மருந்தாக வாழைப்பூ

Spread the love

வாழைப்பூ நீண்ட காலம் வாழ வைக்கும் ஓர் அற்புத மருத்துவ குணம் நிறைந்த பூவாகும். வாழை மரத்தின் பூ, இலை, காய், பழம், தண்டு என அனைத்துமே நமக்கு மிகுந்த பயனளிக்கக் கூடியதாகும்.

வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தாமிரச்சத்து முதலிய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் சி போன்ற உயிர்ச்சத்துக்களும் இதில் அடங்கியுள்ளது.

வாழைப்பூவினை பொரியலாகவோ அல்லது பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து சாப்பிடலாம். இதன் மகத்துவங்கள் பற்றிப் பார்க்கலாம்.

வாழைப்பூவின் மருத்துவ பயன்கள்

வயிற்றுக் கடுப்பு நீங்க

ஒரு பாத்திரத்தில் வாழைப்பூ, சீரகம், மிளகுத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டவும். பின் வடிகட்டிய நீரை இளஞ்சூட்டுடன் அருந்தி வர வயிற்று கடுப்பு நீங்கும்.

மாதவிலக்கு காலங்களில்

வாழைப்பூ பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகச்சிறந்த மருந்தாகும். இது மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் அதிக உதிரப்போக்கினை குணப்படுத்த பெரிதும் உதவுகிறது.

வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து அதனுடன் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்  பனங்கற்கண்டு கலந்து அருந்தி வர இரத்தப்போக்கு கட்டுப்பட்டு உடல் அசதி வயிறு வலி, சூதக வலி குறையும்.

வாழைப்பூவினை தயிர் சேர்த்து பெண்களுக்கு கொடுத்து வர சூதக வயிற்றுவலி, பெரும்பாடு நீங்கும்.

இரத்த மூலம் நீங்க

மலம் கழிக்கும் போது இரத்தமும் சேர்ந்து வெளியேறுவது இரத்த மூலம் ஆகும். இதனை குணப்படுத்த வாரத்திற்கு இரு முறை வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவை நல்ல பலன் தரும்.

வாழைப்பூவை தொடர்ந்து உண்டு வர இரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

பற்கள் ஆரோக்கியத்திற்கு

வாய் துர்நாற்றம் பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பூவை அடிக்கடி சமைத்து உண்டு வர நல்ல பலனை காணலாம். மேலும் ஈறுகளில் வீக்கம், சொத்தை பல், ஈறுகளில் இரத்தம் வடிதல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் வாரத்தில் ஒருமுறையேனும் வாழைப்பூவை சமைத்து உண்ணலாம்.

உடல் சூடு நீங்க

இயற்கையாகவே அதிக சூடு உள்ள உடல் அமைப்பு உள்ளவர்கள், வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து நன்கு கடைந்து அதனுடன் நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்ணலாம். இதனால் உடல் சூடு நீங்கும்.

கண்களின் ஆரோக்கியத்திற்கு

வாழைப்பூவில் வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. இது கண்களில் உள்ள கருவிழியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கண்களில் புரை ஏற்படுவதை தடுக்கிறது.

உடல் எடை அதிகரிக்க

வாழைப்பூவில் கொழுப்புச் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால் உடல் எடையை அதிகரிக்க விரும்புவர்கள் இதனை பொரியலாக சமைத்து உண்ணலாம்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு

கர்ப்பிணிப் பெண்கள் பலருக்கு காலையில் தூங்கி எழுந்ததும், வாந்தி,  தலைசுற்றல், உடல் மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இதிலிருந்து விடுபட  வாழைப்பூ மிகச் சிறந்த உணவாகும். இதனை பொரியலாகச் சமைத்து  உண்ணலாம்.

வாழைப்பூவை மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது தொடர்ந்து உண்டு வர மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பேறு உண்டாகும். நீரழிவு நோய் கட்டுப்படும்.

வாழைப்பூ பொரியல்

தேவையான பொருட்கள்

வாழைப்பூ            –          2

மோர்                –          2 டேபிள் ஸ்பூன்

பெரிய வெங்காயம்    –          1

பச்சை மிளகாய்       –          2

துவரம் பருப்பு        –          50 கிராம்

தேங்காய் துருவல்    –          2 டேபிள் ஸ்பூன்

கடுகு                –          ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள்          –          அரை டீஸ்பூன்

நல்லெண்ணெய்       –          2 டீஸ்பூன்

தேவையான அளவு உப்பு

செய்முறை

முதலில் வாழைப்பூவின் நடுவில் உள்ள நரம்புகளை நீக்கி நன்கு சுத்தம் செய்து அதனை மோர் கலந்த நீரில் ஊற வைக்கவும். பின் துவரம் பருப்பை மஞ்சள் சேர்த்து தனியாக வேக வைக்கவும்.

பச்சை மிளகாயை வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கவும். வாழைப்பூவினை பொடியாக நறுக்கி வேக வைத்து, தண்ணீர் வடித்து தனியாக பாத்திரத்தில் வைக்கவும்.

கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெங்காயம் சேர்த்து நன்கு தாளிக்கவும். பின் வாழைப்பூ, தேங்காய் துருவல், வேக வைத்த பருப்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து  நன்கு கிளறவும். சிறிது நேரம் வேக வைத்தப்பின்  இறக்கவும்.சுவையான வாழைப்பூ பொரியல் தயார்.

குறிப்பு

வாழைப்பூவை சமையலுக்கு தயார் செய்யும் முன் ஒவ்வொரு பூவின் நடுவில் இருக்கும் காம்பு போன்ற காளான்களை நீக்குதல் வேண்டும்.

வாழையடி வாழையாக என்பது போல வாழைப்பூவை உண்டு நல்வாழ்வு வாழ்வோம்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love