நாம் ஆரோக்கிய வாழ்வு வாழ இயற்கை நமக்கு அளித்திருக்கும் மூலிகை கொடைகள் ஏராளம். அவற்றுள் ஒன்றுதான் வல்லாரை. ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட இந்த மூலிகை, ஞாபக சக்தியை தூண்டுவதில் தன்னிரகற்றது. அதனால் இதை சரஸ்வதி மூலிகை என்றும் அழைக்கின்றனர்.
வல்லாரையின் மருத்துவ குணங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்..
சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படாதவர்கள் ரொம்ப குறைவு என்றாகி விட்டது. சர்க்கரை நோயாளிகள் வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. வல்லாரைக்கு மலச் சிக்கலைப் போக்குவதோடு, வயிற்றுப் புண், குடல்புண்ணையும் ஆற்றுகிறது. வல்லாரை கீரையை நிழலில் உலர்த்திப் பொடித்து, பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்துபோகும்.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு ஞாபக மறதியால் பிரச்னை ஏற்படலாம். அதற்கு அருமருந்து வல்லாரை. இதன் இலையை சுத்தம் செய்து, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து அரைத்து 48 நாட்கள் கொடுத்து வந்தால், மாணவ, மாணவியருக்கு ஏற்படும் மூளைச் சோர்வை நீக்கி, ஞாபக மறதி பிரச்னையை தீர்க்கும்.
வல்லாரை கீரையுடன் சம அளவு கீழா நெல்லி இலை சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நீர் கடுப்பு நீங்கும். வல்லாரைக்கு ரத்த சோகையைப் போக்கும் குணமுண்டு. அதோடு ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையையும் அதிகரிக்கச் செய்யும்.
பல்லுக்கும் நல்லது வல்லாரை. இதன் இலையைப் பொடி செய்து பல் துலக்கினால் பல்லில் உள்ள கறைகள் நீங்குவதோடு, பல் மற்றும் ஈறும் பலமாகும்.
வல்லாரை எண்ணெயை, தினமும் தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும். அதோடு உடல் எரிச்சல் நீங்கும். வல்லாரை கீரையை உணவில் சேர்த்து வந்தால் கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் போன்றவை நீங்குவதோடு, கண் நரம்புகளுக்கும் நன்மை பயக்கும். இளைப்பு, இருமல், தொண்டைக்கட்டு போன்றவற்றுக்கு வல்லாரை மூலிகை நல்ல நிவாரணமளிக்கும்.