ஓரிரு தலைமுறைக்கு முன்னர் சூரிய அஸ்தமனத்திற்குப்பின் வசம்பை பெயர் சொல்ல மாட்டார்கள். பிள்ளை வளர்த்தான் என்பார்கள். மலைப் பகுதியில் அதிகம் வளரும் இது தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, போன்ற மாநிலங்களில் அதிகம் தென்படுகிறது. பொதுவாக நம் நாட்டில் பெரும்பாலான இடங்களில் காணப்படுகிறது.
இதன் மருத்துவ குணங்கள் ஏராளம். அதிக வாசனை தரக்கூடியது, புத்திக் கூர்மை, ஞாபக சக்தி போன்ற திறமைகளை பெருக்கக் கூடியது. ஜீரண சக்தியை மேம்படுத்தும் தன்மையுடையது. நாக்கை நன்கு வளைந்து புரளவைக்கும், நன்றாக சொற்கள் வெளிப்படும். வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு, வயிற்றில் ஏற்படும் வலி, வலிப்பு நோய், தலைவலி, புண், காயம், மூலம், அமிலத்தால் ஏற்படும் வாய்வுத் தொல்லை, இதயம், கண், காது, வாய் சம்பந்தப்பட்ட நோய்களை போக்க வல்லது. குழந்தைகளைத் தாக்கும் சுரம், இருமல், ஆஸ்துமா, ப்ராங்கைடிஸ், ஹிஸ்டிரியா, வாத நோய்கள், போன்றவைகளுக்கு நிவாரணம் தரும். இதனை அரைத்து நெய்யில் சேர்த்து குழந்தை பிறந்தவுடன் தந்தால் அதன் புத்திக் கூர்மை பலப்படுமெனப்படுகிறது.
இரண்டு சென்டிமீட்டர் குறுக்களவு கொண்ட வேரான இது வாசனையைத் தரவல்லது. இதனை வெட்டும்பொழுது உட்புறம் வெண்மையாகயிருக்கும். இரண்டு மீட்டர் உயரம் வரை வளரும் இந்த புல்லினம் பழைய இலைகளுடன் செதில்கள் போல் வெளிப்புறத்தில் காணப்படும். உயர்ந்து வளர்ந்து நல்ல வேர்களைக் கொண்டிருக்கும். கணுக்களில் ‘க்ஷி’ போன்ற அமைப்பு தென்படும். பூக்கள் ஆண், பெண் என இரண்டு இனத்தையும் கொண்டதாகும். சிறிய பூக்கள் வெளிர் பழுப்பு நிறத்தில், நிமிர்ந்த தண்டுகளில் இருக்கும். இது சதுப்பு நிலங்களில் வளரக்கூடியது.
இது தோல் உரித்து, துண்டுகள் போட்டு விற்கப்படுகிறது. வியாபார நோக்கில் விற்கப்படும் வசம்பு கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம்.