வஸ்தி மருத்துவ எனிமா சிகிச்சை

Spread the love

ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் பஞ்சகர்மா முக்கியமானது. அதன் ஒரு அங்கமான “வஸ்தி” ஒரு அற்புதமான சிகிச்சை. பல வாத கோளாறுகளுக்கு வஸ்தி சிகிச்சை சரியான நிவாரணம் அளிக்கும் என்கிறார் சரகர்.

வஸ்தி என்றால் ‘சிறுநீர்ப்பை’ என்று பொருள். பழங்கால வைத்தியத்தில், “எனிமா” கொடுக்க பசுமாடு / எருமை மாட்டின் சிறுநீர்ப்பைகள் பயன்படுத்தப்பட்டன. இவற்றில் மருத்துவ திரவங்களை நிரப்பி எனிமா கொடுக்கப்பட்டது. எனவே எனிமா சிகிச்சை “வஸ்தி” என்ற பெயரை பெற்றது. தற்போது மாடுகளின் சிறுநீர்பைகளை உபயோகிப்பதில்லை. எனிமா கொடுக்க நவீன உபகரணங்கள் வந்துவிட்டன.

ஆயுர்வேத சிகிச்சையின் முதல்படி நோயாளிகளின் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப் பொருட்கள், கழிவுகள் முதலியனவற்றை உடலிலிருந்து வெளியேற்றுவதுதான். வஸ்தி சிகிச்சையில், மூலிகை கலவைகள், நல்லெண்ணை முதலியன ஆசன வாய் வழியே திரவ ரூபத்தில், நோயாளிக்கு செலுத்தப்படும். சில பிரத்யேக வஸ்தி சிகிச்சையில் ஆண், பெண் பிறப்புறுகளின் வழியேவும், மூலிகை திரவம், செலுத்தப்படும் உடலில் வாதத்தின் இருப்பிடம் பெருங்கடலின் முன் பகுதியான “கோலன்” மற்றும் எலும்புதிசுக்கள். வாதம் தான் கழிவுப் பொருட்களான மலம், சிறுநீர் பித்தநீர் முதலியவற்றை வெளியேற்ற உதவுகிறது. வாததோஷம் ஏற்பட்டால் கழிவுப்பொருட்கள் உடலில் தேங்கிவிடும். மூட்டுவலி, மூட்டுக்கோளாறுகளான ஆர்த்தரைட்டீஸ், ருமாடிஸம், கவுட், தசை இழுப்புகள் முதலிய வாதக்கோளாறுகளுக்கு வஸ்தி சிகிச்சை சிறந்தது.

வஸ்தி சிகிச்சையின் வகைகள்

1. எண்ணை வஸ்தி (அணு வாசனம்) வாதக்கோளாறுகளுக்கு (அதிகபசி, உடல் வறட்சி போன்றவை) சரியான சிகிச்சை முறை எண்ணை வஸ்தி. மூலிகை பொருட்களால் தயாரிக்கப்பட்ட தைலத்தை பீச்சாங்குழல் போன்ற கருவியினால் (அ) வஸ்திநேத்ரா ஆசன துவாரம் வழியே செலுத்தப்படும். கஷாயவஸ்திக்கு பயன்படுத்தும் பொருட்களையே, வாதத்தை நீக்கும் எண்ணெய் வஸ்திக்கும் பயன்படுத்த வேண்டும். இதை செய்வதற்கு முன் வயிற்றையும், சிறு நீர்ப்பையையும் “காலி” செய்ய வேண்டும். உணவு உண்டபின் 4 (அ) 6 மணி நேரம் கழித்து செய்ய வேண்டும். உட்செலுத்தப்பட்ட தைலம் 24 மணி நேரம் உடலில் தங்கினால் நல்லது. செலுத்தப்பட்ட மூலிகை திரவம் வெளியே வராமலிருக்க தடித்த அட்டை (ஸிணீபீ) உபயோகிக்கலாம்.

2. கஷாய வஸ்தி இதில் மூலிகை பொருட்களால் கஷாயம் செய்து, வஸ்திநேத்ரா (அ) பீச்சாங்குழல் கிருவியினால் ஆசனதுவாரம் வழியே செலுத்தப்படும். நரம்பு தளர்ச்சி, வாதத்தால் உருவாகும் வயிற்றுக்கோளாறுகள், மூட்டுவலிகள் முதலியவற்றுக்கு ஏற்ற சிகிச்சை.

கஷாய வஸ்திக்கு பயன்படும் பொருட்கள்:-

பாதிரி முன்னை, வில்வம், கொன்னை, குமிழ், மூவிலை, ஓரிலை, கண்டங்கத்தரி, சிற்றாமுட்டி, நெருஞ்சில், முள்ளங்கத்திரி, ஆமணக்கு, சாரடை, யவம் எனும் தானியத்தின் அரிசி, கொள்ளு, இலந்தை, சீந்தில்கொடி, மருக்காறைக்காய், புரசு, காவட்டம்புல், எண்ணெய்கள், உப்புகள் என இம்மருந்துப் பொருட்கள், மேல்நோக்கிச் செல்லும் வாதநோய், மலக்கட்டு இவற்றைப் போக்கக் கொடுக்கும் கஷாய வஸ்திக்குப் பயன்படுகின்றன.

3. உதர வஸ்தி:- சிறுநீர் எரிச்சல், சிறுநீர்ப்பை தொற்று, ஆணின் விந்து கோளாறுகள், பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் முதலியவற்றுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட மூலிகைகளின் திரவம், ஆண் / பெண் பிறப்புறுகளின் வழியே பிரத்யேக கருவியினால் செலுத்தப்படும்.

4. மாத்ரவஸ்தி:- இதில் எனிமா மூலிகைகளின் திரவம், குறைந்த அளவிலேயே கொடுக்கப்படும். உடல் இளைத்தவர்களுக்கு ஏற்றது. அதிக அளவில் உடற்பயிற்சி, உடலுறவு, நடப்பது, ஓடுவது போன்ற செயல்களால் மெலிந்து நலிந்து போனவர்களுக்கு மாத்ரவஸ்தி பயனளிக்கும்.

மேலே குறிப்பிட்ட வஸ்திகளை தவிர சினேகவஸ்தி, மற்றும் போஷாக்கு அளிக்கும் வஸ்திகளும் செய்யப்படுகின்றன.

சரகசம்ஹிதையில், மேற்கண்ட வஸ்தி முறைகளை திருப்பி திருப்பி செய்ய வேண்டிய நியமங்களை மூன்று வகையாக சொல்கிறது.

1.            யோக வஸ்தி – எண்ணெய் பசையுள்ள அனுவாசன வஸ்தியிலிருந்து ஆரம்பித்து மூன்று கஷாயவஸ்தி, மூன்று அனுவாசவஸ்தி இவைகளை ஒன்றுவிட்டு ஒருநாள் செய்து, அனுவாசன வஸ்தியில் முடிப்பது. (மொத்தம் 8 வஸ்திகள்)

2.            காலா வஸ்தி :- மொத்தம் 16 வஸ்திகள் – 10 எண்ணை வஸ்திகள், 6 கஷாய வஸ்திகள். அனுவாசவஸ்தியில் தொடங்கி, கஷாய வஸ்தியில் தொடர்ந்து,  நாட்களில் செய்து, கடைசி நான்கு நாட்களில் அனுவாச வஸ்தியில் முடிப்பது.

3. கர்ம வஸ்தி :- இது மொத்தம் 30 வஸ்திகள் செய்யும் வகை. அனுவாசத்தில் ஆரம்பித்து, கஷாயவஸ்தியில் தொடர்ந்து நடுநடுவில் மாற்று நாட்களில் இவைகளை மாற்றிசெய்து, அனுவாச வஸ்தியில் முடிப்பது.

வஸ்தி சிகிச்சை செய்யப்பட வேண்டிய அறிகுறிகள்

1.            மலச்சிக்கல், வாத வயிற்றுக்கோளாறுகள், பசியின்மை

2.            ஆமவாதம், ஆர்த்தரைடீஸ், கவுட், பின் முதுகு வலி முதலியன

3.            நரம்புத்தளர்ச்சி, நரம்பு சம்மந்தப்பட்ட நோய்கள்.

4.            இளைத்த சரீரம், குறைந்த உடல்எடை

5.            வாத தலைவலி

6.            தசை இழப்பு, இறக்கம்

வஸ்தி சிகிச்சை செய்யக்கூடாத நிலைகள்

•             பேதி, நீரிழிவு, மஞ்சள்காமாலை, ஜூரம், சோகை, மூலநோய் இருக்கும் நபர்கள் வஸ்தி சிகிச்சை செய்து கொள்ளக் கூடாது.

•             கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இவர்களுக்கு வஸ்தி சிகிச்சை கூடாது.

•             உடலுறவுக்கு பின் கூடாது.

வஸ்தி சிகிச்சை தேர்ச்சி பெற்ற வைத்தியரிடம் செய்து கொள்ள வேண்டும். முழுமையாக செய்யாவிட்டால் இடுப்பு வலி, குதத்தில் எரிச்சல், மல ஜலங்கள் வெளியேறாமல் தேங்கிவிடுவது முதலிய விளைவுகள் ஏற்படும். தேவைக்கு அதிகமாக “வஸ்தி” சிகிச்சை செய்தால் தசை சுளுக்குகள், மூலம், பலவீனம் முதலியன ஏற்படும்.

வஸ்தி சிகிச்சைக்கு பிறகு

•             வஸ்தி சிகிச்சை செய்த நாளில், லேசான உணவை உட்கொள்ளவும்.

•             நீண்ட நேரம் உட்காரவோ நிற்கவோ கூடாது.

•             உடலுறவை தவிர்க்கவும்.

•             இயற்கை வேகங்களை அடக்க வேண்டாம்.

•             வெளியே பயணம் செய்வதை தவிர்க்கவும்.


Spread the love