பிணிதீர்க்கும் ஆலயங்கள்

Spread the love

நமது தேச நாகரீகம் தொன்றுதொட்டு இறை நெறியை ஆதாரமாக கொண்டது. நமது சங்கீதம், இலக்கியம் இவை எல்லாமே ஆன்மீகத்தை அடிப்படையாக கொண்டவை. சமூகக் கதைகளும் இல்லாமல் இல்லை, ஆனால் இவை பிற்காலத்தில் எழுதப்பட்டவை.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது வழக்கு. உடலை பாதிக்கும் நோய்களால், உள்ளம் பாதிக்கப்படாமல் உதவுவது கோயில்கள். நமது வீடுகளில் யாருக்காவது நோய்வந்தால், உடனே இறைவனுக்கு ஒரு ரூபாயாவது வைத்து வேண்டிக்கொள்வது மரபு. மனோரீதியாக இது ஒரு நல்ல வழக்கம்.

தமிழ் நாட்டில் உள்ள கோயில்கள் ஏராளம். ஒவ்வொன்றும் ஒரு தனித்துவம் வாய்ந்தவை. அவற்றில் சில கோயில்கள் நோய்நொடியை தீர்க்கும் ‘ஸ்பெஷல்’ கோயில்கள். அவற்றில் முக்கியமானது சோழ நாட்டின் வைத்தீஸ்வரர் கோயில்

திருத்தல குறிப்புகள்

கோயிலின் திரு நாமம்:- அருள் மிகு வைத்தீஸ்வரர் கோயில்

மூலவர்                             : ஸ்ரீ வைத்தியநாத சுவாமி

தாயார்                              : ஸ்ரீ தையல் நாயகி

ஸ்தல விருக்ஷம்            : வேப்பமரம் தீர்த்தம்.

திருத்தலத்தின் இதர பெயர்கள்: புள்ளிருக்கு வேளூர், வேத புரி, அங்காரக புரம், அம்பிகாபுரம்

மூலவரின் சிறப்பு அம்சம் : மூலவர் சுயம்பு லிங்க வடிவில் எழுந்தருளியிருக்கிறார்.

ஸ்தல புராணம்:-

பெயருக்கு ஏற்ப பல தீராத நோய்களை தீர்க்கும் புண்ணிய ஸ்தலம் கைலாயத்திலிருந்து சிவபெருமானே, பார்வதியுடன் வைத்தியாராக இந்த ஸ்தலத்தின் வேப்பமரத்தடிக்கு எழுந்தருளினார். என்பது ஐதிகம். சிவபெருமான் ‘அமிர்த சஞ்சிவினி’ மருந்தையும், பார்வதிதேவி மூலிகை சத்திகளுடைய தைலம், வில்வ மரத்தடி மண் அடங்கிய கலசத்தையும் கூடவே கொண்டு வந்தனர். தாயாரின் பெயர் முதலில் “தைல நாயகி” என்றிருந்து பிறகு தையல் நாயகியாக மருவியிருக்கலாம். இந்த திருக்கோயிலில் சிவபெருமான், பார்வதி தேவி தவிர ‘செல்வ முத்துக்குமாரசாமி’ என்ற பெயருடன் முருகப்பெருமானும், நவக்கிரகங்களில் ஒருவரான அங்காரக பகவானும் (செவ்வாய்) எழுந்தருளியுள்ளனர். முருகப்பெருமான் தனது இரு தேவியருடன் காட்சி அருளுகிறார் இவரின் தனிச்சந்நிதியில் சிறப்பு பூஜைகளும், அபிஷேகம், அலங்காரங்களும் நடைபெற்ற வண்ணம் இருக்கும். குறிப்பாக கார்த்திகை மாதங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் முருகப்பெருமானுக்கு அர்த்த ஜாம பூஜை நடத்தி அவரை தூங்க வைத்த பின்னரே, பெற்றோரான சிவ-பார்வதி தூங்கச்செல்வார்கள்!

அங்காரகரின் தோற்றத்தைப் பற்றி பல கதைகள் உள்ளன. சக்தியை பிரிந்து தனியாக இருந்த போது சிவ பெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தெறித்த நீர்த்துளி தான் அங்காரகனாக மாறியது என்று ஒரு கதை. சிவ கணங்களில் ஒருவராக உருவாக்கப்பட்ட வீரபத்திரர் தான் அங்காரகனாக ஆனார். என்பதும் ஒரு கதை. அக்னி பகவானுக்கும் விகேசிக்கும் பிறந்தவர் தான் அங்காரகன் என்றும் சொல்லப்படுகிறது.

அங்காரகனின் இன்னொரு பெயர் செவ்வாய்: செவ்வாய் தோஷமுள்ள பெண்களுக்கு திருமணமாவது கடினம். தோஷமுள்ள பெண்கள் இந்த திருத்தலத்தில் வந்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் உடனே விலகும்.

அங்காரகனுக்கே சர்ம நோய் பிடித்து வாட்டிய போது, இந்த திருத்தலத்திககு வந்து தீர்த்தமாடி 45 நாட்கள் வழிபட, ஈசனின் அருளால் நோய் குணமானது. இதனால் அங்காரகன், “இந்த தலத்தின் தீர்த்தங்களில் செவ்வாய்க் கிழமைகளில் நீராடி வழிபடுவர்களின் அனைத்து நோய்களையும் போக்கி அருள வேண்டும்” என்று ஈசனிடம் வேண்ட, அவரும் அவ்வாறே ஆகட்டும் என்று வரமளித்தார்.

தீர்க்கும் பிணிகள்:-

தீராத 4448 நோய்களை தீர்க்க வல்ல ஸ்தலம் அருள்மிகு வைத்தீஸ்வரர் கோயில் என்று கருதப்படுகிறது.

செவ்வாய் தோஷம் நீங்கி, திருமணங்கள் கை கூடும்.

சர்ம நோய்கள் தீரும்.

பிணி விலக வழிபடும் முறைகள்

சுக்ல பட்சத்தில் நல்ல நாளில் கோயிலில் உள்ள அங்கசந்தானம் என்ற குளத்தில் நீராடி, அதிலிருந்து மண்ணை புதுப்பாத்திரத்தில் எடுத்து வர வேண்டும். இந்த மண்ணை, தாயாரின் சந்நிதிக்கு அருகே உள்ள புனித சித்தாமிர்த தீர்த்தத்திலிருந்து ‘நீரெடுத்து மூலவர் / தாயார் சந்நிதியிலிருந்து வீபூதியையும் கலந்து உளுந்து அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். உருண்டைகளை உருட்டும் போது, “ஒம் நமச்சிவாய” என்று ஜெபிக்க வேண்டும். பிறகு உருண்டைகளை தாயார் தையல் நாயகியின் திருவடிகளில் வைத்து அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். மூலவரையும் தாயாரையும் பிறகு சேவித்து அர்ச்சித்த உருண்டைகளை சாப்பிட்டு வர நோய்கள் குணமாகும்.

முருகப்பெருமானுக்கு கிருத்திகை நாளில் நடைபெறும் சந்தன அபிஷேகம் சிறப்பானது. இந்த சந்தக் குழம்பை பருகினால் மகப்பேறு உண்டாகும். அர்த்த ஜாம பூஜையில் வாசனை திரவியங்களுடன் சேர்த்து நேத்திரப்பிடி சந்தன அபிஷேகம் நடக்கும். இந்த நேத்திரப்பிடி சந்தனம் நேத்திரங்களை (கண்களை) காட்டும். கண்பார்வையை மேம்படுத்தும். பல நோய்களை தீர்க்கும்.

இந்த திருத்தலம் சீர்காழியிலிருந்து 5 A.e, மயிலாடு துறையிலிருந்து 13 A.e. தொலைவிலும் உள்ளது.


Spread the love