஞ்சி (துருவியது)          ஒரு தேக்கரண்டி

சீரகம்                   –       ஒரு டீஸ்பூன்

அரிசி                   –        கால் கப்

பாசிப்பருப்பு             –   2 டீஸ்பூன்

சின்ன வெங்காயம்      –  6 (நறுக்கியது)

தக்காளி                –        1 (நறுக்கியது)

கொத்தமல்லி           –        சிறிது

நல்லெண்ணெய்        –    ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு                   –        தேவைக்கு

செய்முறை வாழைப் பூவை சுத்தம் செய்து நறுக்கி மோரில் போடவும். குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், இஞ்சி துருவல் சேர்த்து தாளித்து, அதனுடன் வெட்டி வைத்துள்ள வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

பின், வாழைப்பூவையும் சேர்த்து வதக்கி கொள்ளவும். நீரில் ஊற வைத்த அரிசியையும், பாசிபருப்பையும் சேர்த்து கிளறி, இதனுடன் சிறிது உப்பையும், தேவையான தண்ணீரையும் சேர்த்து இரண்டு விசில் வந்த பிறகு இறக்கி அதன் மீது கொத்தமல்லித் தழையை தூவி பரிமாறலாம்.

ஆரோக்கியமான வாழைப்பூ கஞ்சி தயார். வாரத்திற்கு ஒரு முறை இந்த கஞ்சியை குடித்து வந்தாலே போதும், எப்போதும் ஆரோக்கியத்துடன் இருக்கலாம். 


Spread the love